[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
பல்வேறு தடைகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம். அதன் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்பியது. அதன்பிறகு வழக்கம்போல இன்னொரு குழப்பமும் வந்து சேர்ந்துவிட்டது.
இறுதி முடிவினை எடுக்க வேண்டிய ஆளுநர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பதுதான் அது.
7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவை ஏற்பாரா அல்லது நிராகரிப்பாரா அல்லது முடிவெடுக்காமல் தாமதிப்பாரா?
ராஜிவ் காந்தி கொலை வழக்கு
21 மே 1991 அன்று சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய ஸ்ரீபெருமதூர் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தற்கொலை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார் முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி. இந்த கொலைக்கு காரணமாக இலங்கையில் செயல்படும் LTTE அமைப்பு குற்றம்சாட்டப்பட்டது. குற்றவழக்காக ஆரம்பித்த முன்னாள் இந்திய பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களின் கொலை வழக்கானது பின்னாளில் அரசியல் முக்கியத்துவம் பெற்ற வழக்காக மாறிப்போனது. ஆகையால் தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகின்ற 7 பேரை விடுதலை செய்வதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் தயங்கி வருகின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை
21-05-1991 – ராஜீவ் காந்தி அவர்கள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்
28-01-1998 – ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்
11-05-1999 – மேல்முறையீட்டில் முருகன், பேரறிவாளன், சாந்தன் மற்றும் நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
08-10-1990 – மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.
19-04-2000 – கருணாநிதி தலைமையிலான கருணாநிதி, நளினி க்கு மட்டும் தூக்கு தண்டனையை குறைக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
21-04-2000 – கோரிக்கையை ஏற்று ஆளுநர் நளினியின் தண்டனையை குறைத்தார்.
28-04-2000 – முருகன், சாந்தன், பேரறிவாளன் குடியரசுத்தலைவரிடம் மனு
12-08-2011 – குடியரசுத்தலைவர் மனுவை நிகரித்தார்
26-08-2011 – செப்டம்பர் 09, 2011 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது.
14-02-2014 – 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு மத்திய அரசின் ஆலோசனையை கேட்டது
19-04-2016 – மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது
06-10-2018 – தமிழக அரசு தனது கோரிக்கையை ஆளுநரிடம் முறையிடலாம் என உத்தரவு
09-10-2018 – தமிழக அமைச்சரவை கூடி , 7 பேரையும் விடுவிக்க பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியது.
[Timeline Credit : The Hindu]
7 பேர் விடுதலை ஆளுநர் என்ன முடிவு எடுப்பார்?
இந்த கேள்வி தான் தற்போது பல தொலைக்காட்சிகளில் சமூகவலைத்தளங்களில் விவாதப்பொருளாகி வருகின்றன.
எனக்கு அரசியல்சட்டம் குறித்த தெளிவு அவ்வளவாக இல்லாவிட்டாலும் ஏற்கனவே நடந்த நிகழ்வுகளையும் விவாதங்களில் நிபுணர்கள் அளித்துள்ள கருத்துகளையும் வைத்துப்பார்க்கும்போது ஆளுநர் மூன்று நிலைப்பாடுகளை எடுக்க வாய்ப்புள்ளது .
பரிந்துரையை ஏற்கலாம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அனுப்புகின்ற பரிந்துரையை ஏற்பதுதான் ஆளுநரின் கடமை . சந்தேகங்களோ திருந்தங்களோ இருப்பின் அதனை நிவர்த்தி செய்வதற்காக திருப்பி அனுப்பிடலாம் .
ஆனால் இறுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவினை ஏற்பதே ஆளுநரின் கடமை .தார்மீக அடிப்படையில் அதுவே சரி . ஆனால் அதைத்தான் செய்யவேண்டும் என கட்டாயப்படுத்திட முடியாது.
பரிந்துரையை நிராகரிக்கலாம்
நீதிமன்றம் ஆளுநருக்கு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை . தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்யலாம் என்றே உத்தரவிட்டுள்ளனர் . மத்திய அரசிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களின் கருத்தினை அறியவே விரும்புவார் .
நீதிமன்றத்தில் ஏழு பேர் விடுதலைக்கு எதிராக வாதாடிய மத்திய அரசு ஆளுநர் எடுக்கும் முடிவில் தலையிட்டால் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிக்க சொல்லிட அதிக வாய்ப்பு இருக்கின்றது . அப்படி ஆளுநர் நிராகரித்தால் அவரை நிர்பந்திக்க யாருக்குமே அதிகாரமில்லை என்பதே உண்மை .
இதற்கான வாய்ப்புதான் அதிகமிருப்பதாக கூறுகிறார்கள்
முடிவெடுக்க தாமதப்படுத்திடலாம்
7 பேர் விடுதலை என்பது தற்போது அரசியலாக்கப்பட்டுவிட்டது . ஆகையால்தான் இன்னும் இந்தப்பிரச்சனை பூதாகரமாக பார்க்கப்பட்டுவருகின்றது . 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதனால் தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டுமா என்றே அனைவரும் பார்க்கிறார்கள் .
இப்போது விடுதலை செய்யப்பட்டால் அதிமுக விற்கு தான் நன்மை பயக்குமே அன்றி பாஜகவிற்கு எந்தவித நன்மையையும் கொடுக்கப்போவதில்லை . ஆகையால் எந்தவொரு முடிவினையும் எடுக்காமல் காலத்தை தாமதப்படுத்தவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது .
தெளிவில்லாத அரசியல் சட்டம்
இந்த பிரச்சனைக்கு இதுதான் தீர்வு என இல்லாமல் பல சட்டப்பிரிவுகளை பலவிதமாக வைத்துக்கொண்டு அவ்வப்போது நீதிபதிகள் அளிப்பதே நியாயமாக பார்க்கப்படுகிறது . ஆளுநருக்கு அனுப்பப்படும் பரிந்துரையின் மீது இத்தனை நாட்களுக்குள்ளாவது முடிவினை எடுக்கவேண்டும் என்கிற சாதாரண விதி கூட இன்றளவும் சேர்க்கப்படவில்லை . ஆளுநருக்கும் குடியரசுத்தலைவருக்கும் அப்படியென்ன சலுகை என்பது தெரியவில்லை . ஜனநாயக நாட்டில் இன்றும் இதுபோன்ற சட்டங்கள் இருப்பது வியப்பு .
இன்றும் 7 பேர் விடுதலை செய்யப்படுவார்களா என்றால் ? அது விடை தெரியாத கேள்விக்குறியாகவே இருக்கின்றது . இது தவிர்க்கப்பட வேண்டியது .
இந்த 7 பேர் மட்டுமல்ல சிறைகளில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கைதிகள் அனைவருமே விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் . செய்யுமா இந்திய நீதித்துறையும் இந்திய நடுவண் அரசும் ?
பாமரன் கருத்து