காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகன வரிசையின் மீது ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பினை சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற நபர் தற்கொலை தாக்குதல் நடத்தினார். கிட்டத்தட்ட 350 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளோடு இருந்த வாகனத்தை ராணுவ வீரர்களின் வாகனத்தோடு மோதியதில் அந்த இடத்திலேயே 40 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உடல் சிதறி நாட்டிற்க்காக தங்களது இன்னுயிரை கொடுத்தார்கள்.மருத்துவமனையிலும் பலர் சிகிச்சை பெற்று வந்தார்கள். இதுவரை 44 வீரர்கள் வரை இறந்துள்ளதாக தெரியவருகிறது. நாடு முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்நிகழ்விற்க்கு சமூக வலைத்தளங்களில் “#pulwamaterroristattack” என்ற ஹேஷ்டாக் மூலமாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
>> புல்வாமா தாக்குதல் நடைபெற்றது எப்படி?
>> புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி “பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தானா” ?
>> இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாற காரணம் என்ன?
>> ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் அரசியலாக்கப்படுகிறதா?
உங்களுடைய கருத்தை தவறாமல் பதிவிடுங்கள், அது எங்களை ஊக்கப்படுத்தும்
புல்வாமா தாக்குதல் எப்படி நடந்தது?
காஷ்மீர் மாநிலத்தில் CRPF ராணுவ வீரர்கள் நகர்வு நடைபெற்றது. பனிப்பொழிவு காரணமாக பயணம் தடை பட்டிருந்தபடியால் கிட்டத்தட்ட 2500 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஒரே நேரத்தில் சுமார் 78 வாகனங்களில் பயணப்பட்டனர். அப்போது புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகன வரிசையின் மீது ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பினை சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற நபர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ காரை மோத செய்து பெரும் வெடிப்பை ஏற்படுத்தினார். இந்த கொடுமையான தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மரணடைந்தனர்.
NEVER FORGIVE … NEVER FORGET 🙏🌺
ॐ शांति #PulwamaTerrorAttacks#TimeForRevenge pic.twitter.com/6sVI0NCt5p— Pankaj Gulati (@panky101) February 17, 2019
2003 ஆம் ஆண்டுக்கு முன்புவரை ராணுவ வீரர்களின் கான்வாய் கடக்கும் போது பொதுமக்களின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொதுமக்களுக்கு இது தொந்தரவாக இருக்கின்றது என்பதற்காக அதற்க்கான தடை விளக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் ராணுவ வீரர்கள் செல்லும் பாதையில் வாகனத்தில் 350 கிலோ வெடிமருந்தினை கொண்டு செல்லும் அளவிற்கு பாதுகாப்பில் மெத்தனமாக இருந்தது ஆச்சர்யம் அளிக்கிறது.
இந்த கொடும் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அரங்கேறிய நிகழ்வுகள் அனைத்துமே பார்ப்பதற்கு வழக்கமான நிகழ்வுகளாகவே இருந்தன.
>> இந்த தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டப்பட்டது.
>> பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என கோவம் வெளிப்பட்டது
>> ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்திற்கு “நாட்டு மக்கள்” பேரஞ்சலி செலுத்தினர்
>> அரசு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி மற்றும் உதவியை அறிவித்தது
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி “பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தானா” ?
புல்வாமா தாக்குதல் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்க்கு தக்க பதிலடி கொடுப்பது தான் சரியான நடைமுறை. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் “போர் தான்” முடிவா என்பதில் தான் கேள்வி எழுகிறது.
சாதாரண மக்கள் தங்கள் நாட்டின் ராணுவ வீரர்கள் இறக்கும் போது கொந்தளிப்பது இயற்கையானது. ஆனால் போர் நடந்தால் என்னவாகும் என தெரிந்துகொண்டும், காஷ்மீரில் எதற்க்காக பிரச்சனை நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டும் “பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும்” என கூறுவது வருத்தமளிக்கிறது.
பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என கொந்தளிக்கும் நண்பர்களே “புல்வாமா தாக்குதல்: ’ஓர் உயிரை இழக்கும் வலி உங்களுக்கு தெரியாது’ – ராணுவ மேஜரின் உருக்கமான பதிவு” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையை படியுங்கள். உங்களுக்கான பதிலை அது கொடுக்கும்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அதற்கு பழிவாங்க வேண்டும் என்றும், போர்தான் ஒரே தீர்வு என்றும் சமூக ஊடகங்களில் பலர் பதிவிட நாம் பார்த்து வருகிறோம்.
ஆனால், போர் என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்றும், ஒரு ராணுவ வீரரின் வலியையும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் மேஜர் டி.பி.சிங்.
மேஜர் டி.பி.சிங்-கின் ஃபேஸ்புக் பதிவிலிருந்து…
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள் ராணுவ வீரர்களுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் துணை நிற்கிறோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பழிவாங்கியே தீர வேண்டும்.
சில நாட்களுக்கு பிறகு அனைவரும் தங்கள் வேலைகளை பார்க்க சென்றுவிடுவர். இது எல்லாமே ஒரு வர்த்தகம் என்றும் கூட சொல்லலாம்.
அரசியல் கட்சியோ, ஊடகங்களோ, அல்லது பொது மக்களோ யாராக இருந்தாலும் ஓர் உயிரை இழக்கும் வலியையோ அல்லது கை கால்களை இழக்கும் வலியையோ உணரப்போவதில்லை.
ஒரு சிப்பாய் சிரித்துக் கொண்டே தனது வாழ்க்கையை இந்த நாட்டிற்காகவும், நமது தேசியக் கொடிக்காகவும் அர்பணிக்க பயிற்றுவிக்கப்படுகிறான்.
ஆனால், இது எத்தனை காலத்துக்கு என்பதுதான் கேள்வி?
ஒட்டுமொத்த அமைப்பையும் மேம்படுத்த நாம் என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்பதே கேள்வி.
இன்று காலை ஒரு விவாத நிகழ்ச்சிக்காக நான் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு சென்றிருந்தேன்.
அந்த தொலைக்காட்சி தொகுப்பாளர், “நீங்கள் புல்வாமாவின் புகைப்படங்களை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் பழிவாங்கலே இதற்கான தீர்வு என்று நான் கூறுவதை நீங்க ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்” என்று சொன்னார்.
ஆனால், நான் சமீபத்தில் நடந்த போர் ஒன்றில் காயமடைந்த ராணுவ மேஜர் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
ஒரு ராணுவ வீரர் தனது வாழ்க்கையை தியாகம் செய்ய தயாராகவே இருப்பார்.
ஆனால், அதே சமயம், காஷ்மீர் இளைஞர்கள், தீவிரவாதிகளாக மாறாமால் நசிர் வானியை போன்று மாறவும், பதக்கங்களை பெறவும் ஆசைப்பட வேண்டும்.
இந்த நிலையை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். எனது பைத்தியக்கார பக்கத்து வீட்டுக்காரர் எனது வீட்டில் நுழைந்து எமது இளைஞர்களை மூளைச் சலவை செய்யும்போது என்னால் அதை தடுக்க முடியவில்லை என்றால் என்னிடம் ஏதோ தவறுள்ளது.
40 குடும்பங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, நாம் தீர்வு காணவில்லை என்றால் இன்னும் பல குடும்பங்கள் அழிந்துபோகும்.
பழிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு முன்னால், ராணுவத்தினரின் குடும்பங்களிடம் கேளுங்கள். அவர்களின் பெற்றோரிடமும், மனைவியிடம், பிள்ளைகளிடம் கேளுங்கள் அவர்களின் ஹீரோ அவர்களுடன் இல்லை என்றால்? அதற்கு அவர்கள் தயாரா என்று?
