மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் அண்மைய செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமானதாக இல்லையென்றே தோன்றுகிறது . அவருடைய இப்போதையை செயல்பாடுகள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியதாகவும் , கோவம் நிறைந்ததாக இருக்கின்றது . எதற்காக வைகோ உணர்ச்சி பிழம்பில் கொதிக்கிறார் ? உண்மையாக இருக்கின்ற நம்மை அடுத்தவர்கள் பரிகாசம் செய்கிறார்கள் என்பதனாலா ? அடுத்தவர்கள் வேண்டும் என்றே சீண்டுவதாலா ?
புதியதலைமுறையில் கோபம்
சில தினங்களுக்கு முன்பாக புதியதலைமுறை தொலைக்காட்சியில் கார்த்திகை செல்வன் “தலித்துகளுக்கு அதிகாரம் ” தொடர்பான கேள்வியினை முன்வைத்தார் . அதற்கு “என் வீட்டிலும் தலித் பிள்ளைகள் இருக்காங்க நான் அவங்க கூட சரிசமமாத்தான் பழகுறேன் ” என பதிலளித்தார் . மீண்டும் தலித் தொடர்பான கேள்வியை எழுப்ப , கோபத்துடன் உரையாடலை முடித்துக்கொண்டு வெளியேறினார் வைகோ.
ஏன் வைகோ சார் அவ்வளவு கோபம் ?
வைகோ அவர்களின் அரசியல்வாழ்வினை முழம்போட எனக்கு வயதில்லை என்பதனால் ,அவருடைய கோவம் என்கிற ஒற்றை நிலையினை மட்டும் இங்கே பார்க்கலாம் .
வைகோ மக்கள் நல கூட்டணியில் இருந்தபோதும் திமுக கூட்டணிக்கு வருவதற்கு முன்னரும் திமுகவையும் அதன் தலைவர்களையும் படுபயங்கரமாக திட்டியிருக்கிறார் . ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக ஸ்டாலினை முதல்வர் ஆக்கியே தீருவேன் என சால்வை போர்த்தி பொங்கினார் ….
இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே…
ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் எப்படி இப்படி இருவேறு மனநிலையை அடைய முடியும் ? இரண்டிலுமே வைகோ உணர்ச்சி மிகுதியாகவே இருந்தார் .
கார்த்திகை செல்வன் தலித்துகள் தொடர்பாக கேள்வியை எழுப்பினால் அதற்கு பதிலளித்து தனக்கு சாதகமாக்கிக்கொள்ளாமல் அவரிடம் முரண்பட்டுக்கொண்டு வந்தால் பார்க்கிறவர்களுக்கு நீங்கள் தலித்துகளுக்களின் முன்னேற்றத்துக்காக செய்தது தெரிந்துவிடுமா ?
இப்படி ஏதேனும் ஒரு சூழலை சந்தித்துவிட்டால் உடனடியாக உணர்ச்சிவசபட்டு விடுகின்றார் வைகோ . கேட்பவர் கரடுமுரடாக கேட்டால் அதற்கு பதிலளிக்க தெரியாதவறல்ல வைகோ , வைகோவின் பேச்சுத்திறனை உலகறியும். ஆனால் அதற்கான பொறுமையை நிதானத்தை வைகோ இழந்துவருகிறார் என்பதே உண்மை .
இது அவருக்குத்தான் பின்னடைவு ..
வன்னியரசு பதிவு
புதியதலைமுறை தொலைக்காட்சியில் வைகோவின் உரையாடலை கண்ட விடுதலை சிறுத்தை கட்சிகளின் முன்னனி நபர்களில் ஒருவரான வன்னியரசு இவ்வாறு முகநூலில் பதிவிட்டார் .
கடந்த இரு நாள்களாக சரியான தூக்கமில்லை. நான் பெரிதும் நேசிக்கக்கூடிய தலைவர் அவர். அவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று மனம் வேதனை கொள்கிறது. அந்தத் தலைவர் வைகோதான். என்னுடைய தலைவர் திருமாவளவனை எப்படி மதிக்கிறேனோ அப்படித்தான், வைகோ மீதான மதிப்பீடும். நான் மட்டுமல்ல விடுதலைச் சிறுத்தைகளில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அந்தளவுக்கு வைகோ மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் அவரின் நேர்காணலைப் பார்த்தேன்.
திராவிட இயக்கம் தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வை சரியாகத் தந்துள்ளதா என்னும் நியாயமான கேள்வியை முன்வைத்தார். அதற்கு மிகச் சிறப்பாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம். அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், வைகோ அதற்குப் பதில் அளிக்காமல், “தலித்துகளுக்கு எதிராக என்னைக் காட்ட முயற்சி செய்கிறீர்களா? எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள்தான்” என்று சொல்கிறார்.
இந்த உளவியலை ஓர் ஆதிக்க உளவியலாகப் பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை? பதற்றமடைவது, கோபமடைவது எதைக்காட்டுகிறது?
தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் உள்ளவர் வைகோ. சமூக நீதிக்கோட்பாடு, பகுத்தறிவு, தந்தை பெரியார் என்று பயணப்பட்டுக்கொண்டிருப்பவர். சமூக மாற்றத்தை விரும்புபவர்தான்.
தலித்துகள் விடுதலை குறித்த அக்கறை உள்ளவர்தான். ஆனால், எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்’ இருக்கிறதா? இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப்போல தலித்துகளுக்கு வந்ததா? என்ற கேள்வி மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள்.
அந்த நடப்பு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் பயணப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப் பகிர்வு கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. இடைநிலை சாதிகளிடம் ஆட்கொண்டுள்ள சனாதன – சாதிய சிந்தனைகளை களைந்து, சமத்துவத்துக்கான சிந்தனைகளைப் பரப்ப வேண்டிய பணிகளையும் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
அந்த வகையில், கடைசி மனிதனுக்கான ஜனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் கூடுதலாக எழும்!
இதற்கு வைகோ ஆற்றிய எதிர்வினையால் திமுக தலைமையிலான கூட்டணி அமைவதில் சிக்கல் நீடித்து வருகின்றது .
பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுமையாக இருப்பது அவசியம்.