எப்போ கல்யாணம் – மனசை துளைக்கும் கேள்வி
வீட்டில் ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் அக்கம் பக்கத்தாரின் அடிக்கடி கேள்வியாக இருப்பது “யாராவது வந்து கேட்டாங்களா ” “எங்க கட்டி கொடுக்க போறீங்க ” இவைதான் .
அவள் என்னவாக ஆசைப்படுகிறாள் , என்ன படிக்க விரும்புகிறாள் , எப்படிப்பட்டவனை எதிர்பார்க்கிறாள் , திருமணத்தில் அவளுக்கு ஆசை உண்டா இல்லையா என எதையும் அறியாமலே பெற்றோர்கள் மாப்பிள்ளை தேட ஆரம்பித்து விடுவார்கள் .
பெண்ணுக்கு திருமணம் அவசியம் தான் – ஆனால் அத்தியாவசியம் இல்லை
அவள் தன் இலட்சியத்தை எட்டிட காத்திருக்கலாம்
குடும்ப சூழல் காரணமாக இருக்கலாம்
கனவெல்லாம் நிஜமாக்கும் ஒருவருக்காக காத்திருக்கலாம்
மனதை கொள்ளை கொண்டவனுக்காக காத்திருக்கலாம்
ஆண்களின் மீதான வெறுப்பாக இருக்கலாம்
திருமணத்தில் விருப்பமின்மை என்று காரணங்கள் பல இருக்கலாம்…
எப்போ டி கல்யாணம் என்ற பள்ளித் தோழியின் விசாரிப்பு
சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு என்ற கல்லூரி நண்பனின் அக்கறை
திருமணம் செய்யும் எண்ணமே இல்லையா அலுவலக நட்புகளின் கிண்டல்கள்
அனைவரையும் உயிரில்லா ஒற்றை புன்னகையில் நித்தம் கடந்து செல்கிறாள்
விருப்பத்தை மதிக்கும் பெற்றோர்கள் சற்று ஆறுதல் அளித்தாலும்
அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் உறவுகளை வெறுக்கிறாள்
புது முகங்களை எளிதான புன்னகையில் கடந்து செல்பவள்
பழைய முகங்களை கண்டால் ஓடி ஒளிகிறாள்
நண்பர்களை தவிர்க்கிறாள்
உறவுகளின் வட்டத்தை சுருக்கி கொள்கிறாள்
கைக்குழந்தையோடும், கணவனோடும் பெண்கள் கடக்கும் போது
உன்னை எப்போ இப்படி பார்ப்பேன்? என்ற பெற்றவரின் பார்வையின் தவிப்பை
எதிர்கொள்ள முடியாமல்
திருமணங்களையும், திருவிழாக்களையும் தவிர்க்க காரணம் தேடுகிறாள்
துக்க விசாரிப்பை விட அவளுக்கு கொடுமையானது
எப்போ திருமணம் என்கிற கேள்வி
25 வயதை கடந்தும் திருமணம் ஆகாத
பெண்ணை பாவப்பட்ட பிறவியை போல் பார்க்காதீர்கள்
உங்கள் பார்வையை மாற்றுங்கள்…
அவள் வாழ்க்கையை அவளுக்காக வாழட்டும்….
இப்போது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த கேள்வி சங்கடத்தை தருவதாக மாறியிருக்கிறது .
இப்படிக்கு அவள்
இந்து