கல்லூரிகளில் தேர்வுக்கு பணம் கட்டியிருந்தால் போதும் “அனைவரும் தேர்ச்சி”. குறிப்பாக ஒரு மாணவர் கடந்த ஆண்டு அதே பாடத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் கூட அவர் இந்த ஆண்டு தேர்வுக்கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி என அறிவிக்கப்படுகிறார். இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொண்டாடப்படவும் செய்கிறார்.
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பினால் சமூக வலைதளங்களில் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொண்டாடப்படுகிறார். சில இடங்களில் இவரது அறிவிப்பை பாராட்டி கட்அவுட்களும் கூட வைத்திருக்கிறார்கள். அப்படியென்ன அறிவிப்பு என கேட்கிறீர்களா? “ஒரு மாணவர் கடந்த பருவங்களில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருந்து இந்த முறை மறுதேர்வுக்கு பணம் செலுத்தி இருந்தால் போதும் அவர் அந்த பாடத்தில் தேர்ச்சி என அறிவிக்கப்படுவார்” என்பது தான்.
மாணவர்களில் சிலர் இதை வரவேற்கிறார்கள், சிலர் எதிர்க்கிறார்கள். பொதுமக்கள் சிலரோ போனால் போகட்டும் விடுங்கள் என ஆறுதல் சொல்கிறார்கள்.
முதல்வரின் அறிவிப்பு
ஒரு மாணவர் கடந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்திருந்தது இந்த ஆண்டு தேர்வு எழுத பணம் செலுத்தி இருந்தால் அவரும் தேர்ச்சியடைந்ததாக கருதப்படுவார் என முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்காக மதிப்பெண்களை கணக்கிடும் முறையில் இறுதியாக தெரிவிக்கப்பட்டிருப்பது, எப்படியேனும் எந்த மாணவருக்கு தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை போட்டுவிட வேண்டும் என்பதுதான்.
இதை வரவேற்க முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்வது முக்கியமில்லை தான், உயிரே முக்கியம். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.பள்ளி பொதுத்தேர்வுகள் நிச்சயமாக நடைபெறும் என அரசு அறிவித்தபோது பிள்ளைகளின் ஆரோக்கியமே முக்கியம் எனக்கருதி தேர்வுகளை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி என அறிவியுங்கள் என நாமும் கேட்டுக்கொள்ளவே செய்தோம். அதில் எந்தவித மாற்றுக்கருத்து தற்போதும் இல்லை.
ஆனால் ஒரு தேர்வு நடைபெற்று அதில் தோல்வி அடைந்த ஒரு மாணவரை தேர்ச்சி என அறிவிப்பது என்பதில் தான் சிக்கலே எழுகிறது. மாணவர்களின் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டு இத்தகைய நடவெடிக்கையை எடுத்திருப்பதாக முதல்வர் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இத்தகைய நடவெடிக்கைகள் எப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முதல்வர் அவர்கள் அறிந்துள்ளாரா என்பதுதான் இங்கே கேள்வி.
ஏற்கனவே கல்வியின் தரம் அதலபாதாளத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இப்படி மாணவர்களை தேர்ச்சி அடைய செய்தால் மேலும் கல்வியின் தரம் தாழ்ந்து போகவே செய்யும். இந்த விவகாரம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. அவர் கூறியது,
”தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு (அரியர்) தேர்வெழுதக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைவரையும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது விசித்திரமானது.
பல்கலைக்கழகங்கள் கற்பனையாகத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்வதில்லை. பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரமிக்க அமைப்புகளாகும். சிண்டிகேட், செனட், கல்விக்குழு என அதிகாரமிக்க அமைப்புகளின் வழிகாட்டுதல்படிதான் தேர்வுகள் நடத்தி மாணவர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும். இந்நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை ரத்து செய்து அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதோ, பல்கலைக்கழகங்களின் கல்விக் கொள்கையில் தலையிடுவதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் இதுவாகும். பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தைக் கட்டிக்காப்பது துணைவேந்தர்களின் தலையாயக் கடமையாகும். தேர்ச்சி பெற முடியாமல் போன பாடங்களுக்குத்தான் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அந்தப் பாடங்களில் அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது முற்றிலும் மாறுபட்டது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் 10 பாடங்களுக்கு மேல் தேர்ச்சி பெறாமல் இருப்பார்கள். அந்தப் பாடங்களில் அவர்கள் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே மதிப்பெண் பெற்றிருக்கக்கூடும். இந்த அறிவிப்பால் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் முற்றிலும் பாதிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் உறுதியான முடிவை எடுக்க வேண்டும்”.
எந்த சூழ்நிலையிலும் கல்வியின் தரம் காக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!