சுதந்திர நாடான உக்ரைன் மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் நேட்டோவில் சேரவும் முனைப்பு காட்டியது. அண்டை நாட்டின் இத்தகைய நடவடிக்கை தங்களுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அதன் மீது போர் தொடுக்கிறோம் என்கிறது ரஷ்யா.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் பிப்ரவரி 24,2022 அன்று உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவெடிக்கைகளை துவங்குமாறு தனது ராணுவத்திற்கு ஆணையிட்டார். ரஷ்ய மக்களை காப்பதற்காகவே இந்த போரை துவங்கி இருப்பதாகவும் மற்றபடி உக்ரைன் நாட்டின் நிலத்தை ஆக்கிரமிப்பது நோக்கமல்ல எனவும் புடின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து பல முனைகளில் இருந்தும் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவெடிக்கைக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் எதிர்வினை ஆற்றியுள்ளார்கள். சீனா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
உக்ரைன் பக்கம் நியாயம் உள்ளதா ரஷ்யாவின் பக்கம் நியாயம் உள்ளதா என்பதை தெரிந்துகொள்வதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை தெரிந்துகொள்வது அவசியம்.
What is the conflict between Russia and Ukraine?
1991 இல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பிறகு உக்ரைன் ஒரு சுதந்திர நாடாக மாறியது. ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக உக்ரைன் தான் மிகப்பெரிய பரப்பளவை கொண்ட நாடு. ரஷ்யாவுடன் கிழக்கு மற்றும் வட கிழக்கு திசைகளில் எல்லைகளை பகிர்ந்து வருகிறது உக்ரைன். அதனால் தான் உக்ரைன் நாட்டின் ஒவ்வொரு நடவெடிக்கைக்கும் ரஷ்யா எதிர்வினை ஆற்றுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, ஊழல் மற்றும் உள் பிளவுகளுக்கு எதிராக உக்ரைன் போராடி வருகிறது. நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளவர்கள் மேற்கு நாடுகளுடன் ஒருங்கிணைய விரும்புகிறார்கள். அதே சமயம் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் ரஷ்யாவுடன் ஒருங்கிணைய விரும்புகிறார்கள்.
[உலகிலேயே இரண்டாவதாக அதிக எண்ணெய் உற்பத்தி செய்திடும் நாடு ரஷ்யா. அதனை நம்பியே பல ஐரோப்பிய நாடுகள் இருப்பதால் அவை பெரிய அளவில் ரஷ்யாவை பகைத்துக்கொள்ள விரும்பாது.
முன்னாள் உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் மாஸ்கோவுடன் [Russia] நெருக்கமான உறவை கொண்டிருந்தபடியால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டு ஒப்பந்தத்தை நிராகரித்தார். ஆனால் இது மிகப்பெரிய போராட்டத்திற்கு வழிவகுத்தது. கண்ணியத்தின் புரட்சி [Revolution of Dignity] என்று அழைக்கப்படும் போராட்டத்தின் மூலமாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதியை வெளியேற்றினார்கள். அதற்குப் பிறகு ஜனாதிபதி ஆனவர் தான் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி. முந்தைய ஜனாதிபதியை அகற்ற நடந்த கலவரம் மேற்குலக நாடுகளின் திட்டமிட்ட சதி என புதின் குற்றம் சாட்டினார்.
இதன் பிறகு, ரஷ்யா உக்ரைனின் கிரிமியன் தீபகற்பத்தை இணைத்து, கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாத கிளர்ச்சியை ஆதரித்தது. இதற்குப் பிறகு, அது நாட்டின் தொழில்துறை மையமான டான்பாஸைத் தாக்கியது. உக்ரைன் படைகளுக்கும் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே நடந்த ஆயுத மோதலில் 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
[சில தினங்களுக்கு முன்பாக கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள இரண்டு பிரதேசங்களை தனி நாடாக அங்கீகரித்தது ரஷ்யா]
கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை ரஷ்யா தான் கொடுத்து அனுப்பியதாக உக்ரைனும் மேற்கு நாடுகளும் குற்றம் சாட்டின. ஆனால் இதனை ரஷ்யா மறுத்தது. இன்னொரு பக்கம், உக்ரைனுக்கு மேற்குலக நாடுகளும் நேட்டோவும் இராணுவ பயிற்சி கொடுத்ததால் ரஷ்யா நேட்டோவை விமர்சித்தது. இதுவரைக்கும் உக்ரைன் நேட்டோவில் இணையாவிட்டாலும் கூட, உக்ரைனில் இராணுவப் பயிற்சி மையங்களை நிறுவ சில நேட்டோ உறுப்பினர்கள் திட்டம் தீட்டுவதாக புடின் குற்றம் சுமத்தி இருந்தார்.
