Site icon பாமரன் கருத்து

டீச்சர் சைலஜாவுக்கு இதனால் தான் அமைச்சரவையில் இடம் இல்லையாம்

டீச்சர் சைலஜா

 

கேரளாவில் கொரோனா அவசர நிலையை கேரளா சிறப்பாக கையாண்டதில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் சுகாதாரத்துறை அமைச்சர் டீச்சர் சைலஜா. தற்போது அமையவிருக்கும் அமைச்சரவையில் அவருக்கே இடம் கொடுக்கப்படாதது பெரும் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் ஏன் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை என்ற காரணம் வியப்பை அளிக்கிறது.

தற்போது சமூகவலைதளங்களில் பெரும் பேசுபொருளாக இருப்பது டீச்சர் சைலஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை என்பது தான். கொரோனாவை சிறப்பாக கையாண்டது, கேரளாவில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றது என குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்டவர் தான் டீச்சர் சைலஜா. ஆனாலும் பினராயி விஜயன் தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை. இத்தனை சிறப்புமிக்க ஒருவருக்கு ஏன் இடம் கொடுக்கப்படவில்லை என்பது ஒருபுறம் எழுப்பப்படும் கேள்வியாக இருந்தாலும் கேரளா மீண்டும் கொரோனா பாதிப்பில் இருக்கும் போது இத்தனை அனுபவம் வாய்ந்த ஒருவரை சுகாதாரத்துறை அமைச்சராக போடாமல் புதிய ஒருவருக்கு அமைச்சராக பொறுப்பு கொடுத்தால் அவர் எப்படி நிலைமையை கையாள்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் ஏன் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை என்பதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவையில் டீச்சர் சைலஜாவுக்கு மட்டுமல்ல, முந்தைய அமைச்சரவையில் இருந்த எவருக்குமே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு பரவாயில்லை, சுகாதாரத்துறையை சிறப்பாக கையாண்ட சைலஜா அவர்களுக்கு மட்டுமாவது மீண்டும் பதவி வழங்கப்பட்டிருக்கலாமே என பலரும் கேட்கிறார்கள். ஆனால் இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சொல்லப்படும் காரணம், ‘கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரைக்கும் தனி நபர்களுக்கு எப்போதும் அடையாளம் கொடுக்கப்படுவது இல்லை. கட்சியும் அதன் கொள்கைகளும் தனி நபர்களை விடவும் உயர்ந்தவை” என சொல்லப்படுகிறது. ஆகையினாலேயே சைலஜா அவர்கள் உட்பட எவருக்குமே அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஒரே ஒருவர் மட்டும் மீண்டும் இருக்கிறார் அவர் பினராயி விஜயன் மட்டுமே.

அதுபோலவே இந்தத்தேர்தலில், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என முடிவு எடுத்தார் பினராயி விஜயன். மூத்த உறுப்பினர்கள் பலருக்கும் இதனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி செய்வதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என நினைத்தார்கள் ஆனால் மக்கள் 140 இடங்களுக்கு நடைபெற்ற போட்டியில் 99 இடங்களில் வெற்றியை தந்தார்கள். புதியவர்கள் சிறப்பாக பணி செய்திட இதுபோன்ற முடிவுகள் உதவுகின்றன.

ஒருபுறம், கட்சியின் கொள்கை மற்றும் முடிவு தனி நபர்களுக்கும் மேலானது என்பது வரவேற்புக்கு உரிய விசயமாக பார்க்கப்பட்டாலும் கூட முற்றிலும் புதிய அமைச்சரவையைக் கொண்டு எப்படி இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் ஆட்சியை நடத்தப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

காலம் பதில் சொல்லும்!






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version