பயனாளர்களின் தகவல்கள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்ட இந்த ஆப்பானது மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் இந்திய அரசு ஆரோக்யா சேது [Aarogya Setu] என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்திருந்தது. அதிகம் பேரால் டவுன்லோட் செய்யப்படும் ஆப்களில் ஒன்றாக இருக்கும் Aarogya Setu ஆப்பானது கொரோனா தொற்றுக்காலத்தின் போது நோயாளிகளை கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு விவரங்களை வழங்கவும் உருவாக்கப்பட்டது. பயனாளர்களின் தகவல்கள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்ட இந்த ஆப்பானது மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக சௌரவ் தாஸ் என்பவர் ஆரோக்யா சேது ஆப்பை யார் உருவாக்கினார்கள் உள்ளிட்ட சில தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறிந்துகொள்ள விண்ணப்பித்து உள்ளார். அரசாங்கத்திற்கு தேவையான இணையதளங்கள், ஆப்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்து தரும் அமைப்பாக இருக்கக்கூடிய தேசிய தகவல் மையமானது [National Informatics Centre] ஆரோக்யா சேது ஆப்பை உருவாக்கியவர்கள் பற்றிய தகவல்கள் தங்களிடம் இல்லை என தெரிவித்துவிட்டது. உடனடியாக இதற்கு எதிர்வினை ஆற்றிய மத்திய தகவல் ஆணையம் [Central Information Commission] ஆனது நீங்கள் உருவாக்கிய ஒரு ஆப்பை யார் உருவாக்கினார்கள் என்பது குறித்த தகவல் உங்களிடம் எப்படி இல்லமால் போனது என கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும் எந்தவித தகவலும் இல்லாமல் gov.in என்ற டொமைனின் கீழ் எப்படி இந்த இணையதளம் https://aarogyasetu.gov.in/ உருவாக்கப்பட்டிருக்கிறது எனவும் இதற்கான பதிலை எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும் தகவல் ஆணையர் வனஜா என் சர்னா கேட்டிருக்கிறார்.
இப்படி பிரச்சனைகள் எழுந்ததை அடுத்து மத்திய அரசின் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆரோக்யா சேது ஆப் அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் கூட்டுமுயற்சியில் தயாரிக்கப்பட்ட ஆப். வெறும் 21 நாட்களுக்குள் பயனுள்ள இந்த ஆப் உருவாக்கப்பட்டது பெரும் சாதனையாகும். இந்த ஆப்பானது NIC மற்றும் துறை வல்லுநர்கள் இணைந்து உருவாக்கிய ஆப். இந்த ஆப் குறித்த privacy policy மற்றும் தகவல் எப்படி கையாளப்படும் என்பது உள்ளிட்ட தகவல்கள் aarogyasetu.gov.in போர்ட்டலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலவீனமாகும் தகவல் அறியும் உரிமை சட்டம்
அரசு சார்ந்த அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் சட்டம் தான் தகவல் அறியும் உரிமை சட்டம். இந்த சட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் அரசு சார்ந்த அமைப்புகளின் மீது எந்தக் கேள்வியையும் தொடுக்க முடியும். அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டியது அரசின் கட்டாயக்கடமை. பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்கின்ற கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்காமலும் நீண்ட நாட்களுக்கு இழுத்தடித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயனை முழுமையாக மக்கள் அனுபவிக்க விடாமல் செய்கிறார்கள் பொறுப்பில் இருப்பவர்கள்.
இங்கும் அதே மாதிரியான போக்குத்தான் நடந்திருக்கிறது. உண்மையான அக்கறையோடு செயல்பட்டிருந்தால் தற்போது அரசு அளித்திருக்கக்கூடிய விசயங்களை அப்போதே கேள்வி கேட்டவருக்கு கொடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வளவு அலட்சியம். அதேபோல இங்கே தகவல் போதாமையும் இருந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. தங்களின் பங்களிப்பின் கீழ் உருவாக்கிய ஒரு ஆப் யாரால் உருவாக்கப்பட்டது என்ற தகவல் இல்லை என்பது அதிர்ச்சிகரமான விசயம். இவர்களை நம்பித்தான் பல கோடி மக்களின் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கிறது எனும் போது அச்சப்படாமல் எப்படி இருக்க முடியும்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!