காலம் மாற காட்சிகள் மாறும் என்பார்கள். அதேபோல, வழக்குகளின் மீதான பார்வையும் அதனைத்தொடர்ந்து தீர்ப்புகளும் கூட காலத்தைப் பொறுத்து மாறவே செய்கின்றன. இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் அப்படிப்பட்டது தான்.
அதன்படி, ஒரு உறுப்பினர் நாடாளுமன்றம், சட்டமன்றம் இவற்றில் பேசவோ அல்லது வாக்களிக்கவோ லஞ்சம் பெற்றால் அவர் மீது கிரிமினல் நடவெடிக்கை எடுக்கலாம் என 7 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, கடந்த 25 ஆண்டுகளுக்கு (1998) முன்பு PV நரசிம்ம ராவ் vs CBI வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு தவறானது என நிரூபணம் செய்துள்ளது. இது எதிர்கால அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தீர்ப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
[Supreme Court ends immunity for lawmakers taking bribes to vote]
ஏற்கனவே தேர்தல் பத்திரம் செல்லாது என அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் இந்த உத்தரவும் மிக முக்கியமான ஒரு விசயமாக பார்க்கப்படுகிறது. ஏன்?
இந்தத் தீர்ப்பு பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தத் தீர்ப்பின் தாக்கம் உங்களுக்கு விளங்க வேண்டுமெனில் நீங்கள் PV நரசிம்ம ராவ் vs CBI வழக்கில் என்ன நடந்தது என்பதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
PV நரசிம்ம ராவ் vs CBI வழக்கு
அப்போது நாட்டில் பொருளாதாரம் மற்றும் அரசியலில் நிலையற்ற தன்மை இருந்தது. இதனால் அஜய் முகோபாத்யாய் என்ற CPI (M) உறுப்பினர் நாடாளுமன்றத்தில் PV நரசிம்ம ராவ் ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தார். இது நடந்தது ஜூலை 26, 1993.
அப்போது ராவின் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 251. பெரும்பான்மையை நிரூபிக்க 13 உறுப்பினர்கள் குறைவாக இருந்தது. ஆனால், நடைபெற்ற வாக்கெடுப்பில் 265 வாக்குகள் பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் ராவ். இது எப்படி நடந்திருக்க முடியும்? ரகசிய வாக்கெடுப்பில் எந்த கட்சியினரோ மாற்றி இவர்களுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள் என தெரிகிறது.
ஒரு வருடத்திற்கு பிறகு, ஜார்கண்ட் முக்தி மோக்சா கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிக்க லஞ்சம் வாங்கியதாக செய்திகள் பரவின. இந்த செய்தி பரவியதை அடுத்து சிபிஐ இதனை விசாரிக்க ஆரம்பித்தது. அதன் விசாரணையில் அவர்கள் பணம் வாங்கியது உண்மை என தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிந்தது.
இதுதவிர, ஜனதாதள கட்சியை சேர்ந்த அஜித் சிங்கும் பணம் வாங்கியது தெரிய வந்தது. ஆனால், இவர் வாக்களிக்காமல் இருக்க பணம் வாங்கி இருக்கிறார்.
ஆனால், சிபிஐ வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் குற்றவாளிகள். ஆனால், உயர்நீதிமன்றம் அவர்களது வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் சென்றார்கள் நரசிம்ம ராவ் மற்றும் பணம் வாங்கிய உறுப்பினர்கள். நாடாளுமன்றத்திற்குள் வாக்கு செலுத்தும் உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்ற அரசியலமைப்பு சட்டப்பிரிவை இவர்கள் காரணம் காட்டி வழக்கு தொடர்ந்தார்கள்.
விசித்திரமான தீர்ப்பு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள இரண்டு பிரிவுகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன.
