Site icon பாமரன் கருத்து

1984 போபால் விஷவாயு பேரழிவு : இன்றும் தொடரும் துன்பம்

போபால் விஷவாயு பேரழிவு : இன்றும் தொடரும் துன்பம்

போபால் பேரழிவு அல்லது போபால் துன்பம் என்பது டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபால் எனும் நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும்.

புதிதாக தொழிற்சாலைகள் துவங்கப்படும் போது இந்தியர்கள் உன்னிப்பாக அதனை கவனிப்பார்கள். மக்களுக்கும் சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பெரும்போராட்டங்களை நடத்திட தயங்கியதே இல்லை. உலகம் முழுமைக்கும் இந்தப்போக்கு இருந்தாலும் கூட இந்தியாவில் மிக அதிகம். இதற்கு மிகமுக்கியக் காரணம், பெரும் தொழிற்சாலைகள் விபத்துக்குள்ளானால் ஏற்படும் பாதிப்பை பெற்ற அனுபவம் தான். உலக அளவில் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்து என ஐநாவால் அறிவிக்கப்பட்ட “போபால் விஷவாயு” பேரழிவையும் அதன் பிறகு அரசு அந்த மக்களை அலைக்கழித்த விதத்தையும் கண்டுணர்ந்த பின்னரே மக்கள் விழித்துக்கொண்டுள்ளனர்.

முறையற்று துவங்கப்பட்ட தொழிற்சாலை

அமெரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் க்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று இந்தியாவில் இருக்கும் போபால் எனும் நகரில் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது. பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பதற்கு இந்த தொழிற்சாலை துவங்கப்பட்டது. இந்தியாவில் அவசர நிலையானது 25 ஜூன் 1975 அன்று பிறப்பிக்கப்பட்டது அதற்கடுத்த சில மாதங்களில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது [அக்டோபர் 31, 1975]. ஜனநாயகம் முற்றிலும் முடக்கப்பட்டு இருந்த ஒரு காலகட்டத்தில் தான் இந்த தொழிற்சாலை துவங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

மக்கள் அடர்த்தி மிக்கது போபால் நகரம். அந்த நகராமானது இலகுவான தொழில்துறை மற்றும் வணிக நடவெடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த பகுதி. அங்கே அபாயகரமான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அனுமதி கிடையாது. ஆனாலும் அபாயகரமான வேதிப்பொருள்களை பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலை நகரில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு இயங்கியது.

பூச்சிக்கொல்லிகள் தேவை குறையும் போது இந்த தொழிற்சாலையில் செல்வின் தயாரிக்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக பூச்சிக்கொல்லிகள் தேவை குறையவே வேறு இடத்திற்கு இயந்திரங்களை மாற்றும் பணியும் நடைபெற்று வந்தது. மிகக்குறைந்த லாபத்திற்கு இந்த தொழிற்சாலை இயங்கி வந்தபடியால் பாதுகாப்பு குறைபாடுகள் அதிக அளவில் இருந்தன.

போபால் விஷவாயு விபத்து

போபால் விசவாயு விபத்தானது தவிர்த்திருக்கப்படக்கூடிய நிகழ்வு தான். அங்கே வேலை செய்தவர்களின் அலட்சியம், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களேயே விபத்து அரங்கேறியது. தொழிற்சாலையில் 15,000 கேலன் கொள்ளளவு கொண்ட E610, E611, E619 என்ற மூன்று மிக் கலன்களில் இரண்டில்தான் எப்போதும் மிக் திரவம் இருக்க வேண்டும். ஒரு கலன் எப்போதும் காலியாய் இருக்க வேண்டும்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று மூன்று கலன்களிலும் மிக் நிரப்பப்பட்டிருந்தது. பணியாளர் ஒருவர் E610 அடையாளமிட்ட மிக் கலனை இணைக்கும் வால்வை மட்டும் மூடி, நீரைச் செலுத்தினார். பராமரிப்புப் பணியில் வாடிக்கையாகப் பைப்பைக் கழுவப் பயன் படுத்திய நீர் எதிர்பாராதவாறு, 13000 காலன் மிக் நிரப்பப்பட்ட E610 கலனில் தெறித்து கொட்டியது. மிகச்சிறிய கவனக்குறைவு, உலகையே அச்சுறுத்திய பேரழிவாக மாறித்தொடங்கியது அந்த நிமிடத்திலிருந்துதான்.

மிக் ரசாயனம் மிகவும் வீரியமானது. கொடிய நச்சுத்தன்மைகொண்ட இது நீருடன் கலந்தால் தீவிர வெப்பத்தை வெளியாக்கும் தன்மை கொண்டது. மொத்தத்தில் மிக், ‘மரண மூட்டும் விஷ ரசாயனம் ‘ என்கிறது வேதியியல் நூல் ஒன்று. எப்போதாவது இப்படி வால்வுகளில் கசிவு நிகழும்போது பாதுகாப்பு நடவடிக்கையாக வட்டத் தட்டை இடையில் நுழைத்து [Isolation with Blind Flange] கலன் தனித்து விடப்பட வேண்டும். ஊழியருக்கு அது நன்கு பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று பணியாளர் கவனக்குறைவாக தட்டை அமைத்துக் கலனைத் தனித்து விடவில்லை. கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கும் இது வரவில்லை. பைப்பைக் கழுவ நீர் திறக்கப்பட்டு செலுத்தப்பட்டது.

