Site icon பாமரன் கருத்து

அன்று 6 ஆம் வகுப்பில் பெயில் இன்று IAS அதிகாரி | எப்படி சாதித்தார் ருக்மணி ரியார்?

rukmani-riar-ias-success story-tamil-motivational story-min

பள்ளியில் 6 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த பிறகு பிறரை சந்திக்கவே வெட்கப்பட்ட ருக்மணி ரியார் அதன்பிறகு அடைந்த எழுச்சியின் காரணமாக சிறப்பாக கல்வி பயின்று பின்னர் IAS அதிகாரியானார். அதிலும் கோச்சிங் சென்டருக்கே செல்லாமல் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.

ஐஏஎஸ் என்பது பலரது கனவு. அந்தக்கனவை சுமந்துகொண்டு இருப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய விதத்தில் மிகவும் சிக்கலான சூழலில் இருந்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்த வெற்றியாளர்களின் கதைகளை உங்களுக்கு வழங்கி வருகிறோம். அந்த விதத்தில் இந்தப்பதிவில் நாம் பார்க்கக்கூடிய சாதனையாளர் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் என்ற ஊரை சேர்ந்த ருக்மணி ரியார். இவருக்கு ஏற்பட்ட சவால் என்பது இன்று பல மாணவர்களுக்கும் ஏற்படக்கூடிய சவால். ஆகவே தான் அவரது வெற்றிக்கதையை நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்தப் பதிவை பார்க்கும் வாய்ப்பை பெற்று இருந்தால் பிறருக்கும் இதை பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆரம்பக்கல்வி கால கட்டத்தில் ருக்மணி ரியார் சிறப்பான மாணவியாக இருக்கவில்லை. எதிர்பாராத விதமாக 6 ஆம் வகுப்பில் அவர் தோல்வி அடைந்தார். அவர் தோல்வி அடைந்த செய்தியை அறிந்தபிறகு அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் வெட்கப்பட்டார். பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற மன உளைச்சல் அவருக்கு அதிகமாக இருந்தது. சில மாதங்கள் இந்த மன அழுத்தத்தில் இருந்த அவர் பின்னர் தனது பயத்தை வென்று அதையே மூலதனமாக்கினார். அன்றில் இருந்து புதியதொரு ருக்மணி ரியார் வெளிப்பட ஆரம்பித்தார்.

12 ஆம் வகுப்புக்குப் பிறகு, ருக்மணி அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் பட்டம் (Social Science) பெற்றார். அதன் பிறகு, மும்பையில் உள்ள டாடா கல்வி நிறுவனத்தில் சமூக அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதிலே அவர் தங்கப்பதக்கம் பெற்றார். 

6 ஆம் வகுப்பில் கல்வியில் போதிய நாட்டம் இல்லாமல் இருந்த ஒருவர் முதுகலைப்படிப்பில் தங்கப்பதக்கம் வெல்கிறார் என்றால் அவரது மன உறுதியை கடின உழைப்பை பாருங்கள். முயன்றால் கல்வியும் கைக்கூடும் என்பதை நிஜத்தில் பாருங்கள். முதுகலை கல்வியில் தேர்ச்சி பெற்றபிறகு சில NGO க்களோடு இணைந்து திட்டங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அந்தப்பணியில் இருக்கும் போது தான் அவரது கவனம் ஐஏஎஸ் பக்கம் சென்றது. நாமும் ஐஏஎஸ் அதிகாரி ஆக முயற்சித்தால் என்ன என யோசித்த அவர் உடனடியாக களத்தில் இறங்கினார்.

ஏற்கனவே கல்வியில் சிறந்து விளங்கிய அவருக்கு இதிலும் தன்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் அவர் ஐஏஎஸ் தேர்வுக்கு தயார் ஆக ஆரம்பித்தார். பள்ளி பாடப்புத்தகங்களை முதலில் முழுவதுமாக படிக்க ஆரம்பித்தார். பின்னர் நாளிதழ்களையும் வார, மாத இதழ்களையும் வாசிக்க ஆரம்பித்தார். கடந்த 7 ஆண்டுகளில் நடைபெற்ற UPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்களை எழுதி தன்னை தயார்படுத்திக்கொண்டார். இப்படி, அவர் ஒவ்வொரு விதத்திலும் தன்னை தேர்வில் தேர்ச்சி அடைவதற்காக தயார்படுத்திக்கொண்டே இருந்தார்.

அவர் கலந்துகொண்ட முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் அவர் இரண்டாம் இடம் பிடித்து தேர்ச்சி அடைந்தார். சிலர் மட்டுமே இந்திய அளவில் இவரைப்போன்று சாதித்து இருக்கிறார்கள். அவரது வெற்றியின் மூலமாக அவர் ஐஏஎஸ் அதிகாரியானார். அவரது வெற்றியால் அந்தக்குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. இளைஞர்களே! இவரது கதையின் மூலமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான். பள்ளியில் சில தோல்விகளைக் கண்ட பிறகு எனக்கு படிப்பு வராது, நான் வேஸ்ட் என நினைக்காமல் முன்பை விடவும் கொஞ்சம் கூடுதலாக கடுமையாக உழைத்தால் நிச்சயமாக வெற்றிபெற முடியும். அதற்கு நிகழ்கால உதாரணம் ருக்மணி ரியார்.

கடினமான சூழலில் IAS அதிகாரிகளாக ஆனவர்கள் வெற்றிக்கதையை இங்கே படிக்கலாம்

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்

Share with your friends !
Exit mobile version