இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோய்பரவல் குறைவான இடங்களில் மதுக்கடைகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் போதிய முன்னேற்பாடுகளோடு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு கூறியது. இதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்தன. மத்திய அரசின் உத்தரவு வந்தவுடனேயே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் என போடப்பட்ட வழக்குகளை “இது அரசின் கொள்கை முடிவு அதில் தலையிட முடியாது என்றும் டாஸ்மாக் கடைகளில் இந்த நடைமுறைகளை பின்பற்றுங்கள் என்றும் சில வழிமுறைகளை வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். மதுவிற்பனை அமோகமாக நடந்த சூழலில் பல்வேறு இடங்களில் நீதிமன்றம் கொடுத்த வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை, நோய்த்தொற்று அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என பொதுநல வழக்குகள் மீண்டும் தொடரப்பட்டன. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் ஊரடங்கு காலம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என தடை விதித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு மேல்முறையீடு செய்துவிட்டது. இதனை அடுத்து தான் திரு ரஜினிகாந்த் அவர்கள் ட்விட்டரில் இப்படியொரு அதிரடியான கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்” குறிப்பிட்டு இருந்தார்.
ரஜினியின் எச்சரிக்கை தமிழகத்தில் பலிக்குமா?
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020
ரஜினி அவர்களின் எச்சரிக்கையை நான் முழுமையாக வரவேற்கிறேன். உண்மையிலேயே மக்கள் இப்படி செயல்படுவார்களாயின் நிச்சயமாக எந்தவொரு அரசும் மக்களுக்கு எதிரான விசயங்களை செய்யவே மாட்டார்கள். காரணம், எந்தவொரு அரசியல் கட்சியின் முக்கியமான நோக்கமே ஆட்சிக்கு வருவது தான். அப்படி இருக்கும் போது மதுக்கடையை மறுபடியும் திறந்தால் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்தால் நிச்சயமாக தற்போதைய ஆட்சியாளர்கள் அப்படி செய்திருக்க மாட்டார்கள்.
இந்தப்பதிவை நான் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டும் எழுதிடவில்லை, அந்த இடத்தில் அமரும் அனைவருக்கும் தான் எழுதுகிறேன்.
பிறகு எப்படி தைரியமாக செய்தார்கள்? வேறொன்றும் இல்லை, மக்கள் அந்த அளவிற்கு பொறுப்பற்றவர்களாகவும் நியாபக மறதி உடையவர்களாகவும் இருக்கிறார்கள். அதுதான் விசயம். மேலும் தேர்தல் காலத்தில் கொடுக்கப்படும் பணம் படித்தவர்கள் அதிகம் இருக்கின்ற இந்த காலத்திலும் பெரிய அளவில் வேலை செய்கிறது. பிறகு எப்படி ஆட்சியாளர்கள் மக்களுக்கு பயப்படுவார்கள், மக்களின் நலனுக்கு எதிரான விசயங்களை செய்திட அஞ்சுவார்கள். ஆகவே தான் ரஜினி அவர்களின் எச்சரிக்கை தமிழகத்தில் பலிக்குமா என்ற ஐயப்பாடு எனக்கு ஏற்படுகிறது.
வெள்ளை சட்டையில் கறை படலாமா?
உலகில் எந்தவொரு பகுதியிலும் பின்பற்றப்படாத பல சமூகநல திட்டங்கள் தமிழகத்தில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “அம்மா உணவகம்” இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் செய்கின்ற அளப்பரிய பங்களிப்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இத்தகைய மகத்தான திட்டத்தை செயப்படுத்துகிற தற்போதைய ஆட்சியாளர்கள் கெத்தாக வளம் வரலாம். ஆனால் கூடவே டாஸ்மாக் நிறுவனத்தையும் அரசே நடத்துவது தான் வேதனை அளிக்கிறது. இது தற்போதைய ஆட்சியாளர்கள் செய்த செய்துவருகிற நல்ல திட்டங்களை மூடி மறைக்கிறது.
ஆமாம், பல்வேறு சமூகநல திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி தேவைதான். ஆனால் அதற்காக தனது குடிமக்களை போதைக்கு அடிமையாக்கிவிட்டு அதன்மூலமாக பணம் பெற்று சமூகநல திட்டங்களை செய்வதற்கு அதை செய்யாமலே இருந்துவிடலாம். எத்தனை இளைஞர்கள், எத்தனை மாணவர்கள், எத்தனை சிறுவர்கள் இன்று போதைப்பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என ஆய்வு செய்தால் அவ்வளவு தான்.
வெள்ளை சட்டையில் கறை படியலாமா? சிந்தியுங்கள் ஆட்சியாளர்களே.
ரஜினி அவர்கள் சொன்னதைப்போலவே டாஸ்மாக் கடைகளை திறந்தால் ஆட்சிக்கே ஆபத்தை தருவார்களா தமிழக மக்கள் – உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!