பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு தொலைக்காட்சியும், கைப்பற்றப்பட்ட வீடியோ இத்தனை , பாதிக்கப்பட்ட பெண்கள் இத்தனை பேர் என கூறிக்கொண்டு இருக்கிறார்கள். பொள்ளாச்சி சம்பவம் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்த செயல் அல்ல. திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொடுமையான நிகழ்வுகள். பெண்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பெறுதல், பெரிய பெரிய ஆட்களுக்கு அவர்களை அனுப்பி பணம் திரட்டுதல் என இந்த கும்பலின் வேலைகள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. பொள்ளாச்சி விவகாரத்தில் நாம் கேள்விப்படுபவை படத்தில் தான் இப்படியெல்லாம் நடக்கும் என எண்ணிக்கொண்டு இருந்த செயல்கள்.
பொதுமக்களிடத்தில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த விசயத்தில் , இனியாவது நாம் செய்ய வேண்டிய செயல்களை பற்றி பார்ப்போம்.
பொள்ளாச்சி சம்பவம் வெளிவந்தது எப்படி?
Facebook மூலமாக பழக்கமான பெண் தோழியை வகுப்பை கட் அடித்துவிட்டு வெளியே செல்ல அழைக்கிறார் சபரிராஜன். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அந்த பெண்ணை வரச்சொல்லி தகவல் கொடுக்கிறார் சபரிராஜன். பின்னர் அந்த இடத்திற்கு காரில் வருகின்ற சபரிராஜன், அந்த பெண்ணை காரில் ஏற சொல்கிறார். கூடவே சபரிராஜனின் நண்பர்கள் என சொல்லிக்கொண்டு இன்னோரு மூன்று ஆண்களும் காரில் ஏறுகிறார்கள். பின்னர் காரிலேயே பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. அவை மொபைல் போனில் படம் பிடிக்கவும் படுகிறது.
இந்தப்பெண் அதிகம் முரண்டு பிடித்ததன் காரணமாக சாலையிலேயே இறக்கிவிடப்படுகிறார். இதற்கு பின்னரும் அந்தப்பெண்ணை விடாத சபரிராஜன், எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார். இவர்களின் தொந்தரவை தாங்க முடியாமல் அந்தப்பெண் தன்னுடைய சகோதரனிடம் உண்மையை விளக்குகிறார். பின்னர் இந்த பிரச்சனை போலீஸ் நிலையம் வரை செல்ல, அவர்கள் அந்த பெண்ணை புகார் அளிக்க சொல்கிறார்கள். பின்னர் தான் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதில் திருநாவுக்கரசு என்ற முக்கிய குற்றவாளி தலைமறைவானார், தற்போது அவரும் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்.
எளிமையாக ஏமாறும் பெண்களே விழிப்படையுங்கள்
“நான் உன்னை என் பிரண்டுன்னு நெனச்சு நம்பி தானே வந்தேன் ஏன் இப்படியெல்லாம் பண்ணுற” என ஒரு வீடியோவில் ஒரு பெண் பேசுவதனை கேட்க முடிந்தது. குற்றங்கள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் பெண்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமான ஒன்று. ஆண்களை சரியாக இருக்க சொல்லுங்கள் என்பது பெண்ணியம் பேசுவதற்கு வேண்டுமானால் ஒத்துவருமே தவிர பெண்களை காப்பதற்கு பயன்படாது.
Facebook ,Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டே உங்களை பின்தொடர்ந்து உங்களை பற்றி அறிந்துகொண்டு நண்பர்களாகி ஏமாற்றிட ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. நம்மிடம் பேசுவது ஆணா பெண்ணா என்பதெல்லாம் தெரியாமலே உங்களை பற்றிய உண்மைகளை, தனிப்பட்ட விவரங்களை சொல்வதையெல்லாம் தவிர்க்க பழகுங்கள்.
சமூக வலைதளம் என்பது மிக மிக பாதுகாப்பாக , விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய இடம் என்பதை இனியாவது உணருங்கள். அவர்கள் அழைக்கிறார்கள் என்பதற்க்காக தனியாக செல்வதனை தவிர்க்க பழகுங்கள். சுய கட்டுப்பாட்டுடனும் விழிப்புணர்வுடனும் இருப்பதே சிறந்தது.
