தற்போது சமூக வலைதளங்களில் செய்திகளில் தமிழ் இருக்கை அமைய அவர்கள் இவ்வளவு கொடுத்தார்கள் , இவர்கள் இவ்வளவு கொடுத்தார்கள் என செய்திகள் கிடைக்கின்றன .
ஆனால் தமிழ் இருக்கை என்றால் என்ன ? அது ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் அமையப்போவதால் என்ன நன்மை ? நமது பங்களிப்பு என்ன என்பதை அறியாமல் பலரும் இருக்கின்றோம் .
நமக்காக இந்த பதிவு :
ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் தமிழ் இருக்கையும் :
பல்கலைக்கழகங்களின் தரவரிசையையோ , பழமையான பல்கலைகழகம் எது என்றாலோ , உலகில் புகழ்பெற்ற பல்கலைகழகம் எது என்றாலோ அனைவரின் எண்ணத்திற்கும் வருவது ஹார்வர்ட் பல்கலைகழகம் தான் .
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் 1636 இல் தொடங்கப்பட்ட தொன்மைவாய்ந்த பல்கலைகழகம் ஹார்வர்ட் . பல துறைகளை கொண்டிருக்கும் ஹார்வார்ட் பல்கலைகழகம் மாணவர்களுக்கு படிப்போடு ஆராய்ச்சிகளையும் ஊக்கப்படுத்துகிறது .
நம்மூரில் இருந்து வெளியாகும் ஆராய்ச்சி முடிவுகளுக்கும் ஹார்வார்ட் பல்கலைகழகம் வெளியிடும் ஆராய்ச்சி முடிவுகளுக்குமான மதிப்பு வேறுபாடு அதிகம் . ஆம் , உலக சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் மதிப்பு ஹார்வார்ட் பல்கலைக்கழத்தில் இருந்து வெளியாகும் ஆராய்ச்சி முடிவுக்கு இருக்கும் .
தமிழ் இருக்கை :
இருக்கை என்பது துறை . தமிழ் இருக்கை அமைய போகிறது என்றால் தமிழுக்கான துறை ஏற்படுத்தப்பட இருக்கின்றது என்பது பொருள் .
ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் இருக்கை அமைய சுமார் 6 மில்லியன் டாலரை செலுத்திட வேண்டும் (இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி )
அப்படி கொடுத்து இருக்கை அமையும் பட்சத்தில் மிக சிறந்த தமிழ் அறிஞரை தலைவராக கொண்டு திறமையான ஆசிரியர்களை நியமித்து உலக இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் ஹார்வார்ட் பல்கலைகழகம் . அதோடு நில்லாமல் இலக்கிய ,தொன்ம , பண்பாட்டு ஆராய்ச்சிகளையும் ஊக்கப்படுத்தும் .
அந்த முடிவுகள் உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்படும் .
நமது தாய்மொழியாம் செம்மொழியான தமிழ் மொழியின் வலிமையை புகழை வெறுமனே நம்மூரில் பேசுவதை விட அதிக தாக்கத்தை நன்மையை ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கை கொடுக்கும் .
நன்றிகூறவேண்டிய நல்லவர்கள் :
இந்த மிகப்பெரும் திட்டத்தினை தமிழுக்காக செய்திட துணிந்தவர்கள் இருவர் . ஆம் தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் உயர்ந்த தமிழர்களான சம்பந்தமும் (69) ஜானகிராமனும் (65) .
இவர்கள் இருவரும்தான் முதலில் தலா அரை மில்லியன் டாலர் ( 3 . 25 கோடி ) கொடுத்து இதற்கான முயற்சியை தொடங்கினார்கள் . அதற்கு உறுதுணையாக ஹார்வார்ட் பல்கலைகழகமும் செயல்படுகின்றது .
தற்போது இதற்காக உலகின் பல இடங்களில் உள்ள தமிழர்களும் உதவியை செய்துவருகின்றனர் .
பணம் செலுத்தும் முறை :
இதுவரை 5 .52 மில்லியன் அளவுக்கான பணம் சேர்ந்துள்ளது . இது 92 % சதவிகிதம் ஆகும் .
நாமும் இதில் பங்கேற்றால் சிறப்பாக இருக்கும் .
நன்றி