Site icon பாமரன் கருத்து

What is Autism? How to Find? What can we do? | ஆட்டிசம் என்றால் என்ன

ஆட்டிசம் என்றால் என்ன ?

ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம் எனப்படும்.

ஆட்டிசம்

 

ஆட்டிசம் என்பது நோயல்ல அது ஒரு உடற்குறைபாடு . இக்குறைபாடுள்ள குழந்தைகள் புத்திசாலிகளாக கூட இருக்கலாம் . இக்குறைபாட்டுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் சம்பந்தம் இல்லை . இந்த ஆட்டிசம் குறைபாட்டை குழந்தைகளின் இளம் வயதிலே கண்டுபிடித்துவிட்டால் சரி செய்வது எளிது .


ஆட்டிசம் அறிகுறிகள்

எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது.

கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது.

தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது.

சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.

பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது.

பாவனை விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது.

வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது.தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.

காரணமில்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது.

வலியை உணராமல் இருப்பது.வித்தியாசமான நடவடிக்கைகள் – கைகளைத் தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்துகொண்டிருப்பது.

வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு இல்லாமை.

சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்பாமல் இருப்பது.தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது.

மாற்றங்களை அசவுகரியமாக உணருவது.பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது.பொருட்களைச் சுற்றிவிட்டு ரசிப்பது – அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது.தன்னந்தனியே சிரித்துக்கொள்வது.

சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது.

சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனித்து இருப்பது.


என்ன பிரச்சினை?

ஆட்டிச பாதிப்பு கொண்டவர்களுக்கு இந்த `சென்சரி’ – உணர்வு சார்ந்த தகவல்களைப் பெறுவதிலும் அவற்றைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதிலும் நிறைய சிக்கல்கள் உண்டு. அச்சிக்கலில் மாட்டியவர்கள், மிகுந்த மனப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் உணர்வார்கள். ஒரு சில ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் உடல் ரீதியிலான வலியையும் உணர்வதுண்டு. இது அவர்களின் நடத்தையை உடனடியாக பாதிக்கும்.

இக்குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினை கேட்பதில் ஏற்படுவதுதான். ஏனெனில், சத்தங்களை உள்வாங்காதபோது மனிதனின் தகவல் தொடர்புத் திறன் மோசமாக பாதிக்கப்படுகிறது. ஒலிகள் மிகைப்படுத்தப்பட்டும் கேட்கலாம். அல்லது குழப்பமாகவும், தெளிவில்லாமலும் கேட்கலாம்.

 


உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்

 

உங்கள் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் அவமானகரமான விஷயம் எதுவும் இல்லை. எனவே, இந்த உண்மையை மறைக்க வேண்டியதில்லை. உறவினர்களிடமும் நண்பர்கள் வட்டத்திலும் குழந்தை ஆட்டிசத்தால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லிவிட்டால், தேவையற்ற தயக்கங்களைக் களைய முடியும்.

நம் குழந்தையை மற்ற சாதாரணக் குழந்தைகளுடன் ஒப்பிட்டு மனம் சோர்வுறவும் தேவையில்லை. நம் குழந்தை எதையெல்லாம் செய்யவில்லை என்று யோசித்து சோர்வுறாமல், குழந்தையின் சின்னச் சின்ன செயல்களையும் வெற்றியையும்கூட கொண்டாடப் பழகுங்கள்.

 


மனந்தளராமல் செயல்படுங்கள்

 

ஆட்டிச பாதிப்பு என்பது வரையறுக்கப்பட முடியாதது. எனவே, எந்தக் கட்டத்திலும் இதற்கு மேல் நம் குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். வாழ்நாளின் ஏதேனும் ஒரு கணத்தில் அக்குழந்தைகள் எதையேனும் சாதிக்க முடியும். எனவே, மனதைத் தளர விடாமல் தொடர்ந்து கற்க அவர்களை ஊக்குவியுங்கள்.

பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்குத் தொடர்ந்து அளியுங்கள். இசை, நடனம், ஓவியம், புதிர்களை அடுக்குதல், ஸ்கேட்டிங் என எல்லா வகை வகுப்புகளையும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்துங்கள். அக்குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் ஏதேனும் ஒரு திறனை நீங்கள் அறிய நேரிடலாம். அது குழந்தையின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம்.

குழந்தைக்கு ஆட்டிசம் என்ற விஷயத்தைக் கேட்ட உடனேயே உங்கள் மனதை பயம் கவ்வக்கூடும். இந்தக் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? நண்பர்கள் இருப்பார்களா? திருமணமாகுமா? முதலில் பேச முடியுமா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழும்பும்.

உங்கள் குழந்தையைப் பற்றிய கனவுகள் நொறுங்கும். நொடியில் `ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’ என்ற கதறலாய் உங்களிடமிருந்து வெளிப்படலாம்.

இப்படியெல்லாம் குமுறுவதில் தவறேயில்லை. ஆனால், அதற்கு ஒரு கால வரையறை வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் ஆற்றலையெல்லாம் அழுகையில் வீணடிக்காது, விரைவில் உங்கள் குழந்தையை வாழ்வதற்குத் தயார் செய்ய ஆரம்பியுங்கள்.


 

ஆதாரம் : நலம் வாழ (டாக்டர் எல்.மகாதேவன்)

Source : http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/baebc2bb3bc8-1/b86b9fbcdb9fbbfb9abaebcd#section-9

Share with your friends !
Exit mobile version