உலகின் பார்வை அனைத்தும் அமெரிக்க தேர்தலில் தான் இருக்கிறது. ஏற்கனவே அதிபராக இருக்கும் டிரம்ப் மீண்டும் அதிபராகப் போகிறாரா அல்லது ஜோ பிடன் வென்று புதிய அதிபராகப் போகிறாரா என எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படி உலக நாடுகளே இந்தத் தேர்தலை கவனிப்பதற்கு முக்கியக்காரணம், வென்று அதிபராக வரப்போகிறவர்கள் செயல்பாடு உலக நாடுகளின் மீது ஏதோ ஒருவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனால் தான் இந்த எதிர்பார்ப்பு.
தேர்தல் நடைபெறும்போதே சில கணிப்புகள் உலாவந்தன. அதன்படி, டிரம்ப் தேர்தலில் தோற்றாலும் கூட அவர் தோல்வியை ஒப்புக்கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு அவ்வளவு எளிதில் வெளியேற மாட்டார் என சொல்லப்பட்டது.
அமெரிக்க தேர்தலில் மக்கள் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே தபால் ஓட்டுக்களை பதிவு செய்திட முடியும். அதேபோல தேர்தல் நாளன்றும் வாக்களிக்கலாம். தாங்கள் அளித்த தபால் ஓட்டுக்களை மாற்றிட விரும்பினாலும் அதனையும் செய்திட முடியும். சில மாகாணங்கள் இத்தகைய சிறப்பு வாய்ப்புகளை கொண்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த சில மணி நேரங்களில் ஜோ பிடன் நல்ல வித்தியாசத்தில் முன்னேறத் துவங்கினார். டிரம்ப் பெரும் வித்தியாசத்தில் தோல்வியுறக்கூடும் என நினைத்தபோது டிரம்ப் வெல்ல ஆரம்பித்து ஜோ பிடனுக்கு நெருக்கமாக வந்தார். தற்போதைய நிலையில் டிரம்ப் 214 எலெக்டோரல் இடங்களையும் ஜோ பிடன் 264 இடங்களையும் பிடித்திருக்கின்றனர் . அமெரிக்காவின் அதிபராக ஆவதற்கு 270 இடங்களை பிடிக்க வேண்டும்.
சில முக்கிய மாகாணங்களில் தபால் வாக்குகளில் தான் மயிரிழை வித்தியாசத்தில் ஜோ பிடன் வென்றுள்ளார். இதுதான் டிரம்ப்க்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
“தபால் வாக்குகளில் பெரும் முறைகேடு நடந்திருக்கிறது. எனக்கு போடப்பட்ட தபால் வாக்குகள் மறைக்கப்பட்டுள்ளன. நாம் வென்றிருக்கவேண்டியவர்கள், நாம் வென்றே விட்டோம். இந்த முறைகேட்டை தடுப்பதற்கு உச்சநீதிமன்றம் செல்வோம்” இப்படித்தான் வாக்கு எணிக்கை முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசினார்.
மறுபக்கம் ஜோ பிடன் “கடைசி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமைதியாக இருங்கள். நாமே வெல்வோம்” என்றார்.
சொன்னபடியே பென்சில்வேனியா, ஜார்ஜியா, நார்த் கரோலினா உள்ளிட்ட இடங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திட வேண்டுமென டிரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
போதுமான இடங்களில் ஜோ பிடன் வென்றாலும் கூட அந்த முடிவுகளை டிரம்ப் ஏற்க மாட்டார் என்பதற்கு இந்த வழக்கு முதல்படி. அதிபர் டிரம்ப் அவர்களின் இந்த செயல்பாட்டை பல்வேறு நாளிதழ்களும் மக்களும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.
இந்தியாவிற்கு அடுத்த பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தகைய ஜனநாயக விரோத போக்குகள் மிகவும் ஆபத்தானவை. பிற நாடுகளும் இதையே முன்னுதாரணமாக பின்பற்றி செயல்படவும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தோல்வியடையும் ஒவ்வொருவருமே தேர்தலை குறை சொல்லுவது வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கிறது. ஜனநாயத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று நேர்மையாக நடக்கும் தேர்தல். அதனை நடத்துவதற்கு நேர்மையான அதிகாரமிக்க தேர்தல் ஆணையம் அவசியம். ஆட்சியாளர்கள் தேர்தல் ஆணையத்தை வளைக்கும் அல்லது பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடாதவரைக்கும் ஜனநாயகம் செழித்தோங்கும்.
டிரம்ப் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பாமரன் கருத்து