Site icon பாமரன் கருத்து

போராட்டங்களினால் தமிழகத்தின் பொருளாதாரம் குறைந்ததா? | Why Tamilnadu GDP felt?

அண்மையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகின்றது . என் கம்பெனியை  மூடிட்டாங்கனு உன்கிட்ட வந்தா நீ உன் கம்பெனிய மூடி ரெண்டு மாசம் ஆச்சுன்னு சொல்ற …..என துவங்குகின்றது அந்த வீடியோ . பிறகு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு போராட்டங்கள் அதிகமானதாகவும் அதனால் தமிழகத்தின் GDP அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் இதற்கெல்லாம் முக்கிய காரணம் சீனாவின் சித்துவேலை எனவும் கூறுகின்றது .

 

பிறகு அனைத்திற்குமே காரணம் நக்சலைட் எனவும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு செயல்படுவதாக முடிகின்றது .

 

நான் ஒரு பொருளாதார வல்லுனராக இல்லாமல் இருந்தாலும் இந்த வீடியோவினை வெளிட்ட நபர்கள் மாதிரியே இணையத்தில் சில தகவல்களை திரட்டி உங்களுக்காக தந்திருக்கிறேன் .

 
தமிழகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறதா ? அப்படியானால் அதற்கு நக்ஸல்களும் சீனாவும் காரணமா ? என்பதனை பார்ப்போம் உண்மை காரணம் என்ன ?

 

 

தமிழகத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரமுமே குறைந்துகொண்டு தான் வருகின்றது . இந்த வீடியோவில் சொல்லப்பட்டது  மாதிரி தமிழகத்தின் பொருளாதாரம் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் குறைந்துதான் வருகின்றது .

 

ஆனால் அதற்கான காரணமாக மக்களின் போராட்டங்களை மட்டுமே இந்த வீடியோவில் கூறியிருக்கிறார்கள் , அது தவறானது என நான் எண்ணுகின்றேன் .

 

எதற்காக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது என இணையத்தில் தேடியபோது Times of  India நாளிதழில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது . அதன் சுருக்கம் உங்களுக்கு சிறு விளக்கத்தை கொடுக்கும் .

 

Courtesy : Times of India

 

2015  – 16  இல் 8 .79 ஆக இருந்திட்ட தமிழகத்தின் GDP 2016 – 17 இல் 7.93 ஆக குறைந்தது . இதற்க்கான முக்கிய காரணமாக பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுவது பண மதிப்பிழப்பு தான் (Demonetization).

 

பண மதிப்பிழப்பு பற்றி இந்த வீடியோவில் குறிப்பிடப்படாதது ஏன் ? என தெரியவில்லை .

 

 

 

தமிழகம் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருந்ததற்கு மிக முக்கிய காரணம் அதிகபடியான உள்மாநில உற்பத்தி , அதிக அளவில் தமிழகத்தில் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன .

 

பண மதிப்பிழப்பினை அறிவித்த பிறகு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது என அனைவருமே அறிந்தது தான் . அதன் காரணமாக ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தபோதும் , போராட்டங்கள்   நடைபெறாமல் இருக்கும்போதும் கூட பல உற்பத்தி கூடங்கள் , சிறு தொழில்கள்  முடங்க ஆரம்பித்தன .

 

நவம்பர் மாதத்தில் பண மதிப்பிழப்பு டிசம்பர் மாதத்தில் அப்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணமும் சேர்ந்துகொண்டு தமிழகத்தின் பொருளாதரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின .

 
ஜெயலலிதா மரணமும் மக்களின் போராட்டமும்

 

ஜெயலலிதா என்கிற ஆளுமையின் மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது . அதிமுகவிற்கு ஆட்சிக்காலம் இருந்தபோதும் ஜெயலலிதாவிற்கு பிறகு ஆளுமையாக ஆட்சி செய்வதற்கான தலைவர் இல்லாமல் போனதும் அரசியல் குழப்பங்களும் முதலீட்டாளர்களை சற்று கலக்கமடைய செய்தது உண்மை தான் .

 

 

ஜெயலதாவின் மரணத்திற்கு பிறகு  நடைபெற்று வருகின்ற போராட்டங்களும் அதனால் ஸ்டெர்லைட்  ஆலை மூடப்பட்டதும் முதலீட்டாளர்களை கலக்கமடைய செய்துகொண்டிருப்பது உண்மை தான் .