அதில் 105(2), எந்த ஒரு உறுப்பினரும், நாடாளுமன்றத்தில் அவர் அளித்த வாக்குகள் அல்லது வாக்கெடுப்பு தொடர்பாக எந்த நீதிமன்றத்திலும் எந்த நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்க மாட்டார்கள் என கூறுகிறது. இதேபோல, சட்டப்பிரிவு 194(2) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
அப்போதைக்கு, வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள், பணமே வாங்கி இருந்தாலும் நாடாளுமன்றத்தில் வாக்கு செலுத்திய உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர முடியாது என தீர்ப்பு தந்தனர்.
இன்னும் விசித்திரமாக, வாக்களித்த உறுப்பினர்களுக்கு மட்டும் தான் அரசியலமைப்பு தரும் பாதுகாப்பு உள்ளது. ஆகவே, லஞ்சம் கொடுத்தவர்கள், வாக்கு அளிக்காமல் இருந்த அஜித் சிங் ஆகியோருக்கு பாதுகாப்பு (Immunity Power) இல்லை என கூறினார்கள். அதே அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் இதனை எதிர்த்து தீர்ப்பு தந்துள்ளனர். ஆனால், பெரும்பான்மை அடிப்படையில் 3 நீதிபதிகள் தந்த தீர்ப்பே இறுதி தீர்ப்பானது.
மாற்றி எழுதப்பட்ட தீர்ப்பு
தற்போது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் முன்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் “நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் வாக்கு அளிக்க லஞ்சம் வாங்கினால் அது கிரிமினல் குற்றம் தான். அரசியலமைப்பு சட்டப்பிரிவு அளிக்கும் பாதுகாப்பு என்பது லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆனது அல்ல” என தீர்ப்பு தந்துள்ளனர்.
லஞ்சம் வாங்கிக்கொண்டு வாக்கு செலுத்துவது, லஞ்சம் வாங்கிக்கொண்டு பேசுவது என்பது பொது வாழ்கையில் நேர்மையை சீர்குலைக்கும் செயல் என தீர்ப்பு தந்துள்ளார்கள்.
இதேபோல, இன்னொரு வழக்கில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் இவற்றில் பேசுகிறவைக்கு, அங்கே போராட்டம் நடத்தும் உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு தரும் immunity power செல்லும். ஆனால், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்குள் மைக்கை உடைப்பது, யாரையேனும் தாக்குவது போன்ற செயல்களுக்கு அரசியலமைப்பு தரும் பாதுகாப்பு பொருந்தாது என்றும் தலைமை நீதிபதி இன்னொரு வழக்கில் கூறி இருக்கிறார்.
நாம் எப்படி விளங்கிக்கொள்ள வேண்டும்
அன்று இப்படி லஞ்சம் கொடுத்து வாக்குகளை பெற்று ஆட்சியை தக்க வைத்தவர் நரசிம்ம ராவ், அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இன்று பணம் கொடுத்து அல்லது மிரட்டி ஆட்சியை பிடிக்கிறார்கள் அல்லது கவிழ்க்கிறார்கள் என்கிறோம். ஆனால், அது அன்றும் நடந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆக, அதிகாரத்தில் யார் இருந்தாலும் செய்யக்கூடிய செயல்கள் என்பது ஒன்றாகவே இருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் X தளத்தில் வரவேற்பு தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளபடியால் அவர் வரவேற்பு தெரிவித்து இருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால், தேர்தல் பத்திரம் ரத்து செய்யபட்டு உத்தரவு வந்தபோது அவர் வரவேற்பு எதையும் தெரிவிக்கவில்லை. இதையும் நாம் கவனித்தாக வேண்டும்.
முடிவுரை
யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் அவர்கள் ஏதோ ஒரு வகையில் சட்டத்தை வலைக்கவே பார்ப்பார்கள் என்பதே எதார்த்தமான உண்மையாக உள்ளது. இதில் இருந்து மக்களை காக்கும் பெரும் பொறுப்பு நீதிமன்றத்திடம் உள்ளது. அண்மைய கால உத்தரவுகள் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. இதே போன்று நீதிமன்றமும் நீதிபதிகளும் இருப்பது இந்தியாவிற்கு மிகவும் நல்லது.
இன்னொரு நல்ல பதிவில் உங்களை சந்திருக்கிறேன். உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.