திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இறந்தபிறகு அவருடைய சமாதிக்கு குடும்பத்தோடு அஞ்சலி செலுத்த வந்தார் அழகிரி அவர்கள் (அழகிரி நீக்கம் ஏன்?) . அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்திக்கும்போது “என்னுடைய குமுறல்களை கருணாநிதி அவர்களிடம் சொல்லிடத்தான் வந்தேன் , அவை குடும்பம் சார்ந்தவை அல்ல அரசியல் சார்ந்தவை. திமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் என்பக்கம் தான் இருக்கிறார்கள்” என பேட்டியளித்தார் .[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
இந்தப்பேட்டி தமிழகத்தில் மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை கொண்டுவருமோ என தமிழக மக்கள் குழம்பினர் . இதற்கு காரணம் கருணாநிதி அவர்கள் அழகிரி அவர்களை திமுகவில் இருந்து முழுமையாக நீக்கியிருந்தது தான் . அது நடந்தது 2014 ஆண்டு . தற்போது மீண்டும் இணைத்துக்கொள்ளப்படுவாரா என்பதுதான் பிரச்சனையே .
கருணாநிதி அவர்கள் எதற்காக அழகிரியை கட்சியிலிருந்து நீக்கினார் ? அழகிரி அவர்கள் திமுகவில் இணைத்துக்கொள்ளப்படுவாரா ? அதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம் .
அழகிரி நீக்கம் ஏன் ?
அழகிரி அவர்களின் நீக்கம் தொடர்பான அறிக்கையில் திமுக பொதுச்செயலாளர் திரு அன்பழகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இதுதான் ,
தி.மு.க. தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தலைமையையும் – கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும்தி.மு.கழகத்திலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்.
இதனை தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபடாமல் இருந்துவந்தார் அழகிரி . ஆனால் அவ்வப்போது அரசியல் தொடர்பான தனது கருத்துக்களை அஞ்சாமல் வெளிப்படையாக அறிவித்துவந்தார் . 2016 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்கள் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட அதுவே காரணமாக அமைந்தது .
இதற்கு முன்பாக அழகிரி அவர்கள் “திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்து , இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகளே இல்லை . அதிமுக அமோக வெற்றிபெறும் ” என அதிரடியாக கருத்து கூறினார் . இதனால் தான் அழகிரியின் பேச்சை அலட்சியம் செய்திடுமாறு அப்போதய திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருந்தார் .
அழகிரி அவர்களை மீண்டும் இணைக்க வாய்ப்பிருக்கிறதா ?
எப்போது அழகிரி அவர்கள் திமுகவில் இருந்து நீக்கிவைக்கப்பட்டாரோ அப்போதிலிருந்தே சூடு தனியாமல் எழக்கூடிய கேள்வி “அழகிரி மீண்டும் இணைவாரா ? எப்போது இணைவார்?” இந்த இரண்டு கேள்விகள் தான் .
அதற்கான சூழ்நிலைகள் கருணாநிதி அவர்கள் உயிரோடு இருந்தபோதே ஏற்பட்டாலும் சில பல காரணங்களால் கருணாநிதி அவர்கள் உயிரோடு இருக்கும்வரை அவரால் அதனை செய்யவே முடியவில்லை .
இப்போதைய சூழ்நிலையில் அழகிரி அவர்களை கட்சியில் மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் “இல்லை” என்றே தோன்றுகிறது . செயற்குழு கூட்டத்தில் இதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை .
அழகிரியை இணைப்பதில் உள்ள சவால்கள் என்ன ?
அண்மையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் , திமுக வின் பொதுச்செயலாளரும் மிக மூத்த அரசியல்வாதியுமான அன்பழகன் அவர்களே சில சந்தேகங்களையும் ஆலோசனைகளையும் ஸ்டாலினிடம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது . அதன் சுருக்கம் இதுதான் ,
கருணாநிதி உயிரோடு இருந்தபோது நீக்கப்பட்டவர் அழகிரி , இப்போது கருணாநிதி அவர்கள் இறந்த உடனையே அவரின் உத்தரவை மீறி அழகிரியை இணைப்பது சரியாகுமா ? தொண்டர்கள் ஏற்பார்களா ?
அன்று கருணாநிதியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அழகிரியை ஒதுக்கி வந்தனர் பல திமுக நிர்வாகிகள் . இப்போது அழகிரிக்கு உயர்பதவியொன்றினை கொடுத்தால் பழைய திமுக நிர்வாகிகளுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டார் என என்ன நிச்சயம் ? நிர்வாகிகள் அஞ்சுவார்களே ?
இந்த இரண்டு கேள்விகளும் தான் தற்போது அழகிரி அவர்களை கட்சியில் இணைப்பதற்கு மிகப்பெரிய சவால்களாக இருக்கும் என நானும் நம்புகின்றேன் .
பாமரன் கருத்து
ஏற்கனவே ஜெயலலிதா என்கிற ஆளுமையின் மறைவினை அடுத்து அதிமுகவில் தர்மயுத்தங்கள் நடந்து ஒருவழியாக ஆட்சி நடந்துகொண்டு இருகின்றது . இன்று அதிமுக வின் பலம் குறைந்திருக்கிறது. தற்போது திமுக தலைவரின் மறைவு மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை கொண்டுவந்துவிடுமோ என்கிற சூழல் தான் தற்போது நிலவுகின்றது .
ஆனால் அதற்கான வாய்ப்பினை அழகிரி அவர்கள் கொடுக்கக்கூடாது என்பதே என்னுடைய விருப்பம் . திமுகவில் தற்போது அழகிரி அவர்கள் இல்லையென்றாலும் அவர் கருணாநிதி அவர்களின் மகன் தான் . கருணாநிதி அவர்களின் எண்ண ஓட்டமும் , திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிட அவர் பாடுபட்ட விதமும் அழகிரி அவர்கள் அறிந்திருப்பார் . திராவிட கட்சிகளின் தேவை தமிழகத்திற்கு தேவை என்பதையும் நிச்சயமாக அழகிரி உணர்ந்திருப்பார் .
அப்படிப்பட்ட அழகிரி அவர்கள் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயலவே கூடாது என்பதும் , அப்படி முயன்றால் அது மற்றவர்களுக்கு தான் கொண்டாட்டத்தை தரும் என்பதை அவர் உணர வேண்டும் .
அரசியலில் நாளை நடப்பதை நம்மால் கணிக்க இயலாது .
உங்களின் கருத்து என்னவென்பதை பதிவிடுங்கள் .
பாமரன் கருத்து