சுதேசி கப்பல் விட்ட வ வு சிதம்பரனார் தன்னுடைய இறுதிக்காலத்தில் குடும்பத்தை ஓட்டுவதற்கு மளிகைக்கடை வைத்து நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்
இன்று வ.உ.சி பற்றிப்பேசுவதிலோ அவரைப்புகழ்வதிலோ அவருக்கு பெருத்த நன்மை ஒன்றும் கிடைத்துவிடப்போவது இல்லை. அவர் உயிரோடு இருந்தபோது எஞ்சிய வாழ்நாளை கழித்திட அவ்வளவு கஷ்டப்பட்டார்.
இந்த உலகத்தாரிடம் ஒரு தவறான பழக்கம் இருக்கிறது. ஒருவர் இருக்கும் போது அவர் செய்த சாதனையை, தொண்டினை சொல்லி அவரை பாராட்டவோ அவருக்கு உதவியோ செய்திட மாட்டார்கள். ஆனால் அதே நபர் இறந்த பிறகு அவருக்கு சிலைகள் வைப்பார்கள், விருதுகள் வழங்குவார்கள், ஆண்டுக்கு ஆண்டு புகழஞ்சலி செலுத்துவார்கள். இருக்கும் போது அவருக்கு கிடைக்காத உதவியோ எதுவோ இறந்தபின்பு கொடுக்கப்பட்டால் அதனால் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது? இந்தக் கேள்வியோடு இந்த கட்டுரையை படிக்க துவங்குங்கள்.
சுதேசி என்ற சொல்லுக்கு துளிகூட பிறழாமல் வாழ்ந்த ஒருவர் யாரென்றால் வ.உ.சி என வரலாறு கூறும். இதற்க்கு பாரதியார் தான் மிகச்சிறந்த சாட்சி. ஆம் நண்பர்களே, பலர் பல அந்நிய பொருள்களை தவிர்க்க முடியாமல் பயன்படுத்திக்கொண்டே சுதேசி, அந்நிய நாட்டுப்பொருள்களை புறக்கணிப்போம் என பேசிக்கொண்டு இருக்கையில் எழுதுவதற்கு சவாலான கரடுமுரடான காகிதம், மைக்கூடு, புறா சிறகினால் ஆன எழுதுகோல் , அலங்காரமில்லாத கடிகாரம் என முற்றிலும் உள்நாட்டில் தயாரான பொருள்களையே பயன்படுத்தி வந்தார். இதனை பாரதியார் பெருமைப்பட பலரிடம் சொல்லி மகிழ்வார்.
வஉசி என அழைக்கப்படும் வ வு சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று [செப்டம்பர் 05, 1872]
சுதேசி கப்பல்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக பேசினாலே பெரும் குற்றம் என இருந்த சூழலில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கவேண்டுமானால் சுதேசப்பற்றினை நாட்டு மக்களுக்கு புகுத்திட வேண்டுமானால் அந்நியர்களுக்கு ஈடாக கடல் ஆதிக்கம் பெற்றே தீர வேண்டும் என எண்ணினார். இதற்காக மதுரை தமிழ் சங்க தலைவர் வள்ளல் பாண்டித்துரைதேவர் அவர்களை தலைவராகக்கொண்ட சுதேசி நாவாய் சங்கம் எனும் சங்கம் 1906 ஆம் ஆண்டு உருவாகியது. முதலில் இலங்கையில் இருந்து கொண்டுவந்த வாடகை கப்பலை கொண்டு நிர்வாகத்தை நடத்தினாலும் சொந்த கப்பலை வாங்கினால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையில் எஸ்.எஸ்.காலியோ மற்றும் எஸ்.எஸ்.லாவோ எனும் இரண்டு கப்பல்களை வாங்கினார்கள்.
சுதேசி கப்பலுக்கு மக்களிடம் பெருத்த ஆதரவு இருந்தது. வருமானம் என்பதனையும் தாண்டி இந்தியர்களுக்கு சுதேச உணர்வினை வ.உ.சி யின் சுதேச கப்பல்கள் ஊட்டின என்று சொன்னால் மிகை ஆகாது. சுதேசி கப்பல்களுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை பொறுக்க முடியாத ஆங்கிலேயர்கள் பல வழிகளிலும் அதனை முடக்க தொந்தரவு கொடுத்தார்கள். வ.உ.சி யை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பது அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. முற்றிலும் இலவசமாக பயண சீட்டு வழங்குவது, இலவசமாக குடைகள் வழங்குவது என எந்த எல்லைக்கும் செல்ல தயாரானார்கள். இதனால் சுதேசி கப்பல் நிறுவனம் திவாலாகும் நிலைக்கு சென்றது.
சுதேசி கப்பல் முதல் மளிகை கடை வரை
சுதந்திர போராட்டத்தில் தேசத்திற்க்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர் விடுதலை ஆகும் போது கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் அவருக்காக சிறை வாசலில் வரவேற்க காத்திருந்தார்கள். இப்படி சொல்ல எனக்கும் மகிழ்ச்சி தான் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை நண்பர்களே, வெறும் இரண்டு நபர்கள் தான் அவரை வரவேற்க வந்திருந்தார்கள், அவர்கள் சுப்ரமணிய சிவாவும், சுரேந்திரநாத் ஆர்யாவும் தான்.
கப்பல் மூலம் வாணிபம் செய்த வ.உ.சி எவராலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டார். சிறை தண்டனை காரணமாக வழக்கறிஞர் பதவியை செய்ய முடியாத அவர் மளிகைக்கடை நடத்திட முற்பட்டார். தேசத்திற்க்காக சுதேசி கப்பல் விட்டவர் குடும்பத்தை காப்பாற்ற மளிகைக் கடை நடத்தினார். அதில் போதிய அனுபவம் இல்லாமையால் நஷ்டத்தை சந்தித்தார். பின்னர் ஒரு வெள்ளைக்கார நீதிபதி திரு வாலஸ் அவர்களின் உதவியினால் மீண்டும் வழக்கறிஞர் பதவியை பெற்றார்.
அப்போது இருந்தவர்களுக்கு தான் இந்த நிலைமை என நினைக்காதீர்கள். இப்போதும் இதற்க்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. திரு நல்லக்கண்ணு அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவரை ஆகா ஓஹோ என புகழுவார்கள். ஆனால் தி நகரில் அரசு வழங்கிய வீட்டை காலி செய்திட வேண்டும் என அரசு அறிவுறுத்தியபோது என்ன செய்தார்கள், எத்தனை பேர் பணம் சேகரித்து அவருக்கு ஒரு வீடு கட்டிக்கொடுத்தார்கள். அரசு மாற்று வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள் அவ்வளவு தான்.
உங்களது குடும்பத்தினரோ, உங்களது ஊர்க்காரரோ யாராக இருந்தாலும் அவர் இருக்கும் போதே அவர் செய்த நற்செயல்களுக்கான நன்மையை அவர்களிடம் வழங்கிவிடுங்கள். அவர்கள் இறந்த பிறகு நீங்கள் செய்கின்ற எந்தக்காரியமும் அவர்களுக்கு உதவிடப்போவது இல்லை.
மாறுவோம் !
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!