Site icon பாமரன் கருத்து

ஜோதிகாவிற்கு ஆதரவாக நிற்பது அவசியம்

ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் மருத்துவமனை பள்ளிக்கூடம்

ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் மருத்துவமனை பள்ளிக்கூடம்

படு கேவலமாக விமர்சனம் செய்கின்ற கூட்டமொன்று இங்கே உருவாகி வருகிறது. அவை சொந்த விமர்சனங்களா அல்லது பணத்திற்காகவும் வெறுப்புணர்வை உமிழ்வதற்காகவும் செய்யப்படுகின்ற விமர்சனங்களா என்பதை இந்த சமூகம் கவனித்து ஒடுக்க வேண்டும்.
ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் மருத்துவமனை பள்ளிக்கூடம்

அரசுப்பள்ளிக்கூடங்களின் அவல நிலையை தோலுரித்துக்காட்டிய ராட்சசி திரைப்படத்திற்காக விருது வாங்குவதற்காக ஒரு தனியார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசினார் நடிகை ஜோதிகா. ராட்சசி ஒரு சமூகப்படம் என்பதனால் அது சார்ந்து சில கருத்துக்களை மேடையில் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சி அண்மையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பிறகு அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவர் ஏதோ ராஜராஜ சோழன் படைப்பான தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி அசிங்கமாக பேசிவிட்டதைப்போலவும் தமிழ் உணர்வாளர்கள் கொந்தளித்துவிட்டதைப்போலவும் காட்ட ஒரு கூட்டம் முயற்சி செய்துகொண்டிருந்தது. 

 

ஜோதிகா அவர்கள் தஞ்சை பெரிய கோவிலின் மேன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது ராஜ ராஜ சோழனின் பெருமையை குலைக்கும் விதத்திலோ பேசவில்லை. உங்கள் ஊரில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கோ முருகன் கோவிலுக்கோ ஆண்டுதோறும் காணிக்கை கொடுத்து கோவிலை நன்றாக பார்த்துக்கொள்கிறீர்களே அதுபோலவே உங்களது ஊரில் இருக்கும் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் பார்த்துக்கொள்ளுங்கள் என்றே பேசினார். 

 

ஜோதிகாவிற்கு கருத்து சொல்ல எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ அதே உரிமை அதனை விமர்சிக்கவும் இருக்கிறது. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைக்கப்பட்டதனாலேயே இந்தப்பதிவை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. 

நீங்கள் புரிந்துகொள்வதற்காக ஜோதிகா என்ன பேசினார்? எதற்காக பேசினார் என்பது குறித்து இங்கே பார்ப்போம். 

ஜோதிகா என்ன பேசினார்?

பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. அதைப் பார்க்காமல் போகாதீர்கள், அந்தக் கோயிலைக் கண்டிப்பாகப் பார்க்கணும், அவ்வளவு அழகாக உள்ளதாகச் சொன்னார்கள். ஏற்கெனவே பார்த்துள்ளேன். அவ்வளவு அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்குப் பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்ததை என் வாயால் சொல்ல முடியாது.

எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, ராட்சசி படத்தில் கூட இதைச் சொல்லியுள்ளேன். இயக்குநர் கெளதம் (ராஜ்) சொல்லியுள்ளார். கோயிலுக்காக அவ்வளவு காசு கொடுக்கிறீர்கள், அவ்வளவு செலவு செய்கிறீர்கள், பெயிண்ட் அடிக்கிறீர்கள், பராமரிக்கிறீர்கள். கோயில் உண்டியலில் அவ்வளவு காசு போடுகிறீர்கள். தயவுசெய்து அதே காசைக் கட்டடத்துக்குக் கொடுங்கள், பள்ளிகளுக்குக் கொடுங்கள், மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள் (ஜோதிகா இதைப் பேசிக்கொண்டிருக்கும்போது விழா அரங்கில் பிரபலங்களும் ரசிகர்களும் கைத்தட்டுகிறார்கள்). இது மிகவும் முக்கியம். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்தக் கோயிலுக்கு நான் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு கோயிலுக்குப் போகவில்லை. மருத்துமனைகளும் அந்தளவுக்கு முக்கியம், பள்ளிகளும் அந்தளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் .


எதற்காக ஜோதிகா இப்படி பேசினார்?

ஜோதிகாவை விமர்சனம் செய்பவர்கள் உண்மையாலுமே அக்கறை உள்ளவர்களாக இருந்தால் உடனடியாக அந்த மருத்துவமனையை சீர்படுத்தி மேம்படுத்திட அக்கறை செலுத்த வேண்டும்.

ராட்சசி திரைப்படம் அரசுப்பள்ளியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். அதற்கான விருது வழங்கும் விழாவில் போய் தஞ்சை பெரிய கோவிலையும் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் சம்பந்தப்படுத்தி எதற்காக பேசியிருக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ள வேண்டும். தற்போது ஜோதிகா நடித்துவரும் திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் மிகத்தெளிவாக ஒரு பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். அதில், 

 

ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின்போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால், எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாக பார்த்து ஷூட் செய்தோம். ஜோதிகா வந்தார் மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார். பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார். 

