இந்த பதிவினை எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரவும் வாய்ப்பிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) ஈஸ்டர் திருநாள் அன்று மக்கள் கூடும் இடங்களான தேவாலயங்கள், ஹோட்டல்கள் என முக்கியமான இடங்களை குறிவைத்து 8 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமைதியான சந்தோச வாழ்வு வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களின் பிரார்த்தனை முடிவதற்கு முன்பாகவே குண்டுகள் வெடிக்க துவங்கின. அருகில் உயிரோடு இருந்தவர்கள் பலர் சில நொடிப்பொழுதில் ரத்தமும் சதையும் கலந்த பிணமாக சிதறி கிடந்ததை பார்த்தவர்கள் அலறி ஓடினார்கள்.
போரினால் அமையற்றுக்கிடந்த இலங்கையில் இப்போதுதான் ஒருவாறாக அமைதியை நோக்கி திரும்பிக்கொண்டு இருந்தது. ஒரு குறிப்பிட்ட மதத்தை நோக்கி நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் மீண்டும் அமைதியற்ற நிலைக்கு நாடு சென்று விடுமோ என அனைவரும் அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.
மனிதத்தன்மை அற்ற இந்த தாக்குதல் குறித்து நமக்கு பல கேள்விகள் எழுகின்றன.
>> தாக்குதல் நடந்து 48 மணி நேரம் ஆகியும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காமல் இருந்தது. எதற்க்காக யார் இந்த கொடூர தாக்குதலை நடத்தினார்கள் என்பதே தெரியாமல் ஒட்டுமொத்த தேசமும் குழம்பி நின்றது. இது எவ்வளவு பெரிய கொடுமை? யார் தாக்குகிறார்கள் என்பதை கூட அறிந்திடாமல் எதுவும் செய்யாத அப்பாவிகள் காரணமின்றி உயிரை இழப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இப்போது ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருக்கிறது.
>> மனிதனை செழுமைபடுத்திடவே மதங்கள் உருவாகின என்கிறார்கள். ஆனால் அந்த மதத்தின் பெயரால் தான் மனிதர்களை மனிதர்களே வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனையா ஒவ்வொரு மதமும் போதிக்கின்றன? அப்படி போதிக்கின்ற மதத்தை நம்புகிறீர்களே எப்படி?
>> இன்றளவும் இந்த தாக்குதல் எதற்க்காக நடத்தப்பட்டது? எந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை. அப்படியென்றால் குறிப்பிட்ட மதத்தவர் கொண்டாடுகிற நன்னாளில் ஒரு தாக்குதலை நடத்தி அவர்களின் அமைதியை குலைக்க வேண்டும் என்பது மட்டுமே தீவிரவாதிகளின் எண்ணமாக இருந்திருக்க முடியும். இதனை தான் தாக்குதலை நடத்தியவர்களின் கடவுளும் மதமும் போதிக்கின்றனவா?
>> ஆட்சியாளர்களை எதிர்த்தோ அல்லது கோரிக்கைகளை வலியுறுத்தியோ தாக்குதல்கள் நடத்தப்படும் போது சாதாரண பொதுமக்களே பகடைக்காய்களாக கொல்லப்படுகிறார்கள். மற்றபடி காரண கர்த்தாவாக இருப்பவர்கள் அனைவருமே பாதுகாப்பு வளையத்திற்குள் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இது எப்படி தர்மமாகும்?
>> இலங்கையில் மட்டுமே இக்கொடுமை அரங்கேறவில்லை, உலகின் பிற தேசங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிகார போட்டிகளுக்காக இவை பல சமயங்களில் அரங்கேருகின்றன.
இளைஞர்களே மூளைசலவைக்கு ஆளாகாதீர்கள்
>> தற்போது இலங்கையில் நடத்தப்பட்ட 8 தாக்குதலில் 7 தாக்குதல்கள் தற்கொலைப்படை தாக்குதல்கள் தான். துடிப்பு மிக்க அதே சமயம் சமூகத்தால் ஏதோ ஒரு விதத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களை மூளை சலவை செய்து தற்கொலைப்படை தீவிரவாதிகளாக மாற்றி தங்களது திட்டத்தை தீவிரவாத இயக்கங்கள் நிறைவேற்றிக்கொள்கின்றன. இதுதான் காலம் காலமாக அரங்கேறி வருகிறது.
>> இளைஞர்கள் இப்படி திசை மாறிச்செல்வதனை தடுக்கின்ற விதத்தில் அரசு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல இளைஞர்களும் ஒன்றினை புரிந்துகொள்ள வேண்டும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்பதற்க்காக தற்கொலைப்படையாக மாறி பிறரை கொள்வது எந்தவிதத்திலும் நேர்மையான செயலாக ஆகாது. இறக்கும் அப்பாவிகளும் நமது தாயும் தந்தையும் சகோதரியும் இருப்பார்கள் என எண்ணிக்கொள்ளுங்கள். மூளை சலவைக்கு ஆளாகாதீர்க்கள்.
நிம்மதியாக வாழ அனைவருக்கும் உரிமை இருக்கிறது , அதனை தடுக்க வேண்டாம்!
இலங்கையில் அமைதி திரும்பட்டும் !