பள்ளியில் உள்ள இசைக்குழுவில் என்னை சேர்க்க மறுத்தார்கள். எனது குரல் ஆட்டின் குரல் போல இருப்பதாக கூறினார் எனது ஆசிரியர். ஆமாம், எனது குரலும் அப்படிதான் இருந்தது. ஆனால் எனது அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார், நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்றும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும் – சக்கீரா இசபெல் மெபாரக் ரிபோல்
பாப் உலகில் கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையும் வாங்கிவிட்ட ஒரு பாப் பாடகி தான் ஷகிரா. இளமைப்பருவத்தில் இவரது குரல் ஒரு பாடகருக்கான குரல் போல இல்லாமல் இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக அவர் எடுத்த முயற்சிகளின் விளைவாக ஏழை குடும்பத்தில் பிறந்த ஷகிரா இன்று மாபெரும் பாப் பாடகியாக மாறியிருக்கிறார், கோடிகளில் சம்பாதிக்கிறார், பாடல் எழுதுகிறார், உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். ‘Whenever, Wherever‘, ‘Hips Don’t Lie.’ and ‘Waka Waka‘ என்பன போன்ற பல சூப்பரான ஆல்பம்களை பாடியுள்ள ஷகிரா கிராமி விருது, லத்தீன் கிராமி விருது, அமெரிக்கன் மியூசிக் விருது என பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார். உலகம் முழுமைக்கும் இவரது 70 மில்லியன் ஆல்பம்கள் விற்று தீர்ந்துள்ளன.
இவ்வளவு பெரிய உயரம் என்பது ஷகிராவிற்கு எளிமையாக கிடைத்துவிடவில்லை. பல தடைகளை தாண்டித்தான் இந்த உயரத்தை அவர் பிடித்திருக்கிறார். வாருங்கள் அவர் வெற்றிபெற்ற கதையை பார்க்கலாம்.
இந்த உலகத்தில் உங்களுக்கான இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டுமானால் அதற்காக நீங்கள் போராடித்தான் ஆக வேண்டும் – ஷகிரா
சக்கீரா இசபெல் மெபாரக் ரிபோல் அல்லது ஷகிரா கொலம்பியாவில் இருக்கும் பாறங்கீயாவில் 1977 ஆம் ஆண்டு ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு 2 வயது இருக்கும் போது சகோதரன் ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வருத்தத்தை மறைக்க ஷகிராவின் அப்பா கறுப்பு கண்ணாடியை அணிய ஆரம்பித்தார். அவள் தனது தந்தையிடம் தனக்கு ஒரு தட்டச்சு எந்திரம் ஒன்றினை பிறந்தநாள் பரிசாக கேட்டாள். அந்த தட்டச்சு எந்திரம் அவளுக்கு 7 வயதில் தான் கிடைத்தது. அந்த தட்டச்சு எந்திரம் மூலமாக முதல் முதலாக ஒரு பாடல் இயற்றினாள். அதன் தலைப்பு ‘Your Dark Glasses’ அதாவது ‘உங்களது கறுப்பு கண்ணாடி’ என்பதுதான். தன்னுடைய தந்தையின் கறுப்பு கண்ணாடிக்கு பின்புறம் மறைந்திருக்கும் வலியை மையப்படுத்தியது தான் அந்த பாடல்.
ஏழை குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய மகள் இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாகவும் பிறரோடு அன்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பிய அவரது அப்பா, அவர்களை விடவும் மோசமான நிலையில் வாழ்க்கை நடத்துகிறவர்களின் வாழ்க்கையை காண்பித்தார். அது அவளுக்கு பல பாடங்களை கற்றுத்தந்தது.
