Site icon பாமரன் கருத்து

காமாட்சி கண்டெடுத்த கற்பு – புதுமைப்பெண்கள் படிக்க வேண்டிய கதை

படித்தவர்களாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் கயவன் ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்டவுடன் கற்பினை இழந்துவிட்டோம் என மரணித்து போகக்கூடிய சூழ்நிலையில் தொலைத்த கற்பை எவ்வாறு மீட்டெடுத்தாள்” காமாட்சி” ….. 

ஒவ்வொரு புரட்சிப்பெண்ணும் படிக்க வேண்டிய உண்மை ….

 

 

அன்று வாரக்கடைசி , ஒருவழியாக கணக்கு முடித்து வீட்டிற்கு கிளம்ப சற்று தாமதமானது . இது வழக்கமானது தான் என்றாலும் ஒவ்வொரு வெள்ளியும் காமாட்சியின் அம்மா வந்து அழைத்துச் செல்லுவது வழக்கம் . வியாழக்கிழமை இரவே அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் அம்மா திருச்சி தாண்டி இருக்கும் சமயபுரம் கோயிலுக்கு நடைபயணம் போய்விட்டதால் வரமுடியவில்லை . 

இருட்டு என்றாலே காமாட்சிக்கு பயம் என்றாலும் அன்று நல்ல நிலவொளி அவளுக்கு கை கொடுத்தது. வீட்டில் இருவர் மட்டுமே என்பதனால் தனக்கு மட்டும் சாப்பாட்டை வாங்கிகொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் காமாட்சி . நிலவொளியில் அவளது பயம் கொஞ்சம் குறைந்திருந்தது . 

பாதி தூரம் வந்துவிட்டாலும் இந்த ஆலமர மேட்டை கடப்பதுதான் கொஞ்சம் பயமானதாக இருந்தது . அம்மாவுடன் வரும்போதே பயமாகத்தான் இருக்கும் . காரணம் இந்த ஊரை சேர்ந்த மன நோயாளி ஒருவன் இந்த இருட்டுப்பகுதியில் மறைந்திருப்பதாகவும் சிலமுறை பார்த்திருப்பதாகவும் ஊர்மக்கள் சொன்னது அவளது நினைவிற்கு வந்து போனது . 

அவ்வளவுதான் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டாள் . அவளது வேகத்தில் செருப்பும் சருகுகளும் உறசிடும் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்க ஆரம்பித்தது . பாதி தூரத்தை கடப்பதற்குள் சோர்ந்துவிட்டாள் . இருந்தாலும் வேகம் மட்டும் குறையவே இல்லை . 

இப்போது அவளது காலடி சத்தத்தோடு இன்னொரு காலடி சத்தமும் கேட்கிறது , யாரேனும் நம்ம ஊர் ஆளுக தான் வருகிறார்களா அல்லது இங்க இருப்பதாக சொன்ன அந்த கிறுக்கனா என நினைத்துக்கொண்டே நடந்தாள் . பயம் இவளை தொற்றிக்கொண்டது , நடையின் வேகத்தை கூட்டினாள் . பின்னே வரும் நடையின் வேகமும் கூடியது . தன்னைத்தான் அந்த காலடி சத்தம் தொடர்கின்றது என உணர்ந்து ஓட தொடங்கினாள் . ஆனால் அதற்குள் அந்த காலடி சத்தம் அவளை நெருங்கிவிட்டது . 

திரும்பினாள் , ஆலமர இருட்டில் அந்த கறு உருவத்தின் அடையாளம் அவளுக்கு தெரியவில்லை . ஆனாலும் அவனால் ஆபத்து என்பதனை காமாட்சியால் உணர முடிந்தது . எப்படியேனும் தப்பித்து ஓடியே ஆகணும் என நினைத்து ஓட முனையும்போது அந்த கறு உருவத்தின் கட்டை கால்கள் காமட்சியின் கால்களை இடறிவிட தவறி சருகுகளில் விழுந்தாள் காமாட்சி . 

 

ஏற்கனவே வேகமாய் நடந்ததில் முழு சக்தியையும் இழந்திருந்த காமாட்சியால் அந்த கொடூரன் தாக்கி விழுந்ததும் எழ முடியவில்லை . அந்த கரிய உருவம் அவளை நெருங்க நெருங்க எழுந்து ஓட சக்தியற்றவளாய் கிடக்கும் காமாட்சியின் கண்கள் மங்கலாக பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கிவிட்டன .மயக்கமடைந்துபோனால் காமாட்சி . 

ஆலமர இலைகளில் படிந்த பனித்துளிகள் அவளது முகத்தில் வடிந்து விழ , அவளது மயக்கம் கலைந்தது . நகர முயற்சித்தும் முடியாதவளாய் கிடந்தவளின் உணர்வுகள் அவளுக்கு எண்ணாயிற்று என பார் என சொன்னதோ என்னவோ பதறியவள் …எழுந்தாள் ஆனால் அவளால் முடியவில்லை . அவளுக்கு என்னவோ ஆயிற்று என்பதனை அவளால் உணர முடிந்தது . ஆமாம் அவள் அந்த கரிய மிருகத்தினால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தாள் . 

