“தடுப்பூசி ஒரு மருத்துவ பிழை, இதனை புறக்கணிக்க முடியாது. இந்தத் தவறு வரலாற்றில் பதிவு செய்யப்படும். தடுப்பூசி தான் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உருவாக்கத்திற்கு காரணம்” இப்படித்தான் லூக் மாண்டாக்னியர் ஒரு நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது பதில் கூறினார். இப்படிப்பட்ட கருத்தை கூறியது ஒரு சாதாரண நபர் என்றால் அது முக்கியத்துவம் பெற்றிருக்காது. ஆனால் சொன்னவர் ‘எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸை கண்டறிந்து அதனால் 2008 ஆம் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி. ஆகவே தான் தற்போது இந்த கருத்துக்கள் வலுவாக இணையத்தில் பரவி வருகின்றன.
இவரது கருத்தை நீங்கள் பகிர்வதற்கு முன்பாக ஒருமுறை இந்த வீடியோவை பார்த்துவிடுங்கள். யாரேனும் உங்களது நண்பர்கள் இவரது கருத்தை பகிர்ந்தால் அவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்புங்கள்.
https://www.youtube.com/watch?v=7sGGyMz88qc
கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் பலருக்கும் உண்டு. லூக் மாண்டாக்னியர் போன்ற ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானி சொல்லும் போது அந்த கருத்துக்கள் மேலும் வலுப்பெறுவதோடு அவர்களது வாய்வார்த்தையையே பலரும் ஆதாரமாக பயன்படுத்தும் சூழலும் ஏற்படுகிறது. சரி வாருங்கள் அவர் என்ன சொன்னார் என பார்ப்போம், அவரை நம்பலாமா என பார்ப்போம்.
மே மாதம், 2021 துவக்கத்தில் ஒரு நேர்காணனில் பங்கேற்றார் லுக் மாண்டாக்னியர். அப்போது அவரிடம் ‘பிரான்சு நாட்டில் தடுப்பூசி ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிறகு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை எப்படி இருக்கிறது’ என கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்தான் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. அவர் அளித்த பதிலில் ‘இது ஒரு அறிவியல் மற்றும் மருத்துவ பிழை, அதை புறக்கணிக்க முடியாது. இது வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
ஏனெனில் தடுப்பூசி புதிய வைரஸ்களை உருவாக்குகிறது. தடுப்பூசிகள் வைரஸ்கள் பரவுவதைத் தடுக்காது, மாறாக அவற்றை அதிக சக்திவாய்ந்ததாக ஆக்குகின்றன. தடுப்பூசி புதிய கொரோனா வைரஸுக்கு முந்தையதை விட அதிக சேதத்தை ஏற்படுத்துவதாக தெரிகிறது.” என தெரிவித்தார். தடுப்பூசி எப்படி புதிய வகை கொரோனா வைரசை உண்டாக்குகிறது என்ற கேள்விக்கு ‘கொரோனா தடுப்பூசி காரணமாக உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி என்பது கொரோனா வைரஸுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்குகிறது. ஒன்று நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பித்து உயிர்வாழ உருவாமாறுவது அல்லது இறப்பது. இதுதான் உருமாறிய கொரோனா வைரஸ் உருவாக காரணம்’ என்றார்.
இவர் சொல்வதை நம்பலாமா?
நோபல் பரிசு பெற்றவர் கூறும் போது அதனை நிராகரிக்க முடியாது என பலரும் சொல்லுவார்கள். ஆனால் நோபல் பரிசு பெற்ற பலரும் கூட பொய்களையும் யூகங்களையும் சொன்ன வரலாறு உண்டு. இவர் சொல்வதை நம்பலாமா என்ற கேள்விக்கு, இவர் கடந்த காலங்களில் வெளிப்படுத்திய சில விசயங்கள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.
2009 ஆம் ஆண்டு நோய்க்கிருமி பாக்டீரியா மற்றும் வைரஸ் இனங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நீர்த்த டி.என்.ஏ குறிப்பிட்ட ரேடியோ அலைகளை வெளியேற்றும் என தெரிவித்தார். இவரது கூற்றை நம்பி சோதித்த போது அது உண்மை இல்லை என தெரிந்தது.
அடுத்தது, தண்ணீருக்கு நியாபக சக்தி உண்டு என்பது. இதுவும் சோதனைக்கு பிறகு பொய் என நிறுவப்பட்டுவிட்டது.
அடுத்தது, சீனாவில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என சொன்னவர்களில் இவரும் ஒருவர். கொரோனா வைரஸை சோதித்த அமெரிக்க விஞ்ஞானிகள் உட்பட பலரும் இது இயற்கையாக உருவான வைரஸ் தான் என தெரிவித்தார்கள்.
தற்போது, தடுப்பூசி குறித்த தனது கருத்தை தெரிவித்து கவனத்தை ஈர்த்துள்ளார் இவர். மற்ற விசயங்களை பொய்யென விஞ்ஞானிகள் நிரூபித்தது போலவே கொரோனா தடுப்பூசி தான் உருமாறிய வைரஸை உண்டாக்குகிறது என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு இவரது கருத்துக்கள் துணை போகும். தடுப்பூசி திட்டத்தை பின்னடைவு அடைய செய்திடும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!