 

போராடுபவர்கள் நக்சல்கள் அல்லர்

 

ஸ்டெர்லைட் ஆலை இந்தியாவின் மிகப்பெரிய காப்பர் தேவையை பூர்த்தி செய்துகொண்டிருந்தது உண்மைதான் . அதேபோல கேன்சர் அதிகமிருக்கின்ற மாவட்டங்களின் பட்டியலில் தூத்துக்குடி முன்வரிசையில் இல்லை .

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்

அதற்காக ஸ்டெர்லைட் ஆலையினால் பாதிப்பு இல்லவே இல்லையா என்றால் , பாதிப்பு குறித்து அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை பாதிப்புகளை பொதுமக்களும் சில அமைப்புகளும் முன்வைத்துவருவதை மறுத்துவிடவும் முடியாது .

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கபட்டது உச்சநீதிமன்றத்தால் என்பதே ஏதோ அங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது அல்லவா 

 

தற்போது ஒரு கருத்து நிலவி வருகின்றது , போராட்டக்காரர்கள் சமூக விரோதிகள் , நக்சல்கள் என்று .

 

இது முற்றிலும் தவறானது என நான் எண்ணுகிறேன் . ஒருவேளை போராட்டக்காரர்களில் அவ்வாறு சூழ்ச்சிகளோடு செயல்படுபவர்கள் இருந்தால் அதனை கலைய வேண்டியது அரசின் கடமை .

 

சீனா மட்டுமா இந்தியாவை ஒழிக்க பார்க்கின்றது ?

 

இந்திய பொருளாதாரத்தை குறிவைத்து சீனா செயல்படுவதாகவும் நக்சல் போன்ற அமைப்புகளுக்கு பணம் கொடுத்து ஸ்டெர்லைட் ஆலை போன்ற முக்கிய ஆலைகளை மூடச்செய்வதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது . இதனை பொருளாதார போர் என கூறுகிறார்கள் . 

இருக்கலாம் வாய்ப்பிருக்கின்றது . ஆனால் இது இயற்கையான ஒன்று . ஒவ்வொரு நாடும் தான் முன்நிலை பெறவேண்டும்  என்கிற நோக்கத்தில் அடுத்தநாடுகளின் மீது போர் தொடுப்பதும் , பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்த முயல்வதும் , தங்களுக்கு ஏற்ற அரசாங்கத்தை அமைக்க முயல்வதும் தினம் அரங்கேறுகிற நிகழ்வுதான் .

 

இந்தியாவும் கூட பிற நாடுகளில் இதே நடவெடிக்கைகளில் ஈடுபடலாம் .

 

இவை அனைத்தையும் முறியடிக்க வேண்டியது பாதுகாப்புத்துறையின் , அரசின் கடமை.

 

 இறுதியாக நான் சொல்லவருவது என்னவென்றால் , பொதுமக்களின் போராட்டம் மட்டுமே தமிழகத்தின் வளர்ச்சியை குறைக்கவில்லை . பண மதிப்பிழப்பிற்கும் இதில் முக்கிய பங்கு mஇருகின்றது . ஜெயலலிதா என்கிற ஆளுமையின் திடீர் மறைவும் காரணம் .

 

போராடுவது மக்களின் ஐனநாயக உரிமை . ஒருவேளை ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அது அதிகமாகியிருக்கிறது என்றால் அதில் மகிழ்ச்சி தான் அடையவேண்டும் . போராட்டத்திற்கான கோரிக்கைகளை சரிசெய்து மக்களுக்கான அரசாக செயல்படும் பட்சத்தில் தொழில்துறை வீழ்ச்சி அடையாது . ஈர்க்கவே செய்யும் .

 

போராட்டக்குழுக்களில் சில தவறாக கூட செயல்படலாம் , அனைவருமே குற்றவாளிகள் , நக்சல்கள் என கூறுவது அபத்தம் .

 

 ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும்போது பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கும் தமிழகம் சந்திப்பது இயல்பானதே . அதற்காக மக்களின் போராட்டங்களை மட்டுமே குறையாக சொல்வது தவறானது .

 

போராடுவது அவர் அவரின் தனிபட்ட உரிமை , சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் தங்களுக்கேற்ற கருத்துக்களை பயன்படுத்தி ஆதரவு தேடுவது அதிகரித்து வருகிறது .

 

ஒரு சின்ன தேடலும் விழிப்புணர்வும் இருந்தால் போதும் அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

 

 பாமரன் கருத்து

 

Exit mobile version