அவளால் அழக்கூட முடியவில்லை , இருந்தாலும் அழுது துடித்தாள் . ஏற்கனவே அம்மாவும் தானும் மட்டும் தனியாக இருப்பதனாலேயே ஊர் எப்படியெல்லாம் பேசும் , எனக்கு இப்படியானது தெரிந்தால் எவ்வளவு ஏளனமாக பேசுவார்கள் . வருகிற போகிறவனெல்லாம் எப்படி உடல் கூச பார்ப்பான் . அப்படி பார்க்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் கற்பழிக்கப்பட்டது போல தோன்றுமே . 

இவையெல்லாம் உடல் வலியோடு அவளுக்கு மன வலியையும் கொடுத்தது . வேறு வழியில்லை , எனது அம்மாவாவது இங்கு கொஞ்சநஞ்ச மானத்தோடு வாழ வேண்டும் என்றால் மானம்போன நான் உயிரோடு வாழக்கூடாது. 

நடந்தாள் … இனி இழப்பதற்கு எதுவுமில்லை கற்பே போய்விட்டது என எண்ணியவளின் நடையில் வேகமில்லை . சருகுகளின் சத்தம் அவளது காதுகளுக்கு கேட்கவில்லை . அவளது முக்கிய நோக்கமே விடிவதற்குள் மடிந்துபோகவேண்டும் என்பதுதான் . 

ஆலமரத்தின் இடதுபக்கத்தில் இருக்கும் பாழடைந்த கிணறை நோக்கி தான் காமாட்சி சென்றுகொண்டிருக்கிறாள் . இதோ இன்னும் இரண்டு மூன்று அடி வைத்தால் போதும் விழுந்து செத்துவிடலாம் என்கிற ஒரே ஆறுதலான விசயம் . 

மீண்டும் இன்னொரு காலடி சத்தம் தன்னை நோக்கிவருவதை உணர்ந்தும் கவலையேதும் இல்லாமல் பயமேதும் இல்லாமல் கிணறை நோக்கி நடந்தாள் . இனி இழப்பதற்கு ஏதுமில்லை இதோ செத்துவிட போகின்றோம் எதற்கு பயப்படவேண்டும் என கடைசி அடியையும் எடுத்துவைத்தாள் . 

எதிர்பார்த்தது நடந்தது , முகம் தெரியாத காம மிருகத்தால் சின்னாபின்னமான உடல் மூழ்கி கொண்டிருக்கிறது . சாகப்போகிறோம் இருந்தாலும் அம்மாவுக்கு தொந்தரவு இருக்காது . நினைத்துக்கொண்டிருக்கும்போதே மூச்சுத்திணறல் மரணம் கலந்த மயக்கத்தை ஏற்படுத்தியது .  

கதவை யாரோ தட்டுவது போல தெரிந்தவுடன் விழித்தாள் காமாட்சி . அவளது அம்மா தான் கோவிலுக்கு போய்விட்டு திரும்பி வந்திருக்கிறார்கள் . “என்னமா இன்னைக்கு வேலைக்கு போகலையா னு” அம்மா கேட்க ” இல்லம்மா ரொம்ப அசதியா இருந்துச்சி , லீவு கேட்டேன் தந்தாக ” காமாட்சி கூற . “சரி சரி சாப்பிட்டியா , காபி போட்டு தரவா ” என அம்மா கேட்க “இல்லம்மா கொஞ்ச நேரம் தூங்கினா சரியா போயிரும் ” என மீண்டும் படுக்கையில் சரிந்தாள் காமாட்சி. 

படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை . முன்பு நடந்தவையே அவளின் கண்ணெதிரே வந்து போய்க்கொண்டு இருக்கின்றன . ஒருவேளை நாம் இறந்திருந்தால் அம்மாவை பார்த்திருக்க முடியுமா , எவனோ படுபாவி செய்ததற்காக நாம் சாக நினைத்தோமே ” என நீண்டது அவளின் ஆதங்கம் . 

கிணற்றுக்குள் விழுந்த காமாட்சி மயக்கமடைந்திருந்தாள் . பின்னால் வந்த காலடி சத்தம் அவளுக்கு பின்னாலேயே கிணற்றுக்குள் குதித்து மயக்கத்தில் இருந்த காமாட்சியை மேலே கொண்டுவந்து போட்டது . இலைகளின் இடைவெளியில் சிதறிய சூரிய ஒளி அவளின் கண்களை கூச , பனி மூட்டத்தினால் ஏதோ சொர்க்கத்திற்கே வந்துவிட்டதாக எண்ணினால் காமாட்சி . 

எழ முயற்சித்தவள் கண்களில் அருகிலே அமர்ந்திருக்கும் பல நாள் குளிக்காமல் போனதனால் சடையாக தொங்கும் முடி , கிழிந்த சட்டை , உடைந்த பல்லுடன் அமர்ந்திருக்க , தான் இன்னும் சாகவில்லை , கற்பழித்தவனே சாகவிடாமல் சங்கடம் கொடுக்கிறான் என முடிவெடுத்து , அருகிலே கைக்கு மாட்டிய கட்டையை உருகியெடுத்துக்கொண்டு அவன் மீது பாய்ந்தால் காமாட்சி . 