அடுத்த தலைமுறைக்கு நேர்மறையான சிந்தனைகளை தரவில்லை என்றால், தாக்குதல், பதில் தாக்குதல் பழிவாங்குதல் என்று மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
உயிரையும், கை கால்களையும் இழக்கின்ற வலியையும் அதன்பின் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காகவும், நியாயமான சலுகைக்காவும் நீதிமன்றத்தில் கதவுகளை தட்டும் வலியையும் யாராலும் உணர முடியாது.
ராணுவ வீரர் உயிரிழக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அவரின் விதவை மனைவி அவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய தொகைக்காகவும், நியாயமான சலுகைக்காகவும் அலைந்து திரிய வேண்டும்.
சில இடங்களில் ராணுவ வீரரின் உடல் கிடைக்கவில்லை என்றால் அவரின் மனைவி அதை நிரூபிக்க வேண்டும். ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றால் அவரின் உடலை கொண்டுவர வேண்டும்.
நமது சிப்பாய்கள் உயிரிழக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால், போரில் காயம்பட்டவர்கள் நியாயமான ஓய்வூதியத்தை பெற வேண்டும் என்றாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும்.
நீதிமன்றத்தில் நான் போரில் காயமடைந்தவன் என்பதை நிரூபித்து எனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்தை பெற ஏழு வருடங்கள் ஆனது.
இம்மாதிரியான 1000 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. மாற்றுத்திறனாளிகளான சிப்பாய்கள் மீதுள்ள தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெறுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தும், வழக்குகள் இன்றளவும் திரும்பப்பெறப்படவில்லை.
சிப்பாய்கள் இறக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை அரசுக்கு சுமையாக தேோன்றுகிறது.
ராணுவத்தினரும், சிஆர்பிஎஃபும் என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்று அவர்களுக்கு தெரியும்.
தயவுசெய்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கூற வேண்டாம். சூழ்நிலைக்கு தகுந்த நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள்.
பல நாடுகளில் போர் நடப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு நாட்டில் போர் நடந்தால் வெற்றி தோல்வி என்பதை கடந்து பங்கேற்கும் இரண்டு நாடுகளுமே 100 ஆண்டுகளுக்கு பொருளாதாரத்தில் கட்டுமானத்தில் பின்னோக்கி சென்றுவிடும்.
போர் என்பது உண்மையான தீர்வு அல்ல, போர் நடப்பதற்கு காரணம் என்ன? தீவிரவாதத்திற்கு இளைஞர்களை இட்டுச்செல்வது எது? என்பதனை அறிந்து அதனை வேரறுக்காதவரை இது தொடர்ந்துகொண்டு தான் இருக்கும் என்பது அறிவார்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.
இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாற காரணம் என்ன?
காஷ்மீர் பிரச்சனை மிக நுட்பமான, பல ஆண்டுகாலமாக தொடர்ந்துகொண்டே இருக்கின்ற பிரச்சனை. பாஜக ஆண்டாளும் சரி காங்கிரஸ் ஆண்டாளும் சரி ராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் என்பது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், ஜம்மு நம் நாடு அதற்குள்ளாகவே எப்படி தாக்குதல் நடக்கிறது என. உள்நாட்டு மக்களின் உதவியின்றி அந்நியரால் ஒன்றும் செய்திட இயலாது. ஆனால் இப்படிப்பட்ட தாக்குதல் தொடர்ந்து நடக்க இன்னும் அந்த பகுதி மக்களுடைய மனதினை நம்மால் வெல்ல முடிவதில் உள்ள சிக்கல்கள் தான் அடிப்படை காரணமாக இருக்கலாம். இப்படிபட்ட நிகழ்வுகளை தீவிரவாதிகள் எளிமையாக அரங்கேற்றுவதற்கு அதுவே உதவியாக இருக்கிறது.
படித்த இளைஞர்கள் கூட தீவிரவாதத்தை தங்களது வழியாக தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு ஆக்கப்பூர்வமான நன்மைகளை அவர்களுக்கு செய்து அவர்களை நம்மோடு இணைத்துக்கொள்வதற்கு பதிலாக வேறெதையோ செய்துகொண்டு இருக்கிறோம். 70 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தின் மிக முக்கிய பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவராமல் இன்றும் ராணுவ வீரர்களை பலிகொடுப்பதற்கு நாம் வேறு யாரையோ குறை சொல்லிப்பயனில்லை.
