Site icon பாமரன் கருத்து

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்கள் நடந்தது எப்படி? | The hiroshima incident

ஹிரோஷிமா தினம்

ஹிரோஷிமா தினம்

ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 06 ஆம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு வீச்சில் பல்லாயிரம் பேர் இறந்த செய்தி கிடைப்பதற்குள் மூன்றுநாள் கழித்து ஆகஸ்ட் 09 ஆம் தேதி நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டில் பலர் இறந்தனர்

வரலாறு எழுதப்படும் போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல்கள் நிச்சயமாக கறுப்பு எழுத்துக்களால் எழுதப்படும். லிட்டில் பாய் எனப்படும் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் 1,34,000 பேரும் நாகசாகியில் வீசப்பட்ட இன்னொரு அணுகுண்டில் 74000 பேரும் இறந்தார்கள். இவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது மட்டும் நிச்சயம்.

அரசன் தன் எதிர்நாட்டை அடைவதற்கு அல்லது அழிப்பதற்கு யானைப்படை, குதிரைப்படை மற்றும்  காலாட்படையைக்கொண்டிருப்பான் என இதிகாசத் தொடர்களில் பார்த்திருப்போம் அல்லது புத்தகங்களில் படித்திருப்போம் அல்லது சொற்பொழிவுகளில் கேட்டிருப்போம். அரசர்களுக்கிடையில் நடக்கும் போர்களில் அரசர்கள், அமைச்சர்கள், போர்வீரர்கள் மட்டுமே உயிர்துறப்பார்கள். அதிலும் போர்க்களங்களில் மட்டுமே. அதுமட்டுமல்லாமல், போர் நடக்கும் முன்பு அவர்களுக்குள் சில உடன்படிக்கைகள் நடப்பதுண்டு. உதாரணத்திற்கு, இரவில் போர் தொடுக்கக்கூடாது, பெண்கள் மற்றும் குழந்தைகளை  போர்க்களங்களில் அனுமதிக்கக்கூடாது முதலியன. ஆனால், அறிவியலின் வளர்ச்சி மேலோங்கிய இந்நாளில், ஒருபக்கம் மனித வளர்ச்சிக்காக பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டாலும் இன்னொருபுறம் பாதுகாப்பிற்க்காக என்ற போர்வையில் ஒரு சில நிமிடங்களில் உலகையே அழித்தொழிக்கக்கூடிய ஆயுதங்களையும் மனிதன் உருவாக்கிக்கொண்டே போகிறான். அப்படி உருவான ஆயுதங்களில் மனிதனின் மிகவும் மோசமான கண்டுபிடிப்பு இந்த அணு ஆயுதங்கள்.

இரண்டாம் உலகப்போர்

1939 ஆண்டுகளின் இறுதியில் தொடங்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் தொடர்ந்தது. ஒவ்வொரு நாடும் தாங்கள் வல்லரசாகும் முனைப்பில் நேசநாடுகள், அச்சுநாடுகள் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து போர்தொடுத்தனர். அச்சு நாட்டைச்சார்ந்த இத்தாலியும் ஜெர்மனியும் ஒருகட்டத்தில் தோல்வியின் விளிம்பிலிருந்தன.ஆனால், அமெரிக்காவின் நேரெதிரியான அச்சுநாட்டைச் சார்ந்த ஜப்பானின் ஆதிக்கம் மட்டும் உச்சத்திலிருந்தது. தனியாக நின்று நேசநாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் போர்ப்படைத் தளத்தை உடைத்தெரிந்தது. அத்துடன், போர்க்கப்பல்கள் அனைத்தையும் சேதாரப்படுத்தியது. நிலைகுலைந்த அமெரிக்க அரசு, ஜப்பானை எதிர்கொள்ள தீக்குண்டுகளை வீசியது. இதனால் ஜப்பானின் ஆதிக்கம் சற்று குறைந்தது. இருப்பினும் வல்லரசுப் பாதையை நோக்கிக்கொண்டிருந்த ஜப்பான் அதற்கு பணியவில்லை, எதிர்த்து மீண்டும் போரிட்டது. நிலைமையை சமாளிக்க நேசநாடுகள் சார்பில் அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் 1945 ஆம் ஆண்டு ஜப்பானை எச்சரித்தார். அதில், “தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடையுங்கள் இல்லையேல் விளைவு பயங்கரமானதாக இருக்கும்” என்றார். செவிசாய்க்காத ஜப்பான் அரசு போரைவிடவில்லை. கொதிப்படைந்த அமெரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டை பயன்படுத்தலாமென தீர்மானித்தது.

லிட்டில் பாய் மற்றும் பாட் மேன்

அணுகுண்டுகளால் ஏற்படும் விளைவுகளை முன்னரே அறிந்திருந்தும் வல்லாதிக்க எண்ணத்திலிருந்த அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதன்முதலில் அணுஆயுதத்தை போரில் பயன்படுத்தியது. அமெரிக்காவின் விமானப்படையைச் சார்ந்த போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து 4000 கிலோ எடையும் 3 மீட்டர் நீளமும் கொண்ட ‘லிட்டில் பாய்’ என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவின் மையப்பகுதியில் 540 மீட்டர் உயரத்திலிருந்து வீசப்பட்டது.

ஜப்பானில் வாழும் அப்பாவி பொதுமக்கள் வழக்கம்போல் தங்களது அன்றாட வேலைகளைக்கொண்டிருந்தனர். காலை 8.15 மணியளவில் பலத்த சத்தத்துடன் சூரியனே கீழே விழுந்ததுபோல ஒளிவீசியது. அணுகுண்டு வெடித்த சிறிதுநேரத்தில் 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் அனைத்தும் முழுமையாக அழிந்ததில் சுமார் 1,40,000 மக்கள் உயிரிழந்தனர். ஹிரோஷிமா தாக்குதல் பற்றி அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் அறிவிக்கப்பட்ட பின்புதான் ஜப்பான் அரசுக்கு முழுமையான தகவல் கிடைத்தது.

