கொரோனா வைரஸ் ஒரே நாளில் 110 பேருக்கு இருப்பது கண்டுபிடிப்பு.. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 234. இது இன்னும் அதிகரிக்கலாம்
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்புவரை 100க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 234 [ஏப்ரல் 01] உயர்ந்து விட்டது. ஏப்ரல் 1 ஆம் தேதி மட்டும் 110 பேர் புதிதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் மீதமுள்ளவர்களுக்கும் சோதனை முடிந்தால் இந்த எண்ணிக்கை கணிசமாக உயரும். அப்படி கரோனா பாசிட்டிவ் வருகிறவர்களோடு நெருங்கிப்பழகிய பிறரையும் சோதனைக்கு உட்படுத்தினால் எண்ணிக்கை கடுமையாக உயருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன.
தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதில் மாற்றுக்கருத்து இல்லை. நம்மை விட பொருளாதாரம், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் பல மடங்கு உயர்ந்திருக்கும் அமெரிக்காவில் தற்போது பல நூற்றுக்கணக்கான மக்கள் இறக்க துவங்கி இருக்கிறார்கள். அந்த அரசால் கூட கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இயலவில்லை. காரணம், கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருப்பதற்கான அறிகுறி குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பிறகு தான் தெரியவருகிறது. ஆகவே காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகள் வருவதற்கு முன்பாகவே கூட அவரிடமிருந்து பிறருக்கு அந்த வைரஸ் பரவும் திறன் உடையதாக இருக்கிறது. நீங்கள் பழகுகிறவர்கள், உங்களுக்கு அருகில் இருப்பவர்கள் ஆரோக்யமானவர்களை போல தோன்றுகிறார்கள் என்பதற்காக அவர்களோடு நெருக்கமாக இருந்தால் அவர்களை அறியாமலேயே கூட கொரோனா வைரஸ் உங்களுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது.
தமிழகம் கல்வி அறிவில் சிறந்த மாநிலமாக இருக்கிறது. அனைவருக்கும் செய்திகள் சென்று சேருகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் அலட்சியத்தில் இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. வயதானவர்கள் தான் அப்படி இருக்கிறார்கள் என்றால் படித்த இளைஞர்களும் மாணவர்களும் கூட இன்னமும் அலட்சியத்தோடு இருக்கிறார்கள். குழு விளையாட்டில் ஈடுபடுகிறார்கள், ஒரே இடங்களில் கூடி பேசுகிறார்கள். இவர்களை போலீசார் கண்டித்தாலும் கூட இது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. நமது ஊரில் தான் இன்னமும் வரவில்லையே என்று அலட்சியமாக இருக்காதீர்கள். சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்து கொரோனா ஒருவருக்கு வந்தால் கூட மொத்த ஊருமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுவிடும். இதை புரிந்துகொள்ளுங்கள். பாமரன் கருத்து
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!