ஆமைகளிலேயே பொல்லாத ஆமை என்ன தெரியுமா? முயலாமை தான் நண்பர்களே
ஆடியோ வடிவில் கேளுங்கள்
ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு [success] உயரவேண்டுமெனில் அதற்க்கு எதையாவது செய்துதான் ஆக வேண்டும். சிலர் உயருவதற்க்காக கடுமையாக உழைப்பார்கள், உழைத்துக்கொண்டே இருப்பார்கள் , சிலர் உயரத்திற்கு செல்ல திடீரென்று உழைத்துவிட்டு அப்படியே முயற்சியை விட்டுவிடுவார்கள், இன்னும் சிலரோ உயரத்தை அடைய வேண்டும் என விரும்புவார்கள் ஆனால் அதற்காக சிறு துரும்பைக்கூட அசைக்க மாட்டார்கள். அப்படி சோம்பேறித்தனத்தை [Laziness] கொண்டிருப்பவர்களுக்கு ஊக்கமளிக்கத்தான் இந்த கட்டுரை.
மூன்று வயதில் இரண்டு கால்கள், ஒரு கையை இழந்த ஒரு பெண்ணால் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள். முயன்றால் என்ன செய்யலாம் என்பதற்கு ஈராக்கை சேர்ந்த நஜ்லா இமாத் லாப்டா மிகப்பெரிய உதாரணம். முழு கட்டுரை இங்கே.
ஒரு குட்டிக்கதை
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். நல்ல எண்ணமுடைய சோம்பேறித்தனமற்ற ஒருவரை கண்டறிந்து அவருக்கு பரிசளிக்கவேண்டும் என்பது அவரது விருப்பம். அரண்மனைக்கு அருகில் இருக்கும் ஒரு பாதையில் ஒரு பெரிய பாறாங்கல்லை [boulder] வழியில் போட்டுவிட்டு போய்விட்டார். அந்த வழியாக அரண்மனைக்கு வர வேண்டியவர்கள் வந்தார்கள், சேவகர்கள் வந்தார்கள், பெரிய செல்வந்தர்கள் வந்தார்கள், கிராமத்து ஆட்கள் வந்தார்கள்.
எவருமே பாதையில் இடையூறாக இருக்கக்கூடிய அந்த பாறாங்கல்லை சாலையில் இருந்து அகற்றிப்போட முயலவில்லை. மாறாக சிலர், அரண்மனைக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய சாலையை பாருங்கள், பாறாங்கல் சாலையில் கிடக்கிறதே, இதைக்கூட சரியாக பார்க்க மாட்டேங்கிறாங்களே என குற்றம் தான் சொன்னார்கள்.
சில தினங்களுக்கு பிறகு ஒரு விவசாயி [peasant] காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வண்டியை இழுத்துவந்தார். சாலையில் பெரிய பாறாங்கல் இருப்பதனை பார்த்தார். பின்னர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பாறாங்கல்லை கஷ்டப்பட்டு நகர்த்தி சாலையில் இருந்து நகர்த்தினார். மீண்டும் வண்டிக்கு வரும் போது பாறாங்கல் இருந்த இடத்தில் ஒரு பண முடிப்பை இருந்தது. அதில் தங்க நாணயங்கள் இருந்தன. அதோடு அரசரின் செய்தியும் இருந்தது, ஆமாம் பல சோம்பேறிகளைப்போல வெறும் குறைகளை சொல்லிக்கொண்டு போகாமல் அதனை தீர்க்க நீங்கள் முயன்றதற்கான பரிசு தான் இந்த தங்க காசு என எழுதி இருந்தது.
முதல் அடியை எடுத்து வையுங்கள்
பாமரன் கருத்து இன்று ஓரளவிற்கு உங்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது. இணையதளம் என்ற வகையில் முன்னேறி இருக்கிறது. இது மிகப்பெரிய நிறுவனங்களை பொறுத்தவரையில் மிகப்பெரிய சாதனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தனி ஒருவனாக இவ்வளவு தூரம் வந்ததை நான் பெரிய சாதனையாகவே நினைக்கிறேன். இதனை நாம் பெருமைக்காக சொல்லவில்லை நண்பர்களே. நான் எதுவுமே செய்யாமல் விட்டிருந்தால் இந்த அளவிற்கு கூட வந்திருக்க முடியாது என்பதற்க்காக சொல்கிறேன்.
நிகழ்வுகளை பார்க்கும் போது அது குறித்தான நம் பார்வையை மக்களிடத்தில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வெகு நாளாக இருந்துவந்தது. நாம் அப்படியே மனதிற்குள்ளேயே என் எண்ணத்தை வைத்துவிட்டு எதையுமே செய்யாமல் இருந்திருந்தால் இன்று இப்படி ஒரு இணையதளம் என்ற வகையில் வளர்ந்திருக்க முடியாது. ஆரம்பகாலத்தில் மிகச்சாதாரணமான மீம்ஸ் போன்று போட்டோக்களில் என் கருத்துக்களை பகிர்ந்து ஆரம்பித்ததுதான் இந்த பயணத்தின் துவக்கம். அப்போது அதனை பலர் கிண்டல் செய்வார்கள், கண்டுகொள்ளாமல் தவிர்ப்பார்கள். ஆனால் ஒருநாள் அவர்களின் பார்வை என் பக்கம் திரும்பும் அதுவரை நாம் நம் செயலில் பின்வாங்கக்கூடாது என நினைத்துக்கொண்டே இருப்பேன்.
இதுபோன்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது கனவுகளை நோக்கி முதல் அடியை எடுத்துவைக்க துவங்குங்கள். வெற்றி கிடைக்கவில்லையா போகட்டும் ஆனால் நாம் முயன்றுதான் தோற்றோம் என்ற ஆறுதலாவது உங்களுக்கு கிடைக்குமல்லவா. தோல்வி காலியான பாத்திரம் அல்ல நண்பர்களே அது அனுபவத்தை அள்ளிக்கொடுக்கின்ற அட்சய பாத்திரம்.
சோம்பேறித்தனத்தை விட்டொழிப்போம் ! வெல்வோம் !
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!