தனி நபர்களாக இருக்குபோது ஒழுக்கத்தை கடைபிடிக்கிற பலர் , கூட்டமாக சேரும்போது வன்முறையாளர்களாக எளிதில் மாறிவிடுகிறார்கள். வன்முறை ஒருபோதும் மக்களின் ஆதரவை பெற்றுத்தராது.
பாமக அரசியல் கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு கோரி போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப்போராட்டம் தேர்தலுக்காக நடத்தப்படுகிற நாடகம், சாதிய பாகுபாட்டை உருவாக்கவே பாமக இத்தகைய வேலையை செய்கிறது என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இவற்றையெல்லாம் பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மறுத்தார்.
வன்னியர் மக்களின் நலனை முன்னிறுத்தி பாமக செயல்படுவது முதல் முறையல்ல. பாமக அப்படி செயல்படுவதில் எந்தவித குற்றமும் கிடையாது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலும் கூட பல அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட இன மக்களுக்காக போராடவே செய்கின்றன.
ஆனால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறும்போது அரங்கேறும் வன்முறை சம்பவங்கள் தான் வருத்தத்தை உண்டாக்குகின்றன. வன்னியர் மக்கள் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற போராடுவது எந்தவித குற்றமும் இல்லை. ஆனால் அந்த போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாகவும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும் இருந்தால் அது தவறு தானே.
சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ ஒன்றில், மின்சார ரயில் மீது கற்களை வீசி அதனை நிறுத்தும் போராட்டக்குழுவை காண முடிகிறது. இப்படி ஒரு விசயம் அரங்கேறினால் பொது மக்களின் ஆதரவு என்பது போராடுகிறவர்களுக்கு எப்படி கிடைக்கும்? கோரிக்கைகள் பொது வெளிக்கு செல்லும் வேகத்தைக்காட்டிலும் இதுபோன்ற விசயங்கள் தானே வேகமாய் சென்று போராட்டத்தை கொச்சைப்படுத்திவிடும்.
உதாரணத்திற்கு, டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார்கள். அவர்கள் மிகவும் அமைதியாக நடந்துகொள்கிறார்கள். போராட்டத்தை அரசு ஒடுக்க முயலும் என்பதை அறிந்த அவர்கள், தேவையான உணவு உடை உள்ளிட்டவற்றுடன் போராட்டத்தை அணுகுகிறார்கள். அவர்கள் நீக்கச்சொல்லும் வேளாண் சட்டத்தில் என்ன இருக்கிறது, ஏன் விவசாயிகள் அதனை எதிர்த்து போராடுகிறார்கள் என்பதையெல்லாம் பற்றி தெரியாத சாமானியர்கள் கூட, விவசாயிகளை அரசு சந்திக்க வேண்டும் என விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
ஒரு போராட்டத்தில் வெல்வதற்கு மக்களின் ஆதரவை பெறுவது அவசியமான ஒன்று. அதுதான் அரசாங்கத்தை ஆட்டிப்பார்க்கும் சக்தி வாய்ந்தது. இல்லையேல் வன்முறை போராட்டம் எனக்கூறி நிராகரிப்பதற்கு, சிலர் செய்கின்ற தவறான செயல்கள் காரணமாக அமைந்துவிடும். போராட்டத்தை வழிநடத்துகிறவர்கள் தீர்க்கமாய் இந்த எண்ணங்களை போராட்டத்தில் பங்குபெறும் தொண்டர்களிடத்தில் திணிக்க வேண்டும்.
நாம் தான் அகிம்சையை உலகிற்கு நிரூபித்துக்காட்டியவர்கள். நாமே சில சமயங்களில் அதை கடைபிடிக்காமல் போவதென்பது நம்மை நாமே கீழ்மை படுத்திக்கொள்வது போன்றது.
இனியாவது அமைதியான முறையில் போராட்டங்களும் கொண்டாட்டங்களும் நடைபெறட்டும்.
பாமரன் கருத்து