அண்மையில் திமுக செயல்தலைவர் “பிற மாநிலங்கள் திராவிட நாடு கோரிக்கையை முன்மொழிந்தால் திமுக அதனை ஆதரிக்கும் ” என ஒரு பேட்டியில் பதில் கூறியிருந்தார் . அதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் H ராஜா அவர்கள் ட்விட்டரில் அளித்துள்ள பதிலில் “திராவிட நாடு கேட்பது தண்டனைக்குரிய குற்றம் என்றவுடன் அதிக அதிகாரம்தான் கேட்கின்றோம் தனி நாடு கேட்கவில்லை என பின்வாங்கியவர்களை உலகறியும் என்றும் அந்த சட்டம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது எனவும் கூறினார் .
தற்போது இதுகுறித்து விவாதங்கள் , கருத்து பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன . உண்மையாலுமே அண்ணா சட்டத்திற்கு பயந்து பின்வாங்கினாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா ? உண்மையில் அப்போது நடந்ததுதான் என்ன என பார்ப்போம் .
இப்போது எதற்காக திராவிட நாடு கோரிக்கை எழுந்தது ?
தமிழகத்தில் ஆரம்பகாலங்களில் ஒலித்த திராவிட நாடு கோரிக்கை இப்போது மற்ற தென்மாநிலங்களில் இருந்து வர ஆரம்பித்துவிட்டன .
கேரளாவில் பசு பாதுகாவலர்களால் அரங்கேற்றப்பட்ட வன்முறைகளின்போது திராவிட நாடு கோரிக்கை எழுந்தது . தற்போது ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க மறுப்பதினால் எழுகின்றது . இதனைப்போலவே ஒவ்வொரு தென் மாநிலமும் பாதிப்படையும்போது திராவிட நாடு கோரிக்கையை எழுப்ப ஆரம்பித்து இருக்கின்றன .
அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை :
1940 களில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே பெரியாரால் எழுப்பப்பட்டதுதான் ‘திராவிட நாடு ‘ கோரிக்கை . சென்னை மாகாணத்தை திராவிட நாடாக்க முயன்றார் பெரியார் . அது பிறகு அண்ணாவின் திமுக வின் கொள்கையிலும் முக்கிய இடத்தை பிடித்தது .
“அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு ” என்கிற அண்ணாவின் முழக்கம் தமிழகமெங்கும் பரவி ஒலித்தது .
அண்ணா ஏன் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டார் ?
1962 இல் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு நடந்த மாநிலங்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அண்ணா மாநிலங்களவைக்கு சென்றார் . ஏற்கனவே திமுகவின் திராவிட நாடு கோரிக்கையால் எரிச்சலடைந்து இருந்த அப்போதைய பிரதமர் நேரு ” திமுக ஒரு பிரிவினைவாத கட்சி , அதன் தனி நாடு கோரிக்கையை ஒடுக்க யுத்தம் நடத்தினாலும் பரவாயில்லை” என நீண்டது அவர் பேச்சு . இதே காலகட்டத்தில் தான் சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்க ஆயத்தமாகி கொண்டிருந்தது .
நேருவின் இந்த ஆவேச பேச்சுக்கு மாநிலங்களவையில் இவ்வாறு பதில் அளித்தார் அண்ணா “இதனால் ஒரு போரே என்றாலும் அந்தப் போர் வரட்டும் என்று நேரு கூறியிருக்கிறார். இது மிகவும் அவசரமான, தெளிவற்ற பேச்சாகும், இத்தகைய கொடூரமான திசையில் நேருவின் சிந்தனை ஏன் திரும்பியது என்று தெரியவில்லை. இதுதான் கடைசி வார்த்தை. இதோடு இந்த விவகாரம் முடிந்துவிடும் என்று நேரு கருதுகிறாரா?
இந்தப் போர் முரசங்களைக் கேட்டு திமுக ஏமாந்துவிடாது. போர் என்பதே தேவையற்ற, அறவே வேண்டப்படாத இடத்தில் போரைப் பற்றி பேசுகிறார் நேரு. ஆனால், வெளிநாட்டுப் படை முற்றுகையிட்டு முன்னேறும்போது, சமாதானவாதியாக காட்சி அளிக்கிறார். எல்லாவற்றையும் தாமே செய்ய வேண்டும் என்ற சக்திக்கு மீறிய வகையில் முயல்வதால் ஏற்படும் குழப்பம் மிக்க சிந்தனையின் அறிகுறியே இது”
அண்ணாவின் இந்த தெளிவான பேச்சு, நேருவின் பேச்சை கிழித்தெறிந்தது. நேரு அதிர்ச்சியடைந்தார்.
திராவிடரியக்கம் – திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட நாடு தனி நாடாக ஆக வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருந்ததென்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத வரலாற்றைப் பேருண்மையாகும். 1962 சீனப் படையெடுப்பின்போது எழுந்த நிலவரம் காரணமாகப் பிரிவினைக் கோரிக்கையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கைவிட்டார்கள். அதே கால கட்டத்தில் பிரிவினைத் தடைச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. ‘வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுபத்து விடுவதாகும். நாம் அப்படி நடந்துகொண்டால் வருங்காலத்துத் தலைமுறை நம்மைச் சபிக்கும்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள், 1962 அக்டோபரில் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்தபோது தெரிவித்தார்கள்.
தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் நிதி திரட்டுவது , போர் குறித்து பேசுவது , திமுகவினரை ரத்த தானம் செய்ய சொல்வது என இந்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார் .
இவற்றை பார்க்கும்போது அண்ணாவிற்கு திராவிட நாடு பற்று இருந்ததும் , இந்தியாவிற்கு ஆபத்து என்னும் போது அதனை வலுவாக கொண்டிருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே ஆபத்து என உணர்ந்து இருந்ததும் தெரியவருகின்றது .
ஆகவே அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகளும் நாட்டு நடப்புகளும் இந்திய அரசின் செயல்பாடுகளும் கருத்தில் கொள்ளப்பட்டு திமுகவின் எதிர்கால நலனுக்காக அண்ணா அதனை கைவிட்டார் . இதில் அண்ணா பயந்தார் என சொல்வதில் அர்த்தம் ஏதுமில்லை .