உக்ரைன் நாடானது மிகவும் ஏழை நாடு, அதேபோல ஊழல் மலிந்த நாடு. ரஷ்யாவிடம் இருந்து பெரிய அளவிலான பலன்கள் தங்களுக்கு கிடைக்காமல் போனதால் உக்ரைன் மேற்குலக நாடுகளுடன் நட்பு கொள்ள விருப்பம் தெரிவித்தது. அதேபோல, பாதுகாப்பு காரணங்களுக்காக நேட்டோவில் இணையவும் உக்ரைன் விரும்பி அதற்கான நடவெடிக்கைகளை துவங்கியது [ நேட்டோவில் உறுப்பு நாடாக உள்ள ஒரு நாட்டின் மீது வேறு நாடுகள் போர் தொடுத்தால் நேட்டோவில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உறுப்பு நாட்டுக்கு ஆதரவாக களம் இறங்கும்]
உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால் ரஷ்யாவுக்கு என்ன பிரச்சனை என்ற கேள்வி எழலாம். பல தசாப்தங்களாகவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில், தனக்கு அண்டை நாடான உக்ரைன் நாட்டின் மேற்குல நாடுகளின் நேட்டோ மையம் அமைந்திட ரஷ்யா விரும்பவில்லை. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அச்சறுத்தல் ரஷ்யாவுக்கு இருக்கும் என்பதே தற்போது நடக்கும் போருக்கான முக்கியக் காரணம்.
கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவிக்கத் துவங்கியது. போர் நடந்தால் அது பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகள் ரஷ்யாவை பொறுமை காக்குமாறும் பேச்சுவார்த்தைகள் மூலமாக முடிவை எட்டுமாறும் வலியுறுத்தின. உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிப்பது தங்களது நோக்கம் அல்ல என்று சொன்ன புதின் சில படை அணிகளை திரும்பப் பெறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். ஆனால், அமெரிக்கா கணித்தது போல உக்ரைன் நாட்டின் மீது திடீரென போரை அறிவித்தார் புடின்.
[உக்ரைன் நாட்டிற்கு மேற்குலக நாடுகள், நேட்டோ நாடுகள் தந்த ஆதரவே புடின் இத்தகைய நடவெடிக்கையை எடுக்க காரணம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் களத்தில் உக்ரைன் நாட்டுடன் நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை அறிவித்து தாக்குதல் நடத்த துவங்கிய பிறகு அதன் மீது பல்வேறு கடுமையான பொருளாதார நடவெடிக்கைகளை பல நாடுகள் எடுத்துள்ளன. சொத்துக்களை முடக்கி உள்ளன. வங்கிகளை தடை செய்துள்ளன. ஆனால், சீனா நாடானது ரஷ்யா அதன் பாதுகாப்புக்காகவே இந்த நடவெடிக்கைகளை எடுத்திருப்பதால் ஆதரிக்கிறோம் என்று சொல்கிறது. புடினுடன் பேசிய இந்தியப்பிரதமர் போரை உடனடியாக நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் உக்ரைன் நாட்டுக்கு பக்கபலமாக எந்தநாடும் களமிறங்காதது வருத்தம் அளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் சீனா ராணுவ மையத்தை அமைத்தால் இந்தியா எப்படி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நினைக்குமோ அதேபோன்றதொரு நிலையில் தான் ரஷ்யா இருப்பதாக சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
பெரும் பலம் வாய்ந்த ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் நாடு செயல்படுவதற்கு போதிய நம்பிக்கையை தந்த மேற்குலக நாடுகள் இப்போது அந்த நாட்டை தனித்து விட்டிருப்பது வேதனைக்கு உரிய விசயம். உலக அரசியல் மனித குலத்தின் நன்மைக்காக இல்லாமல் அழிவுக்காக இயங்குவது கவலை அளிக்கிறது.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!