Site icon பாமரன் கருத்து

“கேசவானந்த பாரதி வழக்கு” – இந்தியாவின் ஆத்மா காப்பாற்றப்பட்ட வழக்கு

"கேசவானந்த பாரதி வழக்கு" - இந்தியாவின் ஆத்மா காப்பாற்றப்பட்ட வழக்கு

"கேசவானந்த பாரதி வழக்கு" - இந்தியாவின் ஆத்மா காப்பாற்றப்பட்ட வழக்கு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தவிதியையும் மாற்றுகிற அல்லது புதிதாக எப்படிப்பட்ட சட்டத்தையும் அதில் இணைக்கிற அதிகாரம் இருக்கிறதா என்பதற்கான பதிலை கொடுத்த மிகமுக்கியமான வழக்கு “கேசவானந்த பாரதி வழக்கு”

 

இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் ஒரு வழக்கினை பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள் ஒரு வழக்கினை குறிப்பிட்டு பேசுவார்கள். அந்த வழக்கு தான் “கேசவானந்த பாரதி வழக்கு” [Kesavananda Bharati]. ஏப்ரல் 24,1973 அன்று தலைமை நீதிபதி திரு சிக்ரி அவர்களை உள்ளடக்கிய 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு கட்சியின் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட அவர்களால் எந்த எல்லைக்கு அப்பாற்பட்டு சட்டங்களை இயற்ற முடியாது என்பதை இந்த வலிமை மிகுந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியது. இந்த வழக்கு குறித்த புரிதலை கொண்டுவருவதற்காக கோலக்நாத் வழக்கு முன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. [Kesavananda Bharati Explained in Tamil]

https://youtu.be/gEQFrhALwLo

கோலக்நாத் வழக்கு

 

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கோலக்நாத் என்ற நில உடைமையாளரின் 500 ஏக்கர் சொத்து அரசால் கையகப்படுத்தப்பட்டது. அவருடைய நிலத்தை அரசாங்கம் நில சீர்திருத்தச்சட்டம் மூலமாக கையகப்படுத்தியது. ஆனால் அவரோ அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அப்படி கொண்டுவந்த சட்டத்தை  9வது அட்டவணையில் சேர்த்தால் அதுவும் செல்லுபடியாகாது என்பது அவரது வாதம். 

 

1967 ஆம் ஆண்டு, இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரிக்க முதன் முதலாக 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சை உச்ச நீதிமன்றம் நியமனம் செய்தது.

 

வழக்கை விசாரித்த பெருபான்மையான (மெஜாரிட்டி) நீதிபதிகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை குறைக்கவோ, கட்டுப்படுத்தவோ, ரத்து செய்யவோ பாராளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று தீர்ப்பளித்தனர்.

கேசவானந்த பாரதி வழக்கு

 

குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் அதிகார மோதல் இருந்துகொண்டே இருந்தது. நாடாளுமன்றம் கொண்டுவரும் பெரும்பான்மையான சட்டதிருத்தங்கள் அல்லது சட்டங்கள் உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டன. கோலக்நாத் வழக்கில் அப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு 1971, நவம்பர் 5 அன்று 24-ஆவது திருத்தம் மூலம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 மற்றும் 368 ஆகியவற்றில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இந்த திருத்தங்கள் வாயிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் திருத்துவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டது. 1972-ஆம் ஆண்டு ஏப்ரலில் அரசியற் சட்டப்பிரிவு 31-க்கு கொண்டு வரப்பட்ட 25-ஆவது திருத்தத்தின் மூலம் தனியார் நிலத்தையோ, அசையாத சொத்துகளையோ பொது நலனுக்காக அரசு கையகப்படுத்தும் போது இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது. இந்தகாலகட்டத்தில் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நில சீர்திருத்த சட்டத்தின் அடிப்படையில் கேரளாவை சேர்ந்த எதனீர் மடத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து மடாதிபதி “கேசவானந்த பாரதி” உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த சட்டம் சரியானதா அல்லது தவறானதா என்பதை அறிந்துகொள்வதற்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தின் முன்னால் வேறொரு முக்கியமானதொரு கேள்வி எழுந்தது. அந்தக்கேள்வி என்னவென்றால் “நாடாளுமன்றம் எந்த சட்டத்தை வேண்டுமானாலும் இயற்றிக்கொள்ள முடியுமா? உதாரணமாக, இந்திய குடிமக்களின் பேச்சுரிமையை தடை செய்யவேண்டும் என்று கூட பெரும்பான்மை இருந்தால் சட்டம் நிறைவேற்றிக்கொள்ள முடியுமா?” என்பது தான் அது. 

