எங்கே செல்ல வேண்டும் என முடிவு செய்யாமல் மேற்கொள்கின்ற ஒரு பயணத்தில் நாம் போக வேண்டிய இடத்தை எப்படி அடைய முடியாதோ அதைப்போலவே தான் “குறிக்கோள்” இல்லாமல் நாம் செய்கின்ற முயற்சியின் மூலமாக ஒருபோதும் வெற்றியை அடையவே முடியாது.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு இலக்கை வெற்றிகரமாக அடையவே விரும்புகிறோம். ஆனால் பலர் இந்த முயற்சியில் தோற்றுக்கொண்டே தான் இருக்கிறார்கள். இலக்கை அடைந்தவர்களையும் இலக்கை அடைய முடியாதவர்களையும் நாம் ஒப்பிட்டுப்பார்த்தால் இருவருக்கும் இடையில் இருக்கும் அடிப்படை வித்தியாசமே “குறிக்கோள் நிர்ணயம்” செய்வது சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும். இலக்கை அடைய முடியாதவர்களில் பலர் போராடி ஓய்ந்த பிறகு தான் அவர்களுடைய குறிக்கோளை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதற்குள் காலமும் வாய்ப்புகளும் கடந்தோடி அவர்களை தோற்றவர்களின் பட்டியலுக்குள் சென்று விடுகிறார்கள். இங்கே வெற்றி அடைய “குறிக்கோளை நிர்ணயிப்பது” ஏன் அவசியம் என்பது குறித்து விரிவாக பேசுவோம்.
குறிக்கோள் வாழ்க்கைக்கு ஏன் அவசியம்?
நான் மேலே சொன்னது போல குறிக்கோள் அற்றவர்களால் வெற்றியை பெற முடியாது. மனிதர்களின் மன நலன் சார்ந்து இயங்குகிறவர்கள் குறிக்கோளை மூன்றுவிதமாக பிரிக்கிறார்கள்.
> நான் அதை செய்து முடிக்க வேண்டும் [Mastery goals]
> நான் அவரைவிட சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் [Performance-approach goals]
> நான் அதை செய்துவிடவே கூடாது [Performance-avoidance goals]
நான் அதை செய்து முடிக்க வேண்டும் : நம்மில் பெரும்பாலானவர்கள் இந்த குறிக்கோளை நிச்சயமாக எடுத்திருப்போம். உதாரணத்திற்கு, நான் அடுத்த தேர்வில் இப்போதைய மதிப்பெண்ணை விட அதிகமாக வேண்டும் என்பது இதிலே வரும்.
நான் அவரைவிட சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் : ஏற்கனவே ஒருவர் குறிப்பிட்ட விசயத்தை செய்து முடித்திருக்கிறார். ஆனாலும் அவரைவிடவும் சிறப்பாக செய்து முடக்க வேண்டும் என்பதெல்லாம் இதற்குள் வரும்.
நான் அதை செய்துவிடவே கூடாது : குறிப்பிட்ட ஒரு விசயத்தை செய்தால் அது தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கலாம். ஆகவே, அதை செய்துவிடவே கூடாது என்று என்னும் விசயங்கள் இதற்குள் வரலாம்.
பணியிடத்தில் தனித்து தெரிய வேண்டுமா? இதை செய்து பாருங்கள்
குறிக்கோளை நிர்ணயிப்பது” ஏன் அவசியம்?
மேற்கூறிய வகைகளில் எந்த குறிக்கோளையாவது நீங்கள் அழுத்தம் திருத்தமாக கொண்டிருந்தால் அதனை அடைவதற்கான பயணத்தில் நீங்கள் வெற்றி பெற முடியும். இரண்டாம் மற்றும் மூன்றாம் குறிக்கோள்கள் நமது பண்பு நலன்கள் சார்ந்தவை. ஆகவே, நாம் பொதுவாக பேசுகிற சிகரத்தை அடைவதற்கான குறிக்கோள்கள் அனைத்தும் முதல் வகையிலேயே வரும்.
“எவர் ஒருவர் குறிக்கோளுடன் போராடுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார். ஏனெனில் தாம் எங்கு செல்கிறோம் என்று அவருக்குத் தெரியும்” – ஏர்ல் நைட்டிங்கேல்
குறிக்கோளை நிர்ணயித்து வெற்றி பெற்றவர்களில் எத்தனையோ பேரை நாம் உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த மகேந்திர சிங் தோனியை உதாரணமாக சொல்வது பொருத்தமானதாக இருக்கும். நீங்கள் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட திரைப்படத்தை கண்டிருப்பீர்கள். அதிலே இந்தியாவிற்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் வரைக்கும் தோனி பல்வேறு சவால்களை சந்தித்து இருப்பார். ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் ஆனால் போதும் என அவரது அப்பா நினைத்துக்கொண்டு இருக்கும் போது அவரோ தான் இந்திய நாட்டிற்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என குறிக்கோளை வைத்திருந்தார்.
அந்தக் குறிக்கோளில் அவர் உறுதியாக இருந்தபடியால் தான் தனக்கு ரயில்வே வேலை வேண்டாம் என்பதை தன்னுடைய அப்பாவிடம் வெளிப்டையாகச் சொல்லி பின்னர் உலகம் போற்றும் மாபெரும் கிரிக்கெட் வீரராக மாறினார் மகேந்திர சிங் தோனி. ஒருவேளை இந்திய அணிக்காக விளையாடியே தீர வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாவிடில் இந்நேரம் தோனி ஏதாவது ஒரு ரயிலில் டிக்கெட் பரிசோதனை செய்துகொண்டு இருந்திருப்பார்.
எங்கே போக வேண்டும் என்பதை உறுதி செய்த பின்பு பயணத்தை துவங்கினால் தான் அங்கே செல்ல என்ன வழி என்பதை உங்களால் முடிவு செய்து பயணத்தை ஆரம்பிக்க முடியும். எங்கே போக வேண்டும் என்பது தெரியாவிடில் நீங்கள் பயணம் செய்துகொண்டே இருக்க வேண்டியது தான். உங்களது வயது, பொருளாதார வசதி என அனைத்தும் வீணாகிய பின்பு நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்தும் பயனில்லை.
ஆகவே இன்றே “குறிக்கோளை தீர்மானியுங்கள்”.
தொடர்ச்சியாக “சுய முன்னேற்றம்” என்ற தலைப்பில் உங்களை ஊக்குவிக்கக்கூடிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். உங்களுடைய கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள். பாமரன் கருத்து [ஸ்ரீதரன் பாஸ்கரன்]