ரஜினி அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அவரது முடிவை நாம் ஏற்றாலும் கூட அவர் அரசியலுக்கு எப்படியேனும் வந்தே தீருவார் என நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களை அவர் ஏமாற்றிவிட்டார் என்பதை மறுக்கவும் முடியாது. அதற்கான அவமானங்களை ரசிகர்கள் தோளில் சுமக்கத் தேவையில்லை.
சுமார் 25 ஆண்டுகள் இழுபறிகளுக்கு பிறகு ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என தீர்க்கமாக கூறியிருக்கிறார். அதற்காக அவர் கூறிய காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் விமர்சிக்கும் அத்தனை தகுதிகளும் உடையதாகவும் இருந்தது. ஆனால் ரஜினி அவர்களின் முடிவுக்கு பிறகு நமக்கு பொதுவெளியில் கிடைத்த இரண்டு செய்திகள் நம் கவனத்தை ஈர்த்தன. முதல் செய்தி, விழுப்புரத்திற்கு அடுத்து இருக்கும் பாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவருக்கு வயது வெறும் 34. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனாதைகளாக நிற்கின்றனர். ‘
இரண்டாவது செய்தி, ரஜினியின் ரசிகர்கள் பலர் ரஜினி அவர்களின் முடிவுக்கு பிறகு வீட்டிற்கு போவதற்கு அவமானமாக இருக்கிறது. அருகில் இருப்போர் என்னவெல்லாம் சொல்வார்கள் என வெட்கமாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்கள்.
தமிழர்களின் கலாச்சாரம் தெரிந்தோ தெரியாமலோ நடிகர் நடிகையாரோடு பின்னிப்பிணைந்துள்ளது. பெரும்பாலானவர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரை தங்களது குடும்ப உறுப்பினருக்கும் மேலான இடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த நடிகரை பிறர் விமர்சித்து பேசுவதைக்கூட பலரால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நடிகரை கிண்டல் செய்தாலோ விமர்சனம் செய்தாலோ ஏற்றுக்கொள்ள முடியாத நபராகவே பலர் இருக்கிறார்கள். ரஜினிக்கு மட்டுமல்ல விஜய், அஜித், சூர்யா, நயன்தாரா என அந்த வரிசை நீள்கிறது. இதில் எங்கே பிரச்சனை எழுகிறது என்றால், தாங்கள் விரும்பிடும் நடிகர் செய்திடும் செயலுக்கு பதில் அளிக்கும் கடமை தனக்கு இருப்பதாக ரசிகர்கள் தங்களை நினைத்துக்கொள்வதில் தான் பிரச்சனை எழுகிறது.
உதாரணத்திற்கு, ரஜினி பாஜகவில் இணைகிறேன் என அறிவிக்கிறார் எனில் அலுவலகம் செல்லும் ரஜினியின் தீவிர ரசிகர் ரஜினி பாஜகவில் இணைந்ததை நியாயப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அவரிடம் கேள்விகள் கேட்கப்படும் அவர் சமாளித்து ஆக வேண்டும். இந்த நிர்பந்தம் இப்போது ரசிகர்களிடையே எழுகிறது. இதுதான் பல தற்கொலைக்கும் அவமானத்திற்கும் காரணமாக அமைகிறது.
ரஜினி அவர்களின் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என்ற அறிவிப்புக்கு முழு பொறுப்பாளி அவரே. அதனால் ஏற்படும் விமர்சனம் மற்றும் அவமானத்தை தூக்கி சுமக்க வேண்டியவரும் அவரே. அதனை முதலில் அனைவரும் உணருங்கள். நீங்கள் வெறும் ரசிகர்கள் தான், அவரது முடிவெடுக்கும் விசயத்தில் எள்ளளவும் நீங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாத போது அந்த செயலுக்கு நீங்கள் ஏன் பொறுப்பாளியாக ஆக வேண்டும். அவரது உடல்நலனை பிரதானமாகக் கொண்டு இத்தனை ஆண்டு காலம் இழுத்தபடித்த ஒரு விசயத்தில், அவரை நம்பியோரை நிலைகுலையச்செய்திடும் என்று தெரிந்தும் ஒரு முடிவை எடுக்கிறார் எனில் அவரே அதற்காக வாதாட வேண்டியவர்.
இந்த விசயத்தில் ரசிகர்கள் வருத்தப்படவோ வெட்கப்படவோ உயிர் துறக்கவோ தேவை இல்லை. உங்கள் ஹீரோ உங்களை ஏமாற்றியது போல உங்களை ஹீரோவென நினைக்கும் மனைவி பிள்ளைகளை ஏமாற்றிவிடாதீர்கள்.
விழித்துக்கொள்ளுங்கள்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!