உலகம் முழுவதும் ஹிரோஷிமா பற்றிய தகவல் கிடைப்பதற்குள், மூன்று நாளுக்குப்பின்னர் அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி, ஜப்பானிலுள்ள மற்றொரு இடமான நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு 500 மீட்டர் உயரத்திலிருந்து வீசப்பட்டது. இந்த அணுகுண்டு பெயர் பாட் மேன் (அ) குண்டு மனிதன் எனப்பெயரிட்டனர். இதில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உயிர் தப்பியவர்கள் பல ஆண்டுகள் கழித்தும் கூட கதிரியக்க நச்சினாலும் புற்றுநோயினாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு இறந்தார்கள். அணுகுண்டு வீசப்பட்டு நான்கு ஆண்டுகள் ஹிரோஷிமாவில் எந்தவொரு பூக்களும் பூக்கவில்லை. இன்றும் கூட அந்த நகரங்களில் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே பிறக்கிறார்கள்.

 

ஜப்பானின் அணுஆயுத தத்துவங்கள்

செப்டம்பரில் 3 குண்டுகளையும் அக்டோபரில் 3 குண்டுகளையும் ஜப்பானின்மீது மீண்டும் உபயோகிக்க அமெரிக்கா முடிவுசெய்திருந்தது. ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, தோல்வியை ஒப்புக்கொள்வதாக ஜப்பான் அறிவித்தது. அதன்பின்னர், ஒருவழியாக இரண்டாம் உலகப்போர் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று முடிவுக்கு வந்தது. அணு ஆயுதத்தின் தன்மையை முற்றிலும் உணர்ந்திருந்த ஜப்பான், போருக்குப்பின் மூன்று தத்துவங்களை ஏற்றது.அவைகள்:

1. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லை
2. அணு ஆயுதங்களை ஜப்பானில் அனுமதிப்பதில்லை
3. அணு ஆயுதங்களை உபயோகிப்பதில்லை.

 

அணுஆயுத உற்பத்தியில் இந்தியா

தற்போதைய நிலவரப்படி உலக நாடுகளில் சுமார் 40 நாடுகளிடம் அணுஆயுத மூலப்பொருட்கள் உள்ளதாகவும் அத்துடன் 31,500-க்கும் மேற்பட்ட அணுஆயுதங்கள் உள்ளன எனவும் சமீபத்தில் பத்திரிக்கைகளில் வெளியாகின. ஒரு நாட்டின் வலிமையானது ஆயுதங்களைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான், அமெரிக்கா அரசானது உலக வல்லரசில் தன்னை நிலைநாற்றிக்கொள்ள ஆண்டொன்றுக்கு ரூ. 2900 கோடி வரை அணுஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்குகிறது. 1998-ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது மூலமாக இந்தியா தானும் ஒரு அணுசக்தி வாய்ந்த நாடு என உலகிடம் தன்னை அறிவித்துக்கொண்டது.

2009-ல் ஐ.நா.வில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், “அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க இந்தத் தீர்மானம் வழிவகுக்கும். இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலும்.” என்றார். ஆசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, மற்றும் சீனா நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் சீனா மட்டும் ‘அணு ஆயுதப் பரவல் தடுப்பு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் பாகிஸ்தானும் அதற்கு உடன்படவில்லை. இந்தியாவை பாகிஸ்தானும், பாகிஸ்தானை இந்தியாவும் பழிசுமத்தி அதில் கையெழுத்திட மறுத்தது.

அணு ஆயுதமில்லா உலகம் படைப்போம்

வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஒருமுறை மட்டுமே கிடைத்த வரம். அதனை நிம்மதியாக வாழ்கிறோமா? நிச்சயமாக இல்லை. எப்போது யார் தாக்குவார்கள் என்று அஞ்சி அஞ்சியே தானே வாழ்கிறோம். தேசத்தின் பாதுகாப்பு என்று ஒவ்வொரு நாடும் அணு ஆயுத தயாரிப்பில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. வெளிப்படையாக தெரிந்த கணக்குகளின் அடிப்படையில் தான் இத்தனை அணுகுண்டுகள் இருக்கின்றன என பேசுகிறோம். ஆனால் மறைக்கப்பட்டு இருக்கின்ற அணுகுண்டுகள் எத்தனையோ? போர்களில் பெரும்பாலான நேரங்களில் இறப்பது அப்பாவி பொதுமக்கள் தான். அன்றிலிருந்து இன்றுவரை பொதுமக்களை துச்சமென கருதி அவர்களை கொன்று குவிக்கும் போக்கு அரங்கேறி வருவது வேதனைக்கு உரிய விசயம்.

அரசாங்கத்திடம் ஆயுதங்கள் இருக்கும் வரைக்கும் பிரச்சனை இல்லை. அதே ஆயுதங்கள் தவறான நபர்களிடம் கிடைக்குமாயின் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகக்கொடுமையானதாக மாறிவிடும். ஆகவே அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து அணு ஆயுதமில்லா உலகம் படைக்க முன்வர வேண்டும். ஆயுதங்களினால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லையென்ற மன நிலைக்கு மாற வேண்டும். சாத்தியமில்லாதது எதுவுமில்லை, ஆகவே அணு ஆயுதமில்லாத உலகினை படைக்க பாடுபடுவோம்.

கட்டுரை எழுதியவர் : வினோத் குமார்




Share with your friends !
Exit mobile version