காமராசர் ஒரு மாணவரால் தோற்கடிக்கப்பது ஏன்? | Why kamarajar lost in Tamilnadu assembly election?
பாமரன் கருத்து
இன்றுவரை தமிழக அரசியலில் மக்களை நோக்கி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது “காமராஜரை தோற்கடித்த மண் தானே ” என்பதுதான் . நல்ல அரசியல்வாதி என்றால் உதாரணத்திற்கு காமராஜரை தவிர வேறு ஆள் இல்லை , ஆனாலும் அவர் தோற்கடிக்கப்பட்டார் என்றால் அதற்கு காரணம் இல்லாமலா இருக்கும் ? அதைத்தான் தற்போது பார்க்க இருக்கின்றோம் .
முக்கிய காரணங்களாக நான் கருதுவது
இந்தி எதிர்ப்பு போராட்டம்
ரேஷன் பொருள்களை நிறுத்தியது
ஆக்டிவ் அரசியலில் இல்லாமல் போனது
MGR சுடப்பட்ட அனுதாப அலை
கல்வித்தந்தை காமராஜர்
காமராசர் என்கிற 6 அடி மாமனிதன் தான் கற்கவில்லையென்றாலும் கூட தன்னுடய மக்கள் உயருவதற்கு “கல்வி கற்பது ஒன்றே வழி” என்பதனை நன்றாக உணர்ந்திருந்தார் .
இதற்காக பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்டவர்கள் குறிப்பிட்ட படிப்பை மட்டும் படிப்பதற்கு வழிவகை செய்யும் முறையை ஒழித்து , எவரும் விரும்பியதை படிக்கும் பள்ளிக்கூட படிப்பை அறிமுகப்படுத்தினார் . இதில் தான் மதியவேளையில் மாணவர்களுக்கு உணவு அளித்து கல்வியும் கொடுக்கப்பட்டது .
இதுதவிர மூன்று கிலோமீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடம் போன்ற பல திட்டங்களில் மக்களிடம் கல்வியை கொண்டு சேர்ப்பதற்க்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தார் .
தன்னால் இயன்றதற்கும் அதிகமாகவே காமராசர் தமிழக மக்களின் நலனுக்காகவும் உழைத்திருக்கிறார் . அடுத்த காங்கிரஸ் தலைவர் யாரென தேர்ந்தெடுக்கும் அளவிற்கு இந்திய அளவில் அதிகாரமிக்கவராக இருந்திருக்கின்றார் .
பிறகு எதற்கு காமராசர் தேர்தலில் தோல்வியை தழுவினார் ? இந்த கேள்விக்கான பதில் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டியது மிகச்சிறந்த அரசியல் பாடத்தை உங்களுக்கு தரும் .
இந்தி எதிர்ப்பு இயக்கம்
அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக காமராசர் வலம் வந்தார் . அந்த தருணத்தில் பெரியார் அவர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரிப்பதை காமராசர் அறிந்திருந்தார் . தமிழர் நலன் , சாதிய எதிர்ப்பு ,இந்தி திணிப்பு எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என அதிரடி காட்டிய பெரியாரும் அவரது இயக்கமும் தமிழகத்தில் பெரும் ஆலமரமாய் வளரத்துவங்கி இருந்தனர் .
ஒருபக்கம் தமிழக மக்கள் இந்தி கற்காமல் போவது இந்தியாவில் இருந்தே அவர்களை அற்றுப்போக
செய்துவிடலாம் என அஞ்சினார் காமராசர் . இதற்காக காமராசர் இந்தியை எதிர்க்கவில்லை . ஆனால் மறுபக்கமிருந்த பெரியார் தலைமையிலான திராவிட இயக்கமும் சரி , அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகமும் சரி , இந்தி தமிழகத்தில் திணிக்கப்படுவதை எதிர்த்து கடுமையாக போராடினார்கள் .
உயிர் இழப்புகள் , பெரும் போராட்டம் என இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் பெரும் போராட்டமாக வளர்ந்தது .
ஆண்டு நடந்த தேர்தலில் அப்போது காமராசரை வென்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய கொள்கையே “இந்தி எதிர்ப்புதான்”
இந்தி எதிர்ப்பு மட்டுமே போதாது என நினைத்த திமுக , முன்னால் காங்கிரஸ் தலைவரான ராஜாஜி தலைமையிலான அமைப்புடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது . இந்த தேர்தலில் தான் விருதுநகர் இல் காமராசரை கல்லூரி மாணவரான சீனிவாசன் வென்றார் .
46.1 சதவிகித வாக்குகளை பெற்ற திமுக காங்கிரசை தோற்கடித்தது
பிற முக்கிய காரணங்கள்
காமராஜர் அண்ணாச்சி கடலை பருப்பு விலை என்னாச்சு? பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி?
தமிழகத்தில் அப்போது பக்தவத்சலம் தலைமையிலான அரசு ஆட்சி நடத்தியது . அப்போது இந்தியாவின் பணவீக்கவிகிதம் குறைந்து போனதால் அரிசி மற்றும் டால் போன்றவற்றின் விலை உயர்ந்தது . இதனால் நியாயவிலை கடைகளுக்கு வழங்கும் பொருள்களை நிறுத்தியது .
காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுக்க இதுவும் ஒரு காரணம் .
அரசியலில் ஆக்டிவாக இல்லாத காமராசர்
1963 இல் மீண்டும் காங்கிரஸ் வென்ற தருணம், காமராஜருக்கு முதல்வர் பதவி காத்திருந்தது. நேரு அவர்களின் உடல்நிலையில் குறைபாடுகள் தொடங்கியிருந்த நிலை . காங்கிரஸ் கட்சிக்கு அதனுடைய தலைவர்களின் உழைப்பு தேவைப்பட்ட நேரம் . தானும் அடுத்தடுத்து பதவிக்கு வந்து அதனால் ஏற்படும் பேச்சுக்களை தவிர்க்க விரும்பினார் . ஆகையால் முன்னோடியாக தானே தன்னுடய பதவியை விட்டு விலகி அடுத்தவருக்கு வழங்கிட முன்வந்தார் . இதனால் அவர் ஆக்டிவாக அரசியலில் இருக்க இயலவில்லை .
MGR என்னும் ஆளுமையின் தாக்கம்
திமுகவின் மிகப்பெரிய பலமாக MGR இருந்தார் . தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பாக துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . அந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது .
தனிமனிதன் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பது இல்லை
அரசியலில் வெற்றி தோல்வியென்பது நிச்சயமில்லை என்பது எப்படி உண்மையோ அதனைபோலவே தனிமனிதர்கள் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பது இல்லை .
அப்போதைய நிலைப்பாடுகளும் சூழ்நிலைகளும் கொள்கைகளும் தான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கின்றன .
ஆகவே ஏதோ தமிழக மக்கள் தான் காமராசரை தோற்கடித்ததை போன்று குறைகூறுதல் மிகவும் தவறானது .