 

பாராளுமன்றத்தின் அதிகாரம் குறித்து வரையறை செய்கின்ற பிரிவு 368 ஐ மேலோட்டமாக படிப்பவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் எதை வேண்டுமானாலும் சட்டமாக இயற்றலாம் மாற்றலாம் என்று தான் புரிந்துகொள்ள முடியும்.

Article 368 (1) of the Constitution of India grants constituent power to make formal amendments and empowers Parliament to amend the Constitution by way of addition, variation or repeal of any provision according to the procedure laid down therein, which is different from the procedure for ordinary legislation.

 

நாடாளுமன்றத்தின் அதிகார வரையறை குறித்து விசாரணை செய்து தீர்ப்பளிப்பதற்காக 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற அமர்வு 68 நாட்கள் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்கள். இதுவரைக்கும் இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று அதிக நாட்கள் விசாரித்த வழக்கு “கேசவானந்த பாரதி வழக்கு” தான். அடுத்ததாக அதிக நாட்கள் விசாரிக்கப்பட்டது அயோத்தி வழக்கு. அப்படி அதிக நாட்கள் விசாரித்த பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. முடிவில் 6 நீதிபதிகள், பாராளுமன்றத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப்பிரிவையும் மாற்றவோ அல்லது புதிதாக எந்தவித சட்டத்தை இயற்றவோ உரிமை இருக்கிறது என தீர்ப்பளித்தது. பிற 7 நீதிபதிகள் இதற்கு எதிராக தீர்ப்பளித்தனர். அதன்படி, நாடாளுமன்றத்திற்கு கட்டுக்கடங்காத அதிகாரம் ஒன்று இல்லை. குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் இவற்றை மீறி எந்தவொரு சட்டத்தையும் நாடுமன்றத்தினால் இயற்றவே முடியாது என தீர்ப்பளித்தனர். வெறும் 1 நீதிபதி கூடுதலாக தீர்பளித்ததனால் தான் இந்தியாவின் ஆன்மா காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இல்லையேல் இந்நேரம் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அவர்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை இயற்றி இந்நேரம் ஏதேதோ செய்திருப்பார்கள். ஆனால் அரசுக்கு எதிராக தீர்ப்பு அளித்த நீதிபதிகள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தியது அப்போதைய அரசாங்கம். அசுர பலம் ஒரு அரசுக்கு கிடைக்கின்ற பட்சத்தில் பல சமயங்களில் அரசியலமைப்பை தங்களுக்கு ஏற்ற வகையில் வளைத்துக்கொள்ளவே முயல்கிறார்கள். இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அவர்களுக்கு 

 கடிவாளம் போட்டது.

 

 

நில சீர்திருத்தத்தைத் தொடரவும், பெரிய நிலங்களை விவசாயிகளுக்கு மறுபகிர்வு செய்யவும், சொத்துரிமையை கட்டுப்படுத்த முடியாது என்று அளித்திருந்த முந்தைய தீர்ப்புகளை மீறி, பாராளுமன்றம் சொத்து உரிமைகளை வரையறுக்கப்பட்ட அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதையும் கேசவானந்த தீர்ப்பு வரையறுத்தது.

9வது அட்டவணை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 

 

அரசியலமைப்பு சட்டத்தின் 9 வது அட்டவணை என்பது சிறப்புத்தன்மை வாய்ந்தது. ஒரு சட்டம் இயற்றப்பட்டு அந்த அட்டவணையில் இணைக்கப்பட்டுவிட்டால் அதை நீதிமன்றம் கூட கேள்விக்கு உட்படுத்த முடியாது என கூறப்பட்டு வந்தது. ஆனால் 2007 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் நாம் பின்னால் பார்க்கப்போகும் கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட ஏப்ரல் 24,1973 க்கு பிறகு 9 ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சுமார் 282 சட்டங்களையும் சட்ட மாறுதல்களையும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.

மேல்முறையீடு

 

இந்திராகாந்தி அவர்களின் அவசரகால ஆட்சிக்கு பிறகு கேசவானந்த பாரதி வழக்கில் 13 நீதிபதிகள் பாராளுமன்றத்தின் அதிகாரம் பற்றி கொடுத்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்காக 8 நீதிபதிகள் அமர்வை அமைத்தார் அப்போதைய தலைமை நீதிபதி A.N. ரே. பொதுவாக மறுபரிசீலனை அல்லது மேல்முறையீடு என்பது யாராவது செய்தால் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்படும். ஆனால் இவர் தானாகவே செய்தார். இதனால் பெரிய விமர்சனம் எழுந்தது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அவர் அமைத்த புதிய அமர்வை அவரே நீக்கிவிட்டார்.இந்த நடவெடிக்கையால் அவரது நேர்மைக்கு பங்கம் நேர்ந்தது.


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Exit mobile version