ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைந்ததால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று கேரளாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சபரிமலையில், 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய நூற்றாண்டுகாலமாக அனுமதிக்கப்படுவதில்லை. இதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
பெண்கள் சபரிமலைக்குள் செல்லலாம் என சொல்லும்போது அதற்க்கு எதிராக சில நபர்கள் பேசும்போது “பெண்களை காளைகளை அடக்க வரலாமே?” என அழைப்பதை காண முடிகிறது. இது கேட்பதற்கு உகந்த கேள்வியா? பெண்கள் நுழையக்கூடாது என்பதற்கு சரியான காரணம் இல்லாததால் சொல்லுகிற வெற்று பிதற்றலா என பார்க்க இருக்கிறோம்.
சபரிமலையில் பெண்கள்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, சில பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய முயன்றனர். ஆனால், பல்வேறு இந்து சமய அமைப்புகளின் எதிர்ப்புகள் காரணமாக பெண்கள் செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் தரிசனம் செய்தனர். பெண்கள் நுழைந்ததால் கோவிலின் புனிதம் மற்றும் பாரம்பரியம் கெட்டுவிட்டதாகக்கூறி, பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தந்திரி ராஜீவரரூ சுத்தி அவர்களால் பூஜை நடத்தப்பட்டு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. மேலும், கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு இந்து மற்றும் பாஜக அமைப்பினர் போராட்டம் செய்து வன்முறையில் ஈடுபட்டதுடன் முதலமைச்சர் திரு. பிரனாயி விஜயன் அவர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
——————————————————————————————-
விளம்பரத்தை கிளிக் செஞ்சுராதிங்க பயந்துருவீங்க
——————————————————————————————–
பெண்கள் சபரிமலையில் நுழைவதால் என்ன தவறு?
ஐயப்பன் சபரிமலையில் பிரம்மச்சாரியாக உள்ளார். இதனால் ஆண்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்லவேண்டும் மற்றும் பெண்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று கூறுகிறீர்கள். பிரம்மச்சரியம் என்பது தன்னடக்க நிலை என்று பொருள். ஆனால் நீங்களோ “பெண்கள் கோவிலுக்கு வந்தால் ஆண்களின் பக்தி மற்றும் பிரம்மச்சரியம் கெட்டுவிடும்” என்று கூறுகிறீர்கள். இதுதான் உங்களின் பக்தி மற்றும் பிரம்மச்சரியமா?
பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் சென்றதால் கோவிலின் புனிதம் மற்றும் பாரம்பரியம் பாதிக்கப்பட்டுவிட்டது என்றுகூறி கோவிலை சுத்தம்செய்து பூஜை செய்கிறீர்கள். பெண்களை இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது. நீங்கள் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல உங்களைவிட பக்தியோடு இருப்பவர்கள் பெண்கள். சபரிமலைக்கு வரும் ஆண்களின் பக்தியைவிட, பெண்கள் 1000 மடங்கு பக்தி கொண்டவர்கள். அய்யப்பன் பெண்களை பார்க்க விரும்பாதவன், பெண்களுக்கு எதிரானவன் என்றால் ஆண்கள் மட்டுமே பக்தியோடு இருக்கலாமே? ஏன் வீட்டிலுள்ள பெண்களை விரதமிருக்க சொல்கிறீர்கள்? உங்களுக்கு முன்னரே எழுந்து, குளித்து, தொழுதபின் உணவு சமைத்து ஏன் கொடுக்கவேண்டும்? இதையெல்லாம் நீங்களே செய்யலாமே? நீங்கள் வணங்கும் அய்யப்பன் கூட ஒரு பெண்ணிற்காகதான் புலிப்பால் கொண்டுவர காட்டிற்கு சென்றான் என்பதை மறவாதீர்கள்.
——————————————————————————————-
விளம்பரத்தை கிளிக் செஞ்சுராதிங்க பயந்துருவீங்க
——————————————————————————————–
சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்த செய்தி நாடெங்கும் பரவி சமூகவலைத்தளத்தில் விவாதத்திற்குள்ளானது. பலர் இதனை ஆதரித்தும் ஒருசிலர் எதிர்த்தும் கருத்துகளால் மோதிக்கொண்டனர்.
எதிர்த்தவர்களில் சிலர், “பெண்கள் விளம்பரத்திற்காகதான் சபரிமலைக்கு வருகிறார்கள்” என்று கூறுகிறார்கள். அவ்வாறு இருப்பின் அதுவும் ஒருவகையில் நல்லவிசயம்தான். இதனால் இன்னும் பல பெண்கள் சபரிமலை வருவதற்கு ஒரு விழிப்புணர்வாக அமையும்.
அரசியல் கட்சி சார்ந்தவர்களும், மதம் சார்ந்த அமைப்பினர்களோ அவர்களை மாவோயிஸ்ட்டுகள் என்றும் இவர்களால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று கூறுகின்றார்கள். கோவிலுக்குள் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும்போது கெடாத புனிதம் இந்த இரண்டு பெண்கள் நுழைந்ததால் கெட்டுவிடுமா என்ன?
சிலர் “பெண்கள் ஆண்களுக்கு நிகர் என்றால், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டில் மாட்டை அடக்க வாருங்கள். ஏனெனில், இங்கு ஆண்களே பல ஆண்டுகளாக மாடுகளை பிடித்து வருகின்றனர்” என்று கேலி பேசினார். சிலர் இதனை ஆதரித்தும் தத்தம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். உண்மைதான்.
பெண்கள் தற்போது மாடுகளை அடக்குவதில்லை தான், ஆனால் அவர்களால் அடக்க முடியாது என்பதல்ல. எத்தனையோ கடுமையான பணிகளையும் உயர்வான பணிகளையும் ஆணுக்கு நிகராக பெண்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஆண்களில் 1% க்கும் குறைவான ஆண்கள் தான் ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறார்கள். சபரிமலைக்கு செல்வதற்கு காளைகளை அடக்குவதுதான் தகுதி என்றால் 99% ஆண்கள் சபரிமலைக்கு சொல்லக்கூடாதா?
இன்னும் எத்தனை காலம் இப்படி வெற்றுக்காரணங்களை கூறிக்கொண்டு முரண்டுபிடித்துக்கொண்டே போகப்போகிறோம் என தெரியவில்லை. மாறுங்கள் மனதை மாற்றுங்கள்.
நன்றி,
க. வினோத்குமார்