தன்னை தாக்க வந்தவளை தடுத்துவிட்டு ” நான் உன்னை எதுவும் செய்யவில்லையே காப்பாத்துனதுக்கு என்னையே அடிப்பாயா ? ” என கிறுக்கண் கோவமாய் கேட்க  

எனக்கு தெரியும் இங்கெ ஒரு கிறுக்கன் இருப்பதாகவும் அடிக்கடி பெண்களை கெடுத்துவிடுவதாகவும் ஊர்ல சொல்லியிருக்கிறார்கள் . நீ தானே என்னை கற்பழித்தவன் . உன்னை கொல்லாமல் விடமாட்டேன் ” கிளர்ந்தெழுந்தாள் காமாட்சி 

நான் உன்ன கெடுத்துருந்தா ஏன் காப்பாத்தணும் ” கிறுக்கண் 

ஆமா , நீ ஏன் காப்பாத்தணும் , அப்போ எந்த படுபாவி என்னை சீரழிச்சது , அய்யோ ஏன் என்னை காப்பாத்துன , செத்து போயிருந்தா என் அம்மாவாச்சும் நிம்மதியா இருந்திருப்பாங்களே ” என கையில் இருந்த கட்டையை வீசிவிட்டு கதறினாள் .காமாட்சி  

உனக்கு இப்படி நடந்தது எனக்கு தெரியாது , நீ சாகப்ப்போறத பாத்தேன் , காப்பாத்துனேன் ” கிறுக்கண்  

ஏன் என்னை காப்பாத்துன , உயிரோட இருந்து இனிமே நான் என்ன பண்ண போறேன் ,எல்லாமே போச்சே ” காமாட்சி  

இந்த ஊர் ஆளுங்க சொல்லிட்டு அலையுற கிறுக்கண் நான் தான் , என்னோட பொண்டாட்டியும் உன்ன மாதிரியே தற்கொலை செஞ்சுக்கிட்டதாலதான் நான் இப்புடி ஆயிட்டேன் . தனியா இருக்குறப்போ எவனோ அவள கற்பழிச்சதுனால என் தேவதை தூக்குல தொங்கிட்டா . அவ மட்டும் நடந்தத சொல்லிருந்தா நான் அவள ஏத்திகிட்டுருப்பேன் . அவ விரும்பாம எவனோ செஞ்ச கொடுமைக்கு அவ பலியாகிட்டா ” கிறுக்கண்  

கண்ணீரை துடைத்துக்கொண்டு தன்னுடைய துயரத்தையும் மறந்து அந்த கிறுக்கனை பார்த்துக்கொண்டு இருந்தாள் காமாட்சி . 

ஒன்னு தெரிஞ்சுக்கோ , நீ இங்க செத்து போயிட்டா உங்க அம்மா எப்புடி சந்தோசமா இருப்பாங்க ? என் பொண்டாட்டி தான் கற்பு அப்புடி இப்புடின்னு செத்து போயிட்டா நீயும் செத்து போவாத , எவனோ கட்டாயப்படுத்தி செஞ்சதுக்கு கற்பு போயிருமா , கற்பு உடம்புல இருக்குற விசயம் இல்ல ,போறதுக்கு . அது மனசுல இருக்க சுத்தம் , அதான் கற்பு . உன் விருப்பமில்லாம அத யாரும் ஒன்னும் பண்ண முடியாது ” கிறுக்கண்  

ம்ம்ம்ம் ” என்பதைவிட வேறொன்றும் சொல்ல முடியாதவளாய் இருந்தாள் காமாட்சி . 

காமாட்சி இந்தா காபி குடி” என அம்மா எழுப்ப , எழுந்து காபியை குடித்தாள் காமாட்சி . 

தனிமையில் , இருட்டில் வரும் பெண்ணை கற்பழிக்கும் காமுகனை கிறுக்கண் என சொல்லாமல், மனைவியை இழந்த சோகத்தில் இருட்டினில் வாழ்ந்து வரும் “கற்புக்கு பாடம் எடுத்தவரை” கிறுக்கண் என எப்படி சொல்லிட முடியும் ? அவராலா உண்மையாலுமே ஆபத்து , அவரை காரணம் காட்டி எவனோ அல்லவா இந்த கொடுமைகளை செய்கின்றான் .இதுதான் உலகமென நினைத்துக்கொண்டாள் காமாட்சி . 

ஊர் என்ன சொன்னால் என்ன நான் சொல்கின்றேன் அவரே உண்மையான மனிதர் .  

இதுவரை உடலில் இருந்த காமாட்சியின் கற்பு மனதிற்கு இடம்பெயர்ந்துவிட்டது .

 

“கற்பு உடலில் இல்லை , மனதில் இருக்கிறது என்பதனை காமாட்சி உணர்ந்துகொண்டு வாழ்வினை அம்மாவோடு நிம்மதியாக தொடர்ந்தாள் .” 

நான்….
ஸ்ரீ

Share with your friends !
Exit mobile version