Site icon பாமரன் கருத்து

நியூட்ரினோ திட்டத்தை வச்சு அப்படி என்னத்ததான் கண்டுபிடிக்க போறாங்க ? நியூட்ரினோ திட்டம் குறித்த முழு தகவல்

மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுமையம் அமைக்க அனுமதி வழங்கிவிட்டது . ஆனாலும் தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும் என சொல்லியிருக்கின்றது . 

நியூட்ரினோ திட்டம் – தேனி

இந்த சூழ்நிலையில் ஆய்வகம் அமைப்பது எதற்காக , தேனி தேர்ந்தெடுக்கப்பட்டது எதற்காக ? போன்ற பல கேள்விகளுக்கு சுருக்கமான பதில்கள் உங்களுக்காக … 

நியூட்ரினோ என்றால் என்ன ?

 
சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வெளியேறக்கூடிய மிக மிக நுண்ணிய ,மிக மிக குறைந்த எடை கொண்ட ஒளியின் வேகத்தில் பயணிக்க கூடிய துகள்தான் நியூட்ரினோ . இதனை பேய் துகள் என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள் . 

பூமிக்கு வரும் நியூட்ரினோ துகள்

ஒவ்வொரு நொடியும் கணக்கில்லாத நியூட்ரான் துகள்கள் பூமியை நோக்கி விழுகின்றன . உதாரணத்திற்கு சூரியனை நோக்கி ஒரு நொடி கையை காட்டிக்கொண்டு இருந்தால் பில்லியனுக்கும் அதிகமான நியூட்ரினோ துகள்கள் உங்கள் கைகளின் வழியே பாய்ந்து சென்றிருக்கும் . 

நியூட்ரினோ துகளை ஆராய்வது எதற்காக ?

 
 

இந்த நியூட்ரினோ துகளானது சூரியனில் நிகழும் அணு இணைவின்போதும் வெளிப்படுகிறது . ஆகையால் இந்த துகளை ஆராய்வதன் மூலமாக சூரியன் குறித்தும் , இயற்கையின் அடிப்படை கட்டமைப்பு குறித்தும் அறிந்துகொள்ளலாம் என்பது விஞ்ஞானிகளின் எண்ணம் . 

தேனியை தேர்ந்தெடுத்தது எதற்காக ?

 
மிக நுண்ணிய , ஒளியின் வேகத்தில் பயணிக்க கூடிய நியூட்ரான் துகள்களை எளிதில் பிடித்துவிட முடியாது . அப்படிப்பட்ட நியூட்ரான் துகள்கள் மிக கடினமான பாறைகளின் வழியே ஊடுருவி செல்லும்போது ஒரு குறிப்பிட்ட  தூரத்திற்கு பிறகு ஆற்றலை/வேகத்தை  இழக்கும் . அந்த சூழ்நிலையில் 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவியை பயன்படுத்தி பிடிக்க முடியும் .இந்த கருவியை சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தடிமனுள்ள பாறை இருந்தால்தான் நியூட்ரினோ துகளை பிடிக்க முடியும் . 

 

இந்தியா முழுமைக்கும்  ஆராய்ந்து பார்த்ததில் தேனி பகுதியில் இருக்கக்கூடிய பாறைகள் மிக கடினமாக இருப்பது கண்டறியப்பட்டது . ஆகவே தான் தேனி தேர்தெடுக்கப்பட்டது .

 

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன் ?

 
பல கிலோ மீட்டருக்கு மலைகளை குடைந்து கட்டப்படும் இந்த ஆய்வு மையத்தால் நாட்டிற்கு என்ன பயன் என கேட்டால் , இரண்டு மூன்று விஞ்ஞான கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மட்டுமே . 

மலைகளை பல கிலோ மீட்டருக்கு குடையும்போது காடுகள் அருகில் இருக்கக்கூடிய நீர் நிலைகள் , அருகிலே இருக்கக்கூடிய கிராமங்கள் பாதிக்கப்படலாம் என மக்கள் நினைக்கின்றனர் . 

அணுக்கழிவுகளை கொண்டுவந்து கொட்டுவதற்காகவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்கிறார்கள் போராட்டக்குழுவினர் .

 

நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம்

அமெரிக்கா , ஜப்பான் , பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த சோதனையில் ஈடுபட்டிருக்கின்றன . அவை அனைத்துமே தனது ஆய்வுகூடங்களை மக்கள் நடமாட்டமே இல்லாதா இடத்தில் வைத்திருக்கின்றன .

 

விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும் அந்நாடுகளே தொலைவில் வைத்திருக்கும்போது , பாதுகாப்பு எற்பாடுகளில் பின்தங்கிய இந்தியா மக்கள் கூடும் இடத்தில் இதனை தொடங்குவது மக்களிடம் அச்சத்தை தருகிறது . 

என்ன செய்யலாம் :

 

முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இந்த நியூட்ரினோ ஆய்வுகூடம் பற்றி கூறும்போது “இதனால் ஆபத்து ஒன்றுமில்லை . இதனை இங்கு செயல்படுத்தினால் தமிழகம் புகழ்பெறும் , மேலும் இங்கிருக்க கூடிய விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ” என்றார் .
 

ஆனாலும் கடந்த கால அரசின் மறைமுகமான மக்களின் நலனில் அக்கறையில்லாமல் மேற்கொண்ட பல திட்டங்கள் அவர்களின் மனதில் அச்சத்தை உண்டாக்கியிருக்கின்றன . ஆகவே முழு வெளிப்படைத்தன்மையுடன் அணு கழிவுகள் இங்கு கொட்டப்படாது என்கிற உறுதிமொழியுடன் மக்களின் ஆதரவோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் .

 

நன்றி.
பாமரன்

Share with your friends !
Exit mobile version