அரசியல் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் என அரசியல் கட்சிகள் பிசியாக இருக்கின்றன. தேர்தலின் இறுதி எஜமானர்களாக இருக்கப்போகும் மக்களும் கூட தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அரசியல் களத்தை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
திமுகவில் ஸ்டாலின் அவர்கள் தான் முதல்வர் வேட்பாளர், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். இரண்டு கட்சியில் ஒன்றுதான் ஆட்சியை பிடிக்கும் வலிமையோடு தற்போது இருக்கின்றன என்றாலும் கூட மூன்றாவது கட்சியாக உருவெடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிட பிற கட்சிகள் பிரயத்தனப்படுகின்றன.
நாம் பொதுமக்களிடத்திலும் இளைஞர்களிடத்திலும் பேசும்போது நடுநிலையாளர்கள் பலரது விருப்பமாக இருப்பது மூன்றாவதாக புதியவர்கள் வரட்டுமே என்பதுதான். திராவிட கட்சிகள் தமிழக முன்னேற்றத்திற்கு பெரும்பங்கு வகித்திருந்தாலும் கூட ஊழல் எனும் பெரும் அயோக்கியனை ஒழித்துக்கட்ட இரண்டு கட்சிகளும் பெரிதாக முயற்சியெடுக்கவில்லை என்பது அவர்களது வருத்தமாக இருக்கிறது.
சரி, மக்கள் யார் வந்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறார்கள் என்று கேட்டோம். அப்போது பலரது வாய்களில் உதிர்த்த பெயர் விஜயகாந்த். திரைப்படங்களில் மட்டுமே தேசத்திற்க்காக போராடிய தகுதி படைத்தவர் அல்ல விஜயகாந்த் . இயல்பிலேயே அவர் நல்ல எண்ணமுடையவர் என்பதே மக்களின் கருத்தாக இருந்தது.
இயல்பிலேயே ஊழலுக்கு எதிரான மனமுடையவர், நடிகர் சங்கத்தை சிறப்பாக வழிநடத்தியவர், பல சமயங்களில் தமிழக நலனுக்காக குரல் கொடுத்தவர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளையே வெளிப்படையாக எதிர்த்த துணிவுடையவர் என பல தகுதிகள் கொண்டவராக இருந்தார் விஜய்காந்த்.
போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 10 சதவிகித வாக்குகளை பெற்று அசத்தியவர் விஜயகாந்த். இப்படி வலிமையோடுதான் விஜயகாந்த் அவர்களின் அரசியல் பயணம் துவங்கியது. பின்னர் அவரது அரசியல் பங்கேற்புகள் அனைவருக்கும் தெரிந்ததே.
உடல்நலன் சரியில்லாத நிலையில் விஜயகாந்த் அவர்கள் பொதுவெளியில் நடந்துகொண்ட சில சம்பவங்கள் பெரியதாக ஊதப்பட்டு பேசப்பட்டன. சமூக வலைதளங்களில் திட்டமிட்டோ எதார்த்தமாக விஜயகாந்த் கிண்டல் செய்யப்பட்டார். அவரது ஆளுமையை சிதைக்கும் விதமாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் இன்றளவும் கூட விஜயகாந்த் அவர்கள் வந்துவிடுவார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கும் என நம்பவும் இயலவில்லை.
அரசியலில் பங்கேற்பவர்கள் தங்களது உடல்நலனில் பெரிய அக்கறை கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.
இப்போதைய அரசியல் சூழ்நிலையில் விஜய்காந்த் முந்தைய வேகத்தோடு இருந்தாரெனில் மிகப்பெரிய மாற்றத்தை அவரால் செய்திருக்க முடியும். கட்சியை பெரிய அளவில் அவர் கொண்டு சேர்த்திருக்க முடியும்.
இப்படிப்பட்ட ஒரு அற்புதமான சூழலை விஜயகாந்த் தவறவிட்டுவிட்டார் என்பதே எதார்த்தமான உண்மை.
பாமரன் கருத்து