 

வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கக் காரணம் இந்தக் காட்சிதான். ஆயிரம் அன்ன சத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்று ஜோதிகா பேசியதாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இதில் கோயில்களைக் குறைத்துப் பேசியது போன்ற பார்வை எங்கே வருகிறது? சில வருடங்களுக்கு முன்பு ‘கோயில் கட்டுவதை விட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசி இருப்பவர் வேறு யாருமல்ல, நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் என சொல்ல முடியுமா?

 

ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும், அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பவர் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்குப் பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்பு பரிசாக வாங்கிச் சென்றவர் அவர். இந்தப் பரபரப்பு பின்னணியில் என் பங்கும் இருப்பதால்தான் இந்த விளக்கம்.

 

அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். “எங்கள் மக்களுக்காகத்தான் படம், எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்…” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன். விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களைகொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா. கால்கள் சுட்டுப் பொசுக்க காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார். ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார். தஞ்சை மக்களின் வாழ்வியலை அறியவும், அப்படியே வாழவும் அவர் கற்றுக் கொண்டார். இந்தச் சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும். 

 

“சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்…” எனச் சிலிர்த்த அவருடைய நல்ல மனதுதான் மருத்துவமனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது. இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை! அதிலும் குறிப்பாக இந்தக் கரோனா நேரத்தில், வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தத்தளிக்கும் இக்கட்டில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது!

அசிங்கமான விமர்சனங்கள்

அசிங்கமாக பேசினால் பெண்களை முடக்கிவிடலாம் என்ற கேவலமான மனநிலை இன்னமும் ஓயவில்லை.

விமர்சனம் எப்போதுமே ஆரோக்கியமானது தான். ஆனால் அது நாகரிகமான முறையில் கருத்தியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். மாறாக, தனி நபர் சார்ந்ததாக இருக்கக்கூடாது. ஜோதிகா அவர்களின் விசயத்தில் எல்லை மீறிய விமர்சனங்களை நம்மால் பார்க்க முடிகிறது. யார் இதை செய்கிறார்கள் என தெரியவில்லை. ஒரு பெண்ணை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத கயவர்கள் வழக்கம் போல சொல்லக்கூடாத வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள். 

 

திருமணத்திற்கு பிறகு சமூக பிரச்சனைகள் குறித்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா. வெறுமனே சம்பளம் பெற்றுக்கொண்டு நடிப்பதோடு மட்டுமில்லாமல் அவர் சமூக மாற்றத்திற்காக நிஜத்திலும் போராடுகிறார். சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் செயல்பாடுகள் நமக்கெல்லாம் உதாரணமாக திகழ்த்துக்கொண்டிருக்கிறது. விவரம் அறிந்த பலர் கூட ஜோதிகாவின் பேச்சின் அர்த்தத்தை புரிந்துகொள்ளாமல் விமர்சனம் செய்திருப்பது முட்டாள்தனத்தின் உச்சம். 

 

இப்போது ஒன்றைக்கற்றுக்கொண்டு இருக்கிறார்கள் . வேறெங்காவது பிறந்தவர்கள் இங்கு ஏதாவது சொல்லிவிட்டால் பிழைக்கவந்த நீ எப்படி பேசலாம் என கேட்கிறார்கள் . ஏதோ தமிழகத்திற்கு வந்து படுத்துகொண்டால் இவர்களே பணம் கொடுப்பது மாதிரி . அவர்கள் உழைக்கிறார்கள் , சம்பாதிக்கிறார்கள் . அவர் தமிழ் மண்ணின் மருமகள் என்றுகூட பாராமல் கேவலமாக விமர்சனம் செய்கிறார்கள் . இப்படிப்பட்டவர்கள் தங்களது பெண்களை எப்படி நடத்துவார்கள் என்றெண்ணும்போது கவலை வருகின்றது .

சரி உங்களைக்கேட்கிறேன் ? உங்கள் பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கோ அல்லது மருத்துவமனைக்கோ ஏதாவது கொடுத்திருக்கிறீர்களா? ஆனால் கோயிலுக்கு ? கொடுத்திருப்பீர்கள் . அதில் கொஞ்சத்தைத்தான் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுக்கச்சொன்னார் ஜோதிகா .

நல்லவர்களுக்கு துணை நிற்போம்

நல்லவர்கள் அனைவரும் தனித்து கிடப்பதனால் தான் தீய எண்ணம் கொண்டவர்களின் கருத்து மேலோங்கி நிற்கிறது. இனியும் அமைதியாக இருக்காதீர்கள் விவரம் அறிந்தவர்களே. நமக்கென்ன என்று நீங்கள் சென்றுவிட்டால் மீண்டும் மீண்டும் இந்தப்போக்கு தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். அதனை நாம் அனுமதிக்கக்கூடாது. 

 

விமர்சனம் செய்திடுங்கள் .

 

நாகரிகமாக செய்திடுங்கள் .

அதற்கு முன் உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் .


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version