கொஞ்ச நேரத்தில் மிக் கலனின் அழுத்தம் 2 psi ஐ தொட்டுநின்றது. 11 மணிக்கு இரவு ஷிப்ட் குழு வந்தபோது அழுத்தம் 10 psi ஆகக் கலனில் ஏறியிருந்தது. அழுத்தமானியின் எச்சரிக்கையைக்கூட இரவுப்பணி அதிகாரி அலட்டிக்கொள்ளவில்லை. இன்னும் சில மணித்துளிகளில் உலகை உலுக்கிப்போடப்போகும் விபத்தை தடுத்து நிறுத்த கிடைத்த கடைசி சந்தர்ப்பத்தை அந்த கணத்தில் தவறவிட்டார் அந்த அதிகாரி. 12:40 நள்ளிரவில் அழுத்தம் 40 psi என உச்ச நிலையை அடைந்திருந்தது. தாங்கமுடியாத அழுத்தத்தால் கலன் உப்பி உடைய ஆரம்பித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது சரியாக இரவு மணி 12:45.

கலனின் உஷ்ணம் கூடியிருந்ததை கண்ட அவர், நடக்கவிருக்கும் விபரீதத்தை ஓரளவு யூகித்துக்கொண்டார். விடுவிடுவென முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மற்ற பணியாளர்களை ஆயத்தப்படுத்துவங்கினார். ஆனால் எல்லோரும் கண்களை கசக்கியபடி ஏதும் செய்யமுடியாதவர்களாக இருந்தனர். அதற்குள் விஷ வாயு கட்டுப்படுத்த முடியாத நிலையில் காட்டுத் தீ போல் பரவியது. அங்கிருந்த 120 அடி உயரப் புகைபோக்கியில் மேல் மட்டத்தில் வாயு பிதுங்கி வெளியேறியது. யோசிக்க நேரமின்றி அதிகாரிகள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காட்டு வெள்ளமாய் கட்டுப்படுத்தமுடியாமல் கிளம்பிய அதன் மீது நீரை பீய்ச்சி அடித்தும், மீறிக் கொண்டு வானில் மிதந்தது மிக் வாயு. காற்றைவிடக் கனமானது என்பதால் கொஞ்சநேரத்தில் காற்றின் தாக்கத்தினால் தாழ்ந்து தரை மட்டத்தில் பரவ ஆரம்பித்தது வாயு. 1:30 மணிக்கு அபாய சங்கு இயக்கப்பட்டது. சில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர். விழித்துக்கொண்ட சிலரும் கண்ணெரிச்சல், நெஞ்செரிச்சல் என உடல் உபாதைகளுடன் கொஞ்சநேரத்தில் தெருவிலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். மருத்துமனைகள் நிரம்பி, விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் தெருவில் கிடத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.

போபால் துயரம்

தூங்கும் போதே இறந்தவர்கள் பலர். மூச்சுத்திணறலால் இறந்தவர்கள் பலர் என போபால் விசவாயு விபத்து நடைபெற்ற நாள் அன்று மட்டும் 2259 பேர் இறந்தனர். அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8000 பேர் இறந்தனர். நடந்தது முடிந்தது என்று இல்லாமல் இன்றளவும் கூட அந்த தாக்குதலினால் உடலின் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறக்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இப்படி இருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 40,000 இருக்குமென கணக்கிடப்பட்டிருக்கிறது.

போபால் துயரத்தின் மிகக்கொடுமையான விசயம் யாதெனில், பிறக்கும் குழந்தைகள் இறந்து பிறந்தன; கருச்சிதைவு ஏராளமாக நடைபெற்றன; தாய்மார்களின் மார்பில் சுரக்கும் தூய்மையான சத்தான பால் என கருதப்படும் தாய்ப்பாலில் கூட பாதரசம், ஈயம், ஆர்கனோ குளோரின் போன்ற பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள் இருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. 

நச்சுவாயுக் கசிவின் காரணமாக நேரடியாகத் தாக்கப்பட்டு உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 3,787 என்று அரசால் அதிகாரப்பூர்வமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு, வெவ்வேறு நோய்களுக்கு ஆளாகி இறந்தவர்கள் பல்லாயிரக் கணக்கினர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2006இல் அரசு வெளியிட்ட தகவல்படி, 5,58,125 பேர் நச்சுவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுள் 3,900 பேர் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர்.

இது சரியான எண்ணிக்கை இல்லை என்றும் எண்ணிக்கையை குறைந்துக்காட்டுவதில் தான் அரசு பெருமளவில் அக்கறை காட்டியதாகவும் அங்குள்ள சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்

போபால் விபத்துக்கு கொடுக்கப்பட்ட இழப்பீடுகள்

இழப்பீடுகள் ஒருபக்கமிருந்தாலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதிப்படைய செய்த குற்றத்துக்காக யாரும் தண்டனையை அனுபவிக்கவில்லை என்பதே வருத்தமான செய்தி.

