ஒரு தேசம் எவ்வளவு பெரிய ஆயுத பலத்தையும் பொருளாதார பலத்தையும் கொண்டிருக்கிறது என்பது எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை, அடுத்த தலைமுறையை எவ்வளவு வலிமையோடு உருவாக்குகிறது என்பது தான் தீர்மானிக்கிறது
அண்மையில் நடந்த இருவேறு நிகழ்வுகளுக்கு மாணவர்கள் களத்தில் இறங்கி போராடியதும் (Student Protest) அதற்க்கு வெற்றி கிட்டியிருப்பதும் நாம் வலிமையான எதிர்கால சந்ததியினை உருவாக்குகிறோம் என்பதற்கு சான்றாக நான் பார்க்கிறேன்.
மதுக்கடைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என அறிந்தும் அரசே அதனை விற்கிறது, நீதிமன்றமும் வேடிக்கை பார்க்கிறது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நல்ராயப்பள்ளி எனும் இடத்தில் மதுக்கடை புதிதாக திறக்கப்பட இருக்கிறது என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கிறார்கள். ஆனாலும் மதுக்கடை திறக்கப்படுகிறது. உடனடியாக அப்பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். மதுக்கடை வேறொரு இடத்திற்கு மாற்றப்படுகிறது.
பாலியல் தொந்தரவிற்கு எதிராக கல்லூரி மாணவர்கள்
பிரபல கல்லூரி ஒன்றில், லிப்டில் கல்லூரி மாணவி ஒருவருக்கு அங்கே பணி புரிகின்ற ஊழியரே பாலியல் தொந்தரவு அளிக்கிறார். புகார் அளித்த மாணவியிடம் அவரது ஆடையே குற்றத்திற்கு காரணமென கேவலமாக கூறுகிறது நிர்வாகம், மேலும் ஊழியர் மீது நடவெடிக்கை எடுக்காமல் பாதுகாக்க முயற்சிக்கிறது. களமிறங்குகிறார்கள் மாணவ மாணவிகள், போராட்டம் நடை பெறுகிறது.தவறை உணர்கிறது நிர்வாகம். குற்றவாளி கைது செய்யப்படுகிறார்.
மாணவர்களின் போராட்டத்திற்கு சக்தி அதிகம்
வரலாறு நமக்கு சில உண்மைகளை உணர்த்தியிருக்கிறது. மாணவர்கள் ஒரு பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள் என்றால் அதற்க்கு வலிமையையும் முக்கியத்துவமும் தானாக கூடி விடுகிறது என்பதே உண்மை. ஒரு அரசியல் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கிறது என்றால் “ஆதாயத்துக்காக நடத்துவார்கள்”என்ற எண்ணம் இருக்கும், பொதுமக்கள் நடத்துகிறார்கள் என்றால் “இவர்களுக்கு வேலை இல்லை” என நூறோடு ஒன்றாக கவனிக்க மாட்டார்கள்.
ஆனால் மாணவர்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்றால் அதற்க்கு “எந்தவொரு சாயத்தையும் எவராலும் பூச இயலாது”. மாணவர்களின் போராட்டத்தில் எவராலும் தடியடி செய்தோ , குழப்பங்களை விளைவித்தோ தடுத்துவிட இயலாது”. மேலும் மாணவர்களின் போராட்டத்தில் எந்தவித சுயநலமும் இருக்காது. ஆகவே “வெற்றியை கொடுத்தே ஆகவேண்டியது அவசியம்”. ஆகையால் தான் மாணவர்கள் எங்கு போராட்டம் நடத்தினாலும் அங்கே வெற்றி ஒன்றே முடிவாக இருக்கும்.
மாணவர்கள் தவறுக்கு எதிராக தங்களது தன்னலமற்ற போராட்டத்தை தொடரவேண்டும்.