சர்க்கார் திரைப்படம் அதிமுகவினரின் எதிர்ப்பினால் சில மாற்றங்களுக்கு பின்னர் வெளியாகி இருகின்றது. நிகழ்கால அரசியலை வைத்தே பல நிகழ்வுகள் எடுக்கப்பட்டு இருப்பதனால் அதிமுகவினரின் எதிர்ப்பை சம்பாதித்து இருப்பது என்பது எதிர்பார்த்த ஒன்றாகவே இருக்கின்றது .
கோமளவல்லி என்ற பெயரினை பயன்படுத்தியது , இலவசங்களை தீயில் இட்டு கொழுத்தியது , பொதுப்பணித்துறைதான் கொசு உற்பத்திக்கு காரணம் போன்றவை எடிட் செய்யப்பட்டவுடன் திரையிட அனுமதிக்கப்பட்டு இருப்பதனால் இவையே அதிமுகவினரின் எதிர்ப்புக்கான காரணமாக இருக்கவேண்டும் .
தணிக்கை துறை
ஒவ்வொரு திரைப்படமும் மத்திய அரசு நியமித்த தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் தான் திரையிட அனுமதிக்கப்படுகிறது . தணிக்கை குழுவில் இருப்பவர்கள் ஒன்றுமறியாதவர்கள் அல்லர் . சினிமாவை நன்கு அறிந்தவர்கள் , பொதுமக்களுக்கு எது சென்று சென்ற வேண்டும் என்பதில் இறுதி தீர்ப்பினை எடுக்க கூடியவர்கள் .
கருத்து சுதந்திரம்
இந்தியா ஜனநாயக நாடு . இங்கு எந்தவொரு விசயத்தையும் ஆதரித்து கருத்து பதிவு செய்யவும் , எதிர்த்து கருத்து பதிவு செய்யவும் அனைவருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி உரிமை உண்டு (சமூகத்திற்கு கேடு விளைவிக்க கூடாது ).
இலவசங்கள் நன்மையா தீமையா?
இலவசங்களை தீயிட்டு கொளுத்துவது போன்று ஒரு திரைக்காட்சி இந்த திரைப்படத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றது . இதுதான் சர்கார் திரைப்படத்தை எதிர்ப்பதற்கான மிக முக்கியமான காரணமாக அதிமுகவினரால் பார்க்க படுகின்றது .
ஆனால் இலவசங்கள் தமிழக மக்களுக்கு நன்மையே அதிகம் கிடைத்திருக்கின்றது என்பது எம்முடைய ஆணித்தரமான கருத்து . ஆனால் என்னுடைய கருத்தையே அனைவரும் ஏற்க வேண்டும் என என்னால் நிர்பந்திக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது . அவரவருக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் விவரங்களை பொறுத்தே கருத்துக்கள் மாறுபடுகின்றன . ஆகவே அனைவருக்கும் பொதுவான கருத்து இருக்கவே முடியாது .
சர்க்கார் திரைப்படம் இலவசங்களை எதிர்த்தால் அனைவரும் அதனை எதிர்க்க வேண்டியது இல்லை.
இலவசங்களை கொடுத்ததனால் தமிழக மக்களின் நிலை உயர்ந்திருக்கின்றது என்பதனை ஆட்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கலாம் , மக்கள் அதனை ஏற்பார்கள் .
கோமளவள்ளி பெயர் சர்ச்சை
சர்கார் அரசியல்படம் என்பது எடுப்பதற்கு முன்பே தெரிந்திருக்கும் . அதேபோல முருகதாஸ் அவர்களுக்கு கோமளவள்ளி என்பது முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இயற்பெயர் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும் . ஜெயலலிதா அவர்களை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம் . ஆனால் ஜெயலலிதா ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவராக இருந்தவர் , தற்போது உயிரோடு இல்லை . ஆகவே அவரது பெயரினை படத்தில் நடிக்கும் ஒரு வில்லிக்கு வைத்திருப்பது தவிர்த்திருக்கப்பட வேண்டியது .
திமுகவின் மவுனம் ஏன்?
அதிமுகவிற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத அளவிற்கு இலவசங்களை வாரி வழங்கிய கட்சி திமுக , ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு எதிர்ப்பும் கிளம்பவில்லை . காரணம் கலாநிதி மாறன் தயாரித்தது என்பதனாலா அல்லது கருத்து சுதந்திரத்தினாலா என்பது பதில் அறியாத கேள்வி .
நீதிபதியின் கேள்வி
சர்க்கார் திரைப்பட இயக்குநர் முருதாஸ் அவர்கள் இன்று முன்ஜாமீன் கோரியபோது நீதிபதி எழுப்பிய கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவை ,
சர்க்கார் திரைப்படத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதா ?
சர்கார் திரைப்படத்தில் கிரைண்டர் மிக்சிக்கு பதிலாக தொலைக்காட்சி பெட்டியை எரித்திருந்தால் ஆதரித்து இருப்பீர்களா என கேட்டிருந்தார் .
ஆள்பவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் எதிர்பக்கத்தில் இருந்து குறை சொல்பவர்களின் குரல்களை கேட்கும் மனப்பக்குவம் வேண்டும் . எதிராளிகள் தான் உங்களை நன்றாக கண்காணித்து குறைகளை சொல்வார்கள் , அவர்கள் கண்ணாடியை போன்றவர்கள் . அதனை உடைப்பதைவிட குறைகளை கடந்து அழகாக்கிக்கொள்ள முயன்றால் நன்மை உங்களுக்கே .
பாமரன் கருத்து