1985 ஆம் ஆண்டு இந்தியாவின் சார்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக கோரியிருந்தது இந்தியா. பிறகு 1989 ஆம் ஆண்டு நீதிமன்றத்துக்கு வெளியே மத்திய அரசு மற்றும் நிறுவனத்திற்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 470 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தர அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது, கொடுத்தது. இந்தத்தொகையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாகவும் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து இந்தியாவில் இருந்து வாரன் ஆண்டர்சன் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவில் பெரும் மக்கள் இறப்பதற்கும் பாதிப்பதற்கும் காரணமாக இருந்த ஒருவர் பாதுக்காப்பாக அனுப்பி வைக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதன் பிறகு பலமுறை சம்மன் அனுப்பியும் வாரன் ஆண்டர்சன் இந்திய நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. போபால் துயரம் நடைபெற்று 26 ஆண்டுகளுக்கு பின்பு தான் 8 பெரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். ஆனாலும் வாரன் ஆண்டர்சனை இந்தியா கொண்டுவர அரசு எந்தவித நடவெடிக்கையும் எடுக்கவில்லை. இறுதியாக வாரன் ஆண்டர்சன் அங்கேயே இறந்தும் போய்விட்டார்.

இன்றளவும் போபால் துயரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையான நிவாரணத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாக இருப்பதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். 

புதிய சட்டங்கள் பிறந்தன

போபால் விபத்து நடைபெற்றதற்கு பின்னால் அரசுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பில் அக்கறை குறைவோடு செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.

The Environment Protection Act – 1986 – இந்தச் சட்டம் சுற்றுச்சூழலை வரையறுக்கிறது மற்றும் சுற்றுச்சூழலின் தரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பது, கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக தேவையான அல்லது பயனுள்ளது எனக் கருதும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

The Factories Act – அபாயகரமான தொழில்களின் பட்டியல் மற்றும் ஒரு தொழிற்துறையை கண்டுபிடிப்பதற்கான ஏற்பாடு ஆகியவை அடங்கும் வகையில் தொழிற்சாலைகள் சட்டம் திருத்தப்பட்டது. மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கழிவுகள் மற்றும் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான விரிவான தொழில்துறை தரங்களை வகுத்தது.

The Public Liability Insurance Act – அபாயகரமான பொருட்களைக் கையாளும் போது விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கும், அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான நிகழ்வுகளுக்கும் உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் பொது பொறுப்பு காப்பீட்டு சட்டம் 1991 கொண்டுவரப்பட்டது. எந்தவொரு அபாயகரமான பொருளையும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காப்பீட்டுக் கொள்கைகளையும் கையாளத் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு உரிமையாளரும் எடுக்க வேண்டிய தொழில்துறை அலகுகளுக்கு இந்த சட்டம் கட்டாயமாக்குகிறது இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு பெற இது அனுமதிக்கும், இது அவர்களுக்கு பெரிய இழப்பீடு கோருவதைத் தடுக்காது. இந்த செயல் ‘முழுமையான பொறுப்பு அல்லது தவறு இல்லாத பொறுப்பு’ கோட்பாட்டை அங்கீகரிக்கிறது.

பொருளாதாரம் மக்களுக்கானது என்பதை அரசு உணருமா?

ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறோம் என்ற போர்வையில் மக்களுக்கு ஆபத்தான பல விசயங்களுக்கு அனுமதி அளிக்கின்றன. அரசு எடுக்கிற நடவெடிக்கைகளால் மக்களின் பொருளாதாரம் உயரப்போகிறதா அல்லது அந்த நிறுவனத்தின் பொருளாதாரம் உயரப்போகிறதா என்பதே கவனிக்கப்பட வேண்டிய விசயமாகிறது. மிகவும் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளை குறிவைத்து முதலாளிகள் தங்களது தொழிற்சாலைகளை நிறுவுகின்றனர். அதற்கு அரசாங்கங்களும் உடன் போகின்றன.

மக்கள் நலனோடு வாழ்வதற்கு நல்ல சுற்றுசூழல் அவசியம். பெரும் பொருளாதாரத்தை விடவும் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். பெரும் நிறுவனங்களுக்கு கதவுகளை திறந்துவிட சட்டங்களை வளைக்கும் வேலையை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செய்திடக்கூடாது. அரசின் நடவெடிக்கைகளை மக்கள் கவனிக்க வேண்டும்.

போபாலில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றளவும் உதவிக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற வேதனை நம் நெஞ்சை உலுக்குகின்றன.

மார்ட்டின் லூதர் கிங்கும் பேருந்து புறக்கணிப்பு போராட்டமும்
பிரான்சின் மஞ்சள் போராட்டம் எதற்காக நடந்தது தெரியுமா?

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Exit mobile version