தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையமான TNPSC மூலமாகத்தான் தற்போது தமிழக அரசுப்பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் . தற்போது எழுத்து தேர்வின் மூலமாக ஆட்களை தேர்ந்தெடுக்கும் முறை உள்ளபடியால் அதனை திருத்தி முடிவுகளை வெளியிட பல மாதங்கள் ஆகின்றன .
இதில் எங்கு பிரச்சனை வருகிறதென்றால் , இந்த தேர்வுகளை நடத்திட தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த புள்ளிகளை கோரியிருப்பதுதில்தான் .
அரசு தேர்வினை நடத்தும்போதே தேர்வுத்தாள் முன்னரே வெளிவந்துவிட்டது , காசு கொடுத்து வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறார்கள் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன . இந்த சூழ்நிலையில் தனியார் நிறுவனத்திடம் அனைத்தையும் ஒப்படைப்பது திருடன் கையில் சாவியை கொடுப்பதற்கு ஒப்பானது .
சம்பாதிப்பதே தனியார் நிறுவனத்தின் நோக்கம்
லாபமே முதன்மையானதாக இருக்கக்கூடிய தனியார் துறையிடம் அரசின் செயல்பாடுகளில் மிக முக்கிய பங்கு வகிக்கப்போகும் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை கொடுப்பது நிச்சயமாக ஆபத்தானது .
நம்பிக்கையே வாழ்க்கை
பல குற்றசாட்டுகள் வந்தாலும் தேர்வினை நடத்துவது அரசு என்பதனால் மாணவர்களுக்கு TNPSC மீதான நம்பிக்கை குறையவில்லை . ஒரு போட்டி நேர்மையாக நடக்கிறது என்ற நம்பிக்கை மிக முக்கியமானது . தனியார் நிறுவனத்திடம் தேர்வு நடத்தும் பொறுப்பை ஒப்படைப்பதால் இந்த நம்பிக்கையில் பெரும் விரிசல் ஏற்படப்போவது உறுதி . இது நல்லதல்ல .
கணிணி முறையில் தேர்வு நடத்துவதை அரசாங்கமே செய்திட வேண்டும் . இதற்கான கணிணி தொழில்நுட்ப வல்லுநர்களை பணிக்கு அமர்த்தி அரசே தனது கட்டுப்பாட்டில் தேர்வு நடத்தும் பொறுப்பை வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் .