“இந்த முறையும் பொதுத்தேர்வுகளில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி” – இந்த வாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. துவக்க கல்விகளில் அதிகம் தேர்ச்சி அடைகின்ற பெண்கள் பிறகு காணாமல் போய்விடுகிறார்களே? எண்ணாகிப்போகிறார்கள் அந்த அறிவாளிப்பெண்கள்?
வரலாறுகளை நாம் படிக்கின்றபோது, விலங்கினம் துவங்கி மனித இனம் வரைக்கும் வேட்டையாடுவது துவங்கி ஆளுமை செய்வது வரைக்கும் பெண்ணினம் தான் செய்து வந்திருக்கிறது. ஆனால் காலப்போக்கில் பெண்கள் வீட்டிற்குள் முடங்கிப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது எதனால் நடந்தது என வரலாற்றினை ஆய்வு செய்து காலவிரயம் செய்வதனைவிட இனி எப்படி பெண்கள் ஆண்களுக்கு நிகராக செயலாற்றிட முடியும் என்பதற்கான விவரங்களை அலசி ஆராய்வதுதான் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும் என கருதுகிறேன்.
பெண்கள் சாதிக்கிறார்கள், ஆனால்?
ஒட்டுமொத்த பெண்களுமே பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள் என சொல்ல இயலாது. சம காலத்தில் பல்வேறு துறைகளில் உச்சம் தொட்ட பல பெண்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு முற்றிலும் பெண்களை கொண்ட இந்திய கடற்படை குழுவொன்று முழு உலகையும் கடல் மார்க்கமாகவே கடந்து வந்திருக்கிறது. சாய்னா உலக பேட்மிட்டன் தரவரிசையில் முன்னனி வகிக்கிறார், ஜெயலலிதா மம்தா பானர்ஜி போன்றவர்கள் அரசியலில் உச்சம் தொட்டார்கள் என உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போக முடியும். ஆனால் சராசரியாக பெண்கள் உச்சம் தொட்டிருக்கிறார்களா என்பதுதான் கவனிக்கவேண்டிய விசயம்.
உச்சம் தொட்ட சில பெண்களே இருக்கக்கூடிய சமூகத்தில் மிகப்பெரிய அளவில் இன்னொரு விதமான பெண்களை காண முடிகின்றது . அவர்கள் நன்றாக படித்திருப்பார்கள் , கணவனை விடவும் புத்திசாலியாக இருப்பார்கள் . ஆனால் அவர்களின் அதிகபட்ச வேலை சமையல் செய்வது , துணி துவைப்பது , குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது தான் .ஏன் இந்த பாகுபாடு ? எதற்காக படிப்பில் திறமையில் முன்னனி வகிக்கக்கூடிய அதிகபட்ச பெண்கள் சாதாரண குடும்ப பெண்ணாகவே வாழ்ந்து மடிந்து போகிறார்கள் ? சிறுவயதில் அவர்களும் சாதிக்க வேண்டும் , உயர வேண்டும் என பல கனவுகளை கண்டவர்கள் தானே ? இப்போது அந்த ஆர்வம் எங்கே சென்றது ? ஏன் அவர்கள் அடையாளமற்றவர்களாக வாழ்கின்றார்கள் என்பதுதான் இங்கே கேள்வி .
நான் இரண்டுவிதமான பெண்களை இங்கு காண்கிறேன் . ஏதாவது செய்தே ஆகவேண்டும் என துடிக்கும் பெண்களையும் , இவ்வளவுதான் வாழக்கை… சாதித்து என்ன பண்ண போறோம் என சலித்துக்கொள்ளும் பெண்களையும் நான் கண்டிருக்கிறேன் .
நான் இரண்டாவதாக இருக்கக்கூடிய பெண்களை பற்றியே எண்ணுகின்றேன் . சிறுவயதில் பல கனவுகளை சுமந்துகொண்டு தான் ஒவ்வொரு பெண்ணும் வளர்கிறாள் , படிக்கிறாள் . ஆனால் சில குறிபிட்ட காலத்திற்கு பிறகு அவர்களின் கனவுகள் என்னாகின்றன ? குறிப்பிட்ட வயதினை அடைந்த பின்னர் சில பெண்களின் எண்ணம் “எப்படியும் திருமணம் செய்துகொண்டு வீட்டில்தான் இருக்க போகின்றோம் , படித்து என்னாக போகிறது” என எதனால் மாறுகிறது? என எண்ணிப்பார்க்கிறேன். இன்னும் பல பெண்களோ “வேலைக்கு செல்வதில் எல்லாம் ஆர்வமே இல்லாமல் , வீட்டு வேலை செய்வதில் ஆர்வம் உடையவராக இருப்பார்கள் , அதுதான் தான் படைக்கப்பட்டதன் நோக்கம்” என எண்ணுவார்கள். இவர்கள் இப்படி தானாகவே நினைத்துக்கொள்கிறார்களா அல்லது சமூக வளர்ப்பு முறை அப்படி இவர்களை சிந்திக்க வைத்துவிட்டதா எனவும் எண்ணிப்பார்க்கிறேன்
எங்கே தோற்கிறார்கள் பெண்கள் ?
எந்தவொரு உயிரும் தன்னை முன்னிலைபடுத்திக்கொள்ளவே முயலும். இதுதான் இயற்கை. பெண்களுக்கும் இந்த எண்ணம் இருக்கத்தான் செய்யும். ஆனால் பல பெண்கள் அவர்களின் அடையாளத்தை , அவர்களின் இருப்பை , அவர்களின் திறமையை , அவர்களின் கனவினை ஏதோ ஒரு காரணத்திற்க்காக இழக்க துணிகிறார்கள். சிலர் அதற்க்கு குடும்ப சூழல் காரணமென்கிறார்கள். சிலர் குழந்தை, உடல் பிரச்சனை உள்ளிட்டவற்றினை காரணமாக கூறுகிறார்கள். ஆனால் இந்த பிரச்சனைக்காட்டிலும் கூடுதல் பிரச்சனைகளை கொண்ட பெண்கள் பலபேர் உலகில் பல சாதனைகளை படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் மேரிகோம், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கூட குத்துசண்டை போட்டியில் பங்கேற்று பதக்கமும் வென்றார்.
சிலருக்கு உண்மையாலுமே குடும்ப சூழல் அல்லது சில காரணங்களினால் தங்களது கனவினை நோக்கி பயணிப்பதில் சிக்கல் இருந்திருக்கலாம். அவர்களை பற்றியது அல்ல இந்த பதிவு. வாய்ப்புகள் இருந்தும் போதும் என்ற மனம் கொண்ட பெண்களை சுட்டிக்காட்டி நீங்களும் ஜெயிக்கலாம், முயற்சி செய்திடுங்கள் என ஊக்குவிப்பதற்கான பதிவே இது.
சாதனை என்பதெல்லாம் கூட உயர்ந்தபட்சம் , குறைந்தது தான் சிறுவயதிலே கொண்டுருந்த கனவினை நிறைவேற்ற ஒவ்வொரு பெண்ணும் நினைக்க வேண்டும் . இன்று பல பெண்கள் அப்படி நினைப்பது கூட கிடையாது. சிறு முயற்சி , தியாகம் கூட செய்வது கிடையாது . பலதடைகளை உடைத்தெறிந்து முயன்றால் நிச்சயமாக உங்களுக்கான அடையாளத்தை , ஒரு சந்தோசத்தை , நிம்மதியை, நிச்சயம் பெறுவீர்கள் .
பெண்களின் எண்ணம்தான் பெண்களை தோற்க செய்கின்றது
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!