Site icon பாமரன் கருத்து

திருநங்கைகள் – அவர்களும்  மனிதர்களே | Vinoth Kumar


உலகில் வாழும்  உயிரினங்களின் ஒவ்வொரு இனத்திலும் சில  நேரங்களில்  மாறுதல் நடைபெறுவது வழக்கம். இதில் மனிதர்களுக்கு  மட்டும்  விதிவிலக்கா என்ன?
மனித இனமானது ஆண் , பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் என வகைப்படுத்தப்படுகிறது. இதில், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆண் (திரு) மற்றும் பெண்ணிண் (நங்கை) குணங்கள் கொண்டதால் திருநங்கை என்றழைக்கப்படுகிறார்கள்.

திருநங்கைகள் என்பவர்கள் யார் ?

ஆணாய் பிறந்து பருவமெய்தும் வயதில் உடலின்  குரோமோசோம்கள் குறைபாட்டால் மனதளவில் பெண்ணிண் குணங்களைப் பெறுபவர்கள்தான் திருநங்கைகள். இவையனைத்தும்,  இயற்கையாக நடைபெறுகிறது. இஃது யாருக்கு வேண்டுமானலும் நடக்கலாம். ஏன் , நம் வீட்டிலயே இவ்வாறு நடக்கலாம். பெண்ணிண் குணங்கள் அதிகரிக்கும்போது அவர்கள் தங்களை பெண்ணாக மாற்றிக்கொள்வதற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். இவர்களைத்தான் , நாம் உஷ் , அலி, ஒன்பது, அரவணை என்று வக்கிரமாக அழைக்கிறோம். இதன் காரணமாக , முன்னால் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் , மூன்றாம் பாலினத்தவர்கள் ஆண் (திரு) மற்றும் பெண்ணிண் (நங்கை) குணங்கள் கொண்டதால் திருநங்கை என்று அழைத்தார்.

திருநங்கைகளிடம் வெறுப்பு ஏன்?

 

இரயில்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இவர்களை கண்டு அஞ்சாதவர்கள் இருக்கமாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் திருநங்கைகள்தான். அவற்றுள் சில:
1 . பயணம் செய்பவர்களிடம்  பணம் வசூல் செய்வது
2 . பொது இடங்களில் ஆபாச வார்த்தைகளில் பேசுவது மற்றும் நடந்துகொள்வது
3 . பணத்திற்காக தவறான தொழில் செய்வது
இதுபோன்ற காரணங்களினால் அவர்களை அனைவருமே வெறுக்கின்றனர்.

ஏன் அவர்கள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? 

உண்மையில் கூர்ந்து உற்றுநோக்கினால், அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதற்கு  காரணம் நம்மில் பலர்தான். ஆம். தன் மகன் “பெண்ணிண் குணங்களை அடைந்துள்ளான் . எதுவாயினும் , அவன் என் மகன்”  என நினைத்திருந்தால் அல்லது அருகில் உள்ளவர்கள் அவர்களின்  பெற்றோர்கள்  மற்றும் திருநங்கைகளை கேலி செய்யாமல் இருந்திருந்தால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே(ற்)றி இருக்கமாட்டார்கள். என்ன செய்வது? அது நம் பிள்ளை இல்லையே!
அவர்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள் தவறல்லவா? தவறுதான். அஃது தவறென்று தெரிந்தும் அவர்களிடம் செல்கிறாயே? நீ யார் ? மாட்டிக்கொள்ளாதவரை யாவரும் யோக்கியர்களே.
அவர்கள் மற்றவர்களிடம் பணம் பறிக்கிறார்களே? அரசாங்க வேலையில் அமர்ந்து கொண்டு மாத சம்பளம் வாங்கிக்கொண்டு, பணப்பசியால் ஏழைகளிடமும்,  அன்றாட பிழைப்பிற்க்கே திண்டாடும் மக்களிடமும் சுரண்டி வாழும் சில மனிதனென்னும் மிருகங்களுக்கு அல்ல அல்ல மிருகங்கள் அவ்வாறு செய்வதில்லை சில பணந்தின்னிகளுக்குகூட நீ கொடுக்கிறாய் என்பதையும் மறவாதே. ஆனால் , இவர்களோ பெற்றவர்களால் வீட்டைவிட்டு விரட்டப்பட்டு, சமூகத்தாரால் ஒதுக்கப்பட்டு, உண்ண  உணவும் கிடைக்காமல் செய்ய வேலையும் கிடைக்காமல் சிலரின் உடற்பசியை போக்கி தங்களின் வயிற்றுப்பசியை ஆற்றுகிறார்கள். இவர்களுக்கு கொடுப்பதில் தவறில்லை .

திருநங்கைகளின் வளர்ச்சி

 

திருநங்கைகள் பலரின் வாழ்வு இப்படியிருக்க , அவர்களுக்கு உதாரணமாக பல திருநங்கைகளின் வளர்ச்சி வியக்கவைக்கிறது. ஆம் . சேலத்தை சார்ந்த திருநங்கையான பிரித்திகா யாஷினி இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரியாக பதவி பெற்றுள்ளார். அடுத்து, திருநங்கை கல்கி சுப்பிரமணியம். இவர் , எழுத்தாளர், நடிகர், திருநங்கை ஆர்வலர் மற்றும் தொழில் முனைவர் போன்றவற்றில் சிறந்து விளங்குகிறார். இன்னும் முகம் தெரியாத
பலர் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

திருநங்கையர் தினம்

திருநங்கைகளை பாதுகாக்கும் வகையில், ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று , தமிழக அரசானது மார்ச் 11, 2011- ஆம் தேதியன்று ஏப்ரல் 15 ஆம் தேதியை திருநங்கையர் தினமாக அறிவித்தது.

நாம் என்ன செய்யவேண்டும்?

முடிந்தவரையில் அவர்களை ஏளனமாக பார்க்காதீர்கள். நம் வீட்டில் யாராவது அவ்வாறு இருப்பின் அவர்களிடமும் அன்பு செலுத்துங்கள். யாராவது அவர்களை வீட்டைவிட்ட அனுப்பியிருந்தால் அவர்களை மறுபடியும் சேர்த்துக்கொள்ளுங்கள். திருநங்கைகள் வேலை கேட்டால் கொடுங்கள். அவர்களாலும் முடியும். ஏனெனில் அவர்களும்  மனிதர்களே….

க. வினோத்குமார்

Share with your friends !
Exit mobile version