அண்மையில் திருசெந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது . கிட்டத்தட்ட 7 மணிநேர பிரயாணத்திற்கு பிறகு திருச்செந்தூரை அடைந்தோம் . அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை பார்க்கும்போது பெரும்பாலானவர்கள் நம்மை போன்றே அதிக தொலைவில் இருந்து வந்தவர்கள் என்பதனை அறிய முடிகின்றது .
கழிப்பறைகள் மேலாண்மை அருமை
அங்கு சென்றவுடன் என்னை ஆச்சர்யப்படுத்தியது , அங்கு மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருக்கும் இலவச கழிவறைகளும் , குளியலறைகளும் தான் . குறிப்பிட்ட நேர இடைவெளியில் அவை பராமரிப்பிற்கு உட்படுத்தப்படுகிறது என தெரியவருகின்றது . வரவேற்கப்பட வேண்டிய விசயம் .
அளவுக்கதிகமான சிறப்புக்கட்டணம்
திருச்செந்தூர் கோயிலில் மிகவும் அதிகமாக முகம் சுளிக்கவைத்த விசயம் “சிறப்புகட்டணம்” தான் . மற்ற கோயில்களில் இவ்வளவு அதிகமாக இருக்குமா என தெரியவில்லை . மிக குறைவான சிறப்புக்கட்டணம் 100 ரூபாய் , அதற்கடுத்து 250 ரூபாய் , அதிகபட்சமாக 500 ரூபாயும் கேட்கப்பட்டது .
நீங்கள் அதிகபட்சமாக பணம் கொடுத்தால் விரைவாக கடவுள் தரிசனம் செய்துவிடலாம் . நீங்கள் எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும் எவ்வளவு தொலைவில் இருந்து வந்திருந்தாலும் பணம் இல்லையென்றால் பல மணி நேரம் காத்திருந்துதான் கடவுள் தரிசனம் செய்தாக வேண்டும்.
அதுவும் அதிகபட்ச கட்டணம் என்பது சாதாரண மக்களால் கொடுக்க முடியாத அளவிற்கு அதிகபட்சமாக இருப்பது எவ்வளவு பெரிய அநியாயம் .
கடவுள் அனைவருக்கும் சமமானவர் என போதனை செய்துவிட்டு புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டு சிறப்புகட்டணம் அதிகமாக செலுத்தினால் முன்னுரிமை கொடுப்பது எவ்வளவு பெரிய மடத்தனம் . இத்தனைக்கும் இந்த கோவிலானது தமிழக அரசின் அறநிலையத்துறை பாதுகாப்பில் இருந்துவருகின்றது .
அரசு கோவில் நிர்வாகத்தினை ஏற்றுநடத்துவது மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி கொள்ளையடிப்பதை தடுப்பதற்காகவா அல்லது தானே முன்னின்று கொள்ளையடிக்கவா ? இந்தக்கொடுமை திருச்செந்தூரில் மட்டுமே நடக்கிறது என்பதில்லை , தமிழகத்தில் மூலை முடுக்குகளில் இருக்கின்ற அனைத்து கோவில்களிலும் இந்தகொடுமை நடக்கிறது .
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதனை அறிந்தும் அறியாதவர்களை போல நடந்துகொண்டால் கூட பரவாயில்லை , கடவுள் நம்பிக்கை 100 சதவிகிதம் கொண்ட பெரிய பெரிய அறிவாளிகளும் அதிகாரம் மிக்கவர்களும் அமைதியாக சட்டை பணியனோடு சேர்த்து அநியாயத்தை தட்டிகேட்கும் துணிவையும் கழட்டி கம்புக்கூட்டில் வைத்துக்கொண்டு சென்றுவிடுவது சகித்துக்கொள்ளமுடியாத வேதனையை தருகின்றது .