ஒருமுறை ஒரு உணவகத்திற்கு ஷகிராவை அழைத்துச் சென்றார் அவரது அப்பா. அங்கே ஒரு பெண் பெல்லி நடனம் ஆடிகொண்டு இருந்தார். அவர் ஆடுவதை பார்த்த ஷகிரா அதைப்போலவே மேசையில் நடனம் ஆட ஆரம்பித்தார். இதனைக்கண்ட பலரும் கைதட்டி ஆராவாரம் செய்ய ஷகிராவின் மனதிற்கு உள்ளே தானும் ஒரு கலைஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. அந்த உணவகத்தில் துவங்கியது தான் ஷகிராவின் பாப் இசை உலக பயணம்.
நான் சிறிய குழந்தையாக இருந்த போதும் மிகப்பெரிய வேலை என்னைத் தேடி வருமென நான் நம்பினேன் – ஷகிரா
ஷகிராவிற்கு கட்டை குரல் ஆகவே அவள் பள்ளியின் பாடல் குழுவில் சேர்க்கப்படவில்லை. பாடல் ஆசிரியர் அவளது குரல் ஆட்டின் குரல் போன்று இருப்பதாக கூறியதாக நினைவு கூறுகிறார் ஷகிரா. அப்படித்த்தான் இருந்தது என்றும் புன்னகையோடு ஒப்புக்கொள்கிறார் ஷகிரா. பள்ளியில் நன்றாக பெல்லி நடனம் ஆடும் மாணவி என்ற அடிப்படையில் தான் அனைவரும் என்னை அறிந்திருந்தனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது திறனை மேடைகளில் அரங்கேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தபடியால் தயக்கம், மேடை பயம் ஷகிராவை விட்டு அகன்று இருந்தது.
இறுதியாக ஒரு பாடல் வெளியிடும் நிறுவனத்தின் அதிகாரியின் சம்மதத்தை பெற்றிருந்தார் ஷகிரா. அவர் முன் தனது திறனை அரங்கேற்றிட அவரும் ஒருவழியாக ஆல்பம் வாய்ப்பு வழங்க சம்மதம் தெரிவித்தார். மூன்று ஆல்பம் வெளியிடுவதற்கு ஒப்பந்தம் ஆனது. முதல் இரண்டு ஆல்பமும் படுதோல்வியை சந்தித்தது. கடைசி ஆல்பம் வெற்றி பெற்றால் மட்டுமே நாம் பாப் உலகில் நீடிக்க முடியும் என்பது ஷகிராவிற்கு புரிந்தது. கடுமையாக முயற்சி செய்தார். இந்த உலகம் நம் இசையை கேட்க வேண்டுமெனில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அத்தனையையும் இதிலே காண்பித்தாக வேண்டும் என உறுதிபூண்டார் ஷகிரா. உழைப்பு முழுவதையும் கொட்டி உருவாக்கிய மூன்றாவது ஆல்பம் அவரை கைவிடவில்லை. இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிறகென்ன அவரது ஆல்பத்திற்காக ரசிகர்கள் காத்திருக்க துவங்கினார்கள்.
தனது வெற்றிக்கு பிறகு கிடைத்த பணத்தில் Barefoot Foundation என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவங்கினார். அதில் தற்போது 5 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 1000 குழந்தைகளுக்கு மேல் அங்கே சாப்பிடுகிறார்கள்.
ஷகிராவின் குரல் அவரது இசை ஆசிரியர் சொன்னபடியே ஆட்டின் குரல் போன்று இருந்திருக்கலாம். ஆனால் அது மற்ற மனிதர்களின் குரலில் இருந்து மாறுபட்ட குரல், அதை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் மக்கள் விரும்புவார்கள் என்பதை ஷகிரா உலகிற்கு நிரூபனம் செய்துள்ளார்.
உங்களிடம் இருப்பதைக் கொண்டு முயற்சி செய்திடுங்கள். ஒருநாள் வெற்றி நிச்சயம்.
உங்களை உந்தித்தள்ளக் கூடிய பல கட்டுரைகளை இங்கே கிளிக் செய்து படியுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!