எழுத்தாளர் மருதன் அவர்கள் எழுதிய ‘ஹிட்லரின் வதை முகாம்கள்’ என்ற புத்தகத்தின் வாயிலாக வரலாற்றின் கொடுமையான “வதை முகாம்கள்” குறித்து தெரிந்து கொண்டிருப்போம். அங்கே, ஒரு மனிதன் சக மனிதனை இவ்வளவு மோசமாக நடத்திட முடியுமா என்ற கேள்விக்கு “முடியும்” என்பதை நிரூபித்து இருக்கும் ஹிட்லரின் வதை முகாம்கள். அப்படிப்பட்ட கொடுமையான, அதே சமயம் மிகவும் பாதுகாப்பான வதை முகாமில் இருந்து யாரேனும் தப்பித்து இருக்க வாய்ப்பு உள்ளதா? அப்படி ஒருவர் தப்பித்து இருந்தால் அவரால் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் புத்தகம் தான் “The Happiest Man on Earth” என்ற புத்தகம். இதனை தமிழில் “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் எடி ஜேக்கூ” என மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
புத்தகத்தின் பெயர் : உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்
தமிழில் எழுதியவர் : நாகலட்சுமி சண்முகம்
விலை : ரூ 260
ஜேக்கூ 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாஜிப் படையினரால் கைது செய்யப்பட்டு அடித்து உதைக்கப்பட்டு வதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அன்று துவங்கி அடுத்த ஏழு ஆண்டுகள் யாரும் சொல்ல முடியாத வகையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். தப்பிக்க வாய்ப்பே இல்லாத அந்த வதை முகாமில் இருந்து தப்பித்தார் ஜேக்கூ. ஏழு ஆண்டுகளாக இவ்வளவு கொடுமைகளை அனுபவித்த நாம் இனி மீதமுள்ள வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என தனக்குத்தானே தீர்மானம் செய்து கொண்டார்.
அவருடைய 100 ஆவது பிறந்தநாளில் வெளியிடப்பட்ட நூல் தான் இது.
எப்பேற்பட்ட கொடுமையை அனுபவித்தவராலும் கூட நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை நிரூபித்துக்காட்டுகிறது இந்தப் புத்தகம்.
இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பின்வரும் வரிகள் புத்தகம் பற்றி உங்களுக்கு சொல்லும்,
மகிழ்ச்சி வானத்திலிருந்து குதிப்பதில்லை. அது உங்களுடைய கரங்களில்தான் இருக்கிறது. மகிழ்ச்சி உங்களுக்கு உள்ளிருந்தும் நீங்கள் நேசிக்கின்ற மக்களிடமிருந்தும்தான் முளைத்தெழுகிறது. நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால், நிச்சயமாக நீங்கள் ஒரு கோடீஸ்வரர்தான்! இந்த உலகில் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு முறையும் இரட்டிப்பாகின்ற ஒரே விஷயம் மகிழ்ச்சிதான்.
நான் இவ்வுலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக இருக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, இதுதான் மிகச் சிறந்த பழிவாங்கலாகும்!
பாமரன் கருத்து