தமிழகத்தில் அவ்வப்போது காய்ச்சல் பரவிக்கொண்டு இருக்கின்றது . பல சமயங்களில் என்ன காய்ச்சல் என்பதனை கண்டறிய முடிந்தாலும் சில சமயங்களில் மர்ம காய்ச்சல் என பெயர் அறியாத காய்ச்சல் வந்துகொண்டு இருக்கின்றது . இப்படி வருகின்ற காய்ச்சல்களால் சில உயிர்பலிகள் அவ்வப்போது ஏற்படுகின்றன .
இப்படி அடிக்கடி மர்மக்காய்ச்சல் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக இருப்பது சரியான குப்பை மேலாண்மை இல்லாமல் இருப்பதும் தான் . இதில் அரசும் பொதுமக்களும் எவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம் என்பதனை பார்க்க இருக்கின்றோம் .
குப்பை மேலாண்மையில் அரசின் அலட்சியம்
பெரும்பாலும் நகரங்களில் தான் அரசு துப்புரவு பணியாளர்களை நியமித்து குப்பையை நாள்தோறும் அகற்றிடும் வேலையை செய்துவருகிறது . குப்பையை அகற்றுவதில் சிறப்பாக அக்கறையெடுத்து செயல்படும் அரசு , பெறப்பட்ட குப்பையை மேலாண்மை செய்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை . வெறுமனே குப்பையை அள்ளிக்கொண்டு போய் வேறு இடங்களில் கொட்டி விடுகின்றோம் .
கொட்டுகின்ற குப்பை என்னாகிறது , அதிலிருந்து எவ்வளவு கிருமிகள் உருவாகின்றன , மழை , காற்று ஆகியவற்றின் மூலமாக எவ்வாறு பரவுகின்றது ? என்பதில் போதிய சிரத்தை இன்றியே செயல்படுகிறது அரசு . இதன்காரணமாக பல நோய்கள் புதிதாக உருவாவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன .
பொதுமக்களுக்கு இருக்கும் அலட்சியம்
அரசு என்னதான் ஊழியர்களை நியமித்து குப்பை அகற்றுவதை செய்தாலும் பொதுமக்களாகிய நமக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன . நம்மில் பலர் இன்றும் குப்பையை குப்பை தொட்டியில் கொண்டு போய் கூட போடாமல் சாலை ஓரங்களில் வீசுகிறோம் . அலட்சியமாக நாம் ஒவ்வொருவரும் செய்திடும் இவ்வேலையினால் , தொழிலாளர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்படுகின்றது , குப்பை சிதறுவதினால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது , நோய் பரவ அடிப்படை காரணமாக அமைகின்றது .
மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பையை வாங்குகின்றனர் துப்புரவு பணியாளர்கள் .நாம் அதனை தரம் பிரிக்காமல் ஒட்டுமொத்தமாக போடும்போது அதனை தரம் பிரிப்பது எளிமையானதாக இருப்பதில்லை .
பின்வருவவற்றை செய்தால் குப்பை மேலாண்மையை எளிமையாக்கலாம்
வீடுகளிலேயே நாம் இரண்டு குப்பை தொட்டிகளை பயன்படுத்தி தரம் பிரித்து வைக்க பழக வேண்டும்
தினந்தோரும் குப்பைகளை அகற்றிடும் வேலையை தவறாமல் செய்திட வேண்டும்
குப்பையை சாலை ஓரங்களில் வீசாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும்
இவை செய்வதற்கு கடினமான வேலை அல்ல , அலட்சியம் அற்ற சுய சிந்தனையே இதற்கு போதுமானது .
செய்வோமா ?