Site icon பாமரன் கருத்து

உயர்த்தப்படும் பெண்களுக்கான திருமண வயது 21, நல்லதா? காரணம் என்ன? சட்டசிக்கல் என்ன?



பெண்களுக்கான திருமண வயதை 18 இல் இருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. ஆதரவுகளையும் விமர்சங்களையும் ஒருங்கே கொண்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏன் இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது? என்னென்ன சிக்கல்கள் இதிலே உள்ளன? வாருங்கள் அலசலாம்.

ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் இருந்துவரும் சூழலில் பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. விரைவில் இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் திருமண வயதை உயர்த்துவதன் மூலமாக அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இளம்வயதிலேயே தாய்மை அடைதல் உள்ளிட்ட சிக்கல்களை தடுக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த வயது உயர்வு கொண்டுவரப்படுகிறது. ஆனால், ஏற்கனவே பல்வேறு மத சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் இந்தியாவில் இந்த சட்டம் எப்படி இயற்றப்பட இருக்கிறது என்பதையும் இது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் பேசுவது அவசியம். 

பெண்களுக்கான திருமண வயதை உயர்த்த அரசு ஏன் விரும்புகிறது?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறினார், “பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் போதெல்லாம், அவர்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர், நாட்டை பலப்படுத்தினர்” என்றும், “அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதே பெண்களுக்கு சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்குவதே” என்றும் பேசினார். 

 

மேலும் பேசிய அவர் தனது அரசாங்கம் “மகள்கள் மற்றும் சகோதரிகளின் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை கொண்டுள்ளது” என்றும் “சத்துணவு குறைபாட்டிலிருந்து மகள்களை காப்பாற்ற, அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்” என்றும் பேசினார். பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது குறித்த கேள்விக்கு முடிவு எடுக்க தனது அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அது தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு “சரியான முடிவு” எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில், நிதி ஆயோக்கின் டாக்டர் வினோத் பால் என்பவரை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் சுருக்கம், “பெண்களின் திருமண வயது எப்படிப்பட்ட தாக்கத்தை தாய்மையின் உடல்நலம், மருத்துவ நலம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்வதே. கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் நிலை, பிறப்பு மற்றும் அதற்குப் பிறகு மற்றும் சிசு இறப்பு விகிதம் (IMR), தாய் இறப்பு விகிதம் (MMR), மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) போன்ற முக்கிய காரணிகளும் இதிலே அடங்கும். மேலும் உயர்கல்வி பெரும் பெண்களின் விதித்ததை உயர்த்துவதற்கும் ஆலோசனை இந்தக்குழுவிடம் கேட்கப்பட்டது.

பெண்களின் திருமண வயதை உயர்த்த பரிந்துரை செய்த இக்குழு என்னென்ன ஆய்வுகளை நடத்தியது?

சுகாதாரம், சட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களின் அதிகாரிகளையும் உள்ளடக்கிய குழுவானது பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு திருமணமான ஒரு பெண் தனது முதல் கர்ப்பத்தின் போது, குறைந்தபட்சம் 21 வயது உடையவராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. 

 

பெண்களுக்கான திருமண வயதை உயர்த்தும் இம்முடிவு மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கும் ஒரு முடிவாக சிலர் பார்க்கிறார்கள். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி இந்தியாவில் ஏற்கனவே கருத்தரித்தல் விகிதம் குறைந்து வருவதாகவும் ஆகவே அதற்காக இதனை கொண்டுவரவில்லை என்றும் இக்குழு விளக்கம் தந்துள்ளது. 

பெண்களின் உடல்நலன் மற்றும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்டவைகளை முன்னிறுத்தியே இம்முடிவு கொண்டுவரப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச திருமண வயது எப்படி நடைமுறைப்படுத்தப்படும்?

இந்தியா பல்வேறு மதங்களை கொண்ட நாடு. இங்கே இந்து திருமண சட்டம், கிறிஸ்டியன் திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம் போன்றவை பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிப்பதில் பங்காற்றுகின்றன. அதேபோல குறைந்த வயதில் நடத்தப்படும் திருமணங்களை தடுக்க குழந்தை திருமண தடைச் சட்டம் என்ற சட்டமும் உள்ளது. ஆகவே இவை அனைத்திலும் மாற்றத்தை கொண்டுவர வேண்டியது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். 

இந்து திருமணச் சட்டம் திருமணத்தின் போது ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு குறைந்தது 18 வயதும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் அதே வேளையில், முஸ்லீம் தனிப்பட்ட சட்டம் பருவமடைந்த மைனர் பெண்களை திருமணம் செய்ய அனுமதிக்கிறது.

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதில் உள்ள சட்ட சிக்கல் என்ன?

ஏற்கனவே நடைமுறையில் உள்ள மதங்களின் சிறப்பு சட்டங்களை திருத்துவது என்பது சட்ட சவால்களையும் சமூக சவால்களையும் ஏற்படுத்தும். இதுகுறித்து பேசும் நிபுணர்கள், மக்கள் குறைந்த வயதில் தங்கள் பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைப்பது ஏற்கனவே குறைந்து வருகிறது. இதனை ஒரு சட்டமாக கொண்டுவரும்போது பெரிய சமூக எதிர்ப்புகள் உருவாகாது என கூறுகிறார்கள். சட்டசிக்கல் குறித்து கூறும்போது “பெண்களின் உடல்நலன்” என்ற பொது நோக்கத்தில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு சட்ட சிக்கல் ஏற்படாது என்றும் ஏற்கனவே உள்ள சட்டங்கள் அனைத்தையும் இந்த புதிய சட்டத்திற்கு உட்பட்டதாக கொண்டுவர முடியும் என்றும் கூறுகிறார்கள். 

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவை வரவேற்றுள்ள முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம், இந்த சட்டம் நல்ல முடிவு தான். ஆனால் இதனை உடனடியாக நடைமுறைபடுத்தாமல் 2023 இல் இருந்து நடைமுறைப்படுத்தலாம். அதற்கு இடைப்பட்ட காலத்தில் பொதுமக்களுக்கு இந்த சட்டத்தின் நோக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனையாக பார்க்கப்படுகிறது. 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !
Exit mobile version