எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது பழமொழி. அதுபோல தொடர்ச்சியாக முயற்சி செய்தால் உடல் ஊனத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டு வெற்றிபெறலாம் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரண நிகழ்வு நடந்திருக்கிறது.
குடிமைப்பணி தேர்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 60 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். அதில் இடம்பெற்றுள்ளவர்களில் இருவர் தான் தற்போது பிரபல்யமாக பேசப்படுகிறார்கள். பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் எனும் இருவர் தான் அவர்கள். இந்த இருவர் மட்டும் ஒட்டுமொத்தமான கவனத்தையும் ஈர்ப்பதற்கு ஒரே ஒரு காரணம் இருவரும் கண் பார்வை அற்றவர்கள் என்பதுதான். பார்வை குறைபாடு வெற்றிக்கு தடை அல்ல என்பதனை இவர்கள் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
இந்த இருவரும் வெற்றி பெற்றதற்கு காரணமாக 3 விசயங்களை கூற விழைகிறேன். இந்தப்பதிவை பிறருக்கும் பகிருங்கள், குறிப்பாக இளையோருக்கு.
1. முதலில் நம்மை நம்ப வேண்டும்
எந்தவொரு விசயத்திற்கும் அடிப்படையான முதலீடு நம்முடைய உடல் தான். ஒருவேளை அதில் ஏதேனும் இருப்பின் குறைக்கு ஏற்றவாறு கனவுகளையும் சுருக்கிக்கொள்வோம். ஆனால் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் இருவரும் தங்களது உடலின் குறையை ஒரு குறையாக கருதவில்லை. குறிப்பாக, படிப்பதற்கு கண் பார்வை தான் முக்கியத்துவமான ஒன்று என்றபோதிலும் கூட அது இல்லையென்றபோதிலும் நம்பிக்கையை அவர்கள் இழக்கவில்லை. முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும்.
2. பெற்றோர் துணை வேண்டும்
காற்றின் துணை இருந்தால் துடிப்பில்லாத படகின் மூலமாகவும் கரை சென்றடைந்துவிட முடியும். அதுபோலவே தான் பிள்ளைகள் எப்படிப்பட்ட குறையுடன் பிறந்தாலும் கூட பெற்றோர் அரவணைப்பு கிடைத்துவிட்டால் ஏதாவது ஒரு உயரத்தை அவர்கள் அடைந்தே தீருவார்கள். பொதுவாக கண் பார்வை உள்ளிட்ட குறைபாடு உடையவர்களுக்கு நியாபக சக்தி உள்ளிட்டவை அதிகமாக இருக்கும் என்பார்கள். அந்தத்திறமையை கண்டறிந்து பிள்ளைகளுக்கு உறுதுணையாக பெற்றோர் இருந்துவிட்டால் பிள்ளைகள் சாதித்துவிடுவார்கள். பூரண சுந்தரி தனது வெற்றிக்கு காரணம் என முதலில் குறிப்பிட்டது அவருடைய பெற்றோரைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
3. விடா முயற்சி வேண்டும்
மேற்கூறிய இரண்டும் உங்களுக்கு வாய்த்துவிட்டாலும் கூட விடா முயற்சி என்றவொன்று நிச்சயமாக இருத்தல் அவசியம். உங்களுக்கு உடல் நல்ல நிலையில் இருந்தாலும் கூட விடா முயற்சி இல்லாவிட்டால் சாதிப்பது கடினம். இன்றைய இளைஞர்கள் இந்த விசயத்தில் தான் தோற்றுப்போகிறார்கள். திடீரென ஒரு விசயத்திற்குள் நுழைவார்கள். விரைவாக வெற்றி கிடைக்கவில்லையா அவ்வளவுதான் அதை விட்டுவிட்டு வேறு ஒன்றில் கவனம் செலுத்த துவங்கி விடுவார்கள் அல்லது முடங்கிப்போய்விடுவார்கள்.
வெற்றி கிடைக்கும் வரை நான் ஓயப்போவது இல்லை என விடா முயற்சியுடன் போராடினால் வெற்றி அவர்களின் மடியில் தவழும் என்பதே எதார்த்தமான உண்மை.
இந்த மூன்று விசயங்களையும் கொண்டிருந்தபடியால் தான் பூரண சுந்தரி மற்றும் பால நாகேந்திரன் என்ற இருவரும் கண்பார்வை குறைபாட்டை கடந்து குடிமைப்பணிக்கு தேர்வாகி இருக்கிறார்கள்.
உங்களாலும் முடியும்!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!