தீவிரவாதியாக இருந்து மனம் திருந்தி நாட்டிற்காக போராட ராணுவத்தில் சேர்ந்து உயிர்த்தியாகம் செய்திட்ட அசோக சக்ரா வென்ற நஷீர் அகமது வானி அவர்களை போல அனைத்து இளைஞர்களும் மனம் மாறினால் ஒழிய உள்நாட்டு போர் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும். அதனை நோக்கி நாம் பயணிப்போம்.
ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் அரசியலாக்கப்படுகிறதா?
ஒரு அரசாங்கம் ராணுவத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது அவசியமான ஒன்று தான். ஆனால் ராணுவம் அரசியலுக்கு உட்பட்டதாக இருக்க கூடாது. புல்வாமா தாக்குதல் நடைபெற்றவுடன் சமூக வலைத்தளங்களில் இரண்டுவிதமான கருத்துக்கள் பெரும்பான்மையாக பேசப்பட்டன. அவை இரண்டுமே அரசியலுக்காக ராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் பயன்படுத்தப்படுகிறதோ என்கிற அச்சத்தையும் வருத்தத்தையும் உண்டாக்குகின்றன.
>> மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் [தமிழிசை அவர்கள் தெரிவித்த கருத்து]
>> பிரதமராவதற்கு தான் இப்படி பட்ட சதி நடந்திருக்கலாம் [சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்து]
இறந்துபோவதற்கு 100% வாய்ப்பு இருக்கிறது என்பதனை அறிந்தும், துணிந்து பணிக்கு செல்கிறவர்கள் ராணுவ வீரர்கள் மட்டுமே. அவர்களுக்கு அந்த துணிவு வருவதற்கு காரணம் “தேசப்பற்று”. அந்த தேசப்பற்றினை அரசியல்கட்சிகள் அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ளவும் கூடாது, பொதுவெளிகளில் பொதுமக்களாகிய நாமும் அரசியலோடு பிணைத்தும் பேச கூடாது. தங்களது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது, ஆனால் யூகங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத கருத்துக்களை தெரிவிக்கும் போது “உயிரை இழந்தவர்கள் ஏமாளிகளாக ஆக்கப்படுகிறார்கள்” அது நல்லதல்ல.
இன்னும் எத்தனை முறை இறக்க போகிறோம்?
இறப்பு என்பது தவிர்க்கப்பட வேண்டியது, அது தீவிரவாதியாக இருந்தாலும் சரி, ராணுவ வீரராக இருந்தாலும் சரி. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது இன்னமும் காஷ்மீர் பிரச்சனையை சரி செய்ய இயலவில்லை. மாறாக காஷ்மீர் பிரச்சனைக்காக மட்டும் ராணுவ வீரர்கள் பலியாக்கப்படுகிறார்கள். பிரச்சனையை தீர்க்க மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் வாய்ச்சவடால் வீரர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் பிரச்சனையை தீர்ப்பதில் இருக்கிறதா அல்லது ஆட்சியை நீட்டிப்பதில் இருக்கிறதா என்பதே விளங்கவில்லை.
In wake of #Pulwama tension, people across India offer to open their homes to Kashmiris under threat https://t.co/Pxt9OrLPB6#PulwamaTerrorAttacks #KashmiriStudents pic.twitter.com/EaOrriKImb
— scroll.in (@scroll_in) February 17, 2019
காஷ்மீர் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சனையில்லை என கூறி எத்தனை ஆண்டுகளை கடந்து வந்துவிட்டோம், உயிரிழப்புகள் தொடர்கின்றன ஆனால் பிரச்சனை மட்டும் அப்படியே இருக்கிறது.
அதனை முடிவுக்கு கொண்டு வர அரசியல் கட்சிகள் முயல வேண்டும். அதற்காக அரசியல் கட்சிகளை மக்கள் வலியுறுத்த வேண்டும்.