கொடும்பாவிகள் தண்டிக்கப்பட வேண்டும்
பொள்ளாச்சி சம்பவம் வெறுமனே பாலியல் இச்சைக்காக செய்யப்பட்ட சம்பவம் போன்று இல்லை. அதனுடைய நோக்கம் மிரட்டி பணம் சம்பாதிப்பது அல்லது வேறு நபர்களிடம் அனுப்பி பணம் சம்பாதிப்பது. இதற்காகவே பிளான் போட்டு பெண்களை நண்பர்களாக்கி கொடூர செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கு ஏகப்பட்ட வழிகள் இருக்கும் போது பெண்களை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பது கடுமையான தண்டனைக்கு உரிய குற்றம். இப்படி ஒரு கூட்டம் பெண்களை சீரழிப்பது “இறுதியாக இருக்கின்ற பண முதலைகளின் பாலியல் இச்சைகளை தீர்ப்பதற்காக” என்பது மறுக்கப்படாத உண்மை.
அப்படிப்பட்ட பண முதலைகள், அதிகார திமிர் பிடித்த ஆட்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை பெற்று கொடுக்கப்பட வேண்டும்.
பாலியல் கல்வி கொண்டுவரப்பட வேண்டும்
பெரும்பாலும் நடக்கின்ற பாலியல் குற்றங்களுக்கு ஆண்களே காரணமாக இருக்கிறார்கள். பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. குறிப்பிட்ட பருவத்தை எட்டியவுடன் வருகின்ற உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்திட வேண்டும் என்பது பற்றி ஆண்களுக்கு எவரும் சொல்லித்தருவதும் இல்லை. ஆனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறும் ஓரிரண்டு நாட்கள் மட்டும் பேசிவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுகிறோம். பிறகு எப்படி இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.
விசாரனையில் தொய்வு , கவனமின்மை தவிர்க்கப்பட வேண்டும்
நிர்பயா என்ற பெண் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட போது ஒட்டுமொத்த தேசமே பொங்கி எழுந்தது. மாபெரும் இயக்கமாக உருவெடுத்த நிர்பயா பிரச்சனை மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஆனால் பொள்ளாச்சியில் ஏகப்பட்ட பெண்கள் திட்டமிடப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இதுவரை குற்றவாளிகள் மீது மிகச்சாதாரணமான பிரிவுகளின் கீழ் தான் வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்கிறார்கள்.
பொதுமக்களிடத்தில் இந்த பிரச்சனை மிகப்பெரிய கவன ஈர்ப்பை பெறவில்லை. மீடியாக்களும் (சில) இதனை ஒரு செய்தியாக கடந்துபோயிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மிகப்பெரிய நகரங்களில் நாம் கேள்விப்பட்ட கொடுமையான விசயங்கள் இப்போது சிறு நகரங்களிலும் அரங்கேற துவங்கியிருப்பது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை.
காவல் துறை, செய்தி நிறுவனங்களின் புலனாய்வு பிரிவுகள் இதுபோன்ற பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளின் முகத்திரையை கிழித்து பொதுமக்களின் முன்னால் நிறுத்திட பாடுபட வேண்டும் என்பதே நமது விருப்பம்.
நீதிமன்றம் தலையிட வேண்டும்
சமூக அநீதியை ஏற்படுத்தி இருக்கின்ற இந்த பொள்ளாச்சி பிரச்சனையை நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்காக ஏற்க வேண்டும். தனது மேற்பார்வையில் இவ்வழக்கினை நேர்மையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும். விசாரனை மற்றும் வழக்கு இரண்டும் மிக மிக துரிதமாக முடிக்கப்பட வேண்டும். இதற்கென சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
மக்களும் பெண்களும் களத்தில் இறங்க வேண்டும்
பொள்ளாச்சி சம்பவம் நாளை நமது ஊரிலும் நமது வீட்டிலும் கூட அரங்கேறலாம். ஆகவே வீட்டிற்கு உள்ளேயே புழுங்கிக்கொண்டு இருக்காமல் உணர்ச்சியோடு வெளிக்கிளம்புங்கள். இந்த பிரச்சனையை நாங்கள் அனைவரும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்பதனை அரசுக்கு தெரியபடுத்துங்கள். இன்று களத்தில் இறங்காவிட்டால் புற்றுநோய் போல வளர்ந்து நமது சந்ததிகளையும் அழித்துவிடும் என்பதனை உணர்ந்து உடனே செயல்படுங்கள்.
PAMARAN KARUTHU