Site icon பாமரன் கருத்து

காந்தியை மகாத்மாவாக மாற்றிய “ரயில் சம்பவம்” | தென்ஆப்பிரிக்கா| ரயில்| பீடர்மரிட்ஸ்பர்க்

காந்தியை மகாத்மாவாக மாற்றிய "ரயில் சம்பவம்" | தென்ஆப்பிரிக்கா| ரயில்| பீடர்மரிட்ஸ்பர்க்

காந்தியை மகாத்மாவாக மாற்றிய "ரயில் சம்பவம்" | தென்ஆப்பிரிக்கா| ரயில்| பீடர்மரிட்ஸ்பர்க்

வெள்ளையர்கள் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் அன்றோடு முடிந்து போயிற்று. அவர்கள் மக்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்கிறார்கள், அடிமைகளாக நடத்துகிறார்கள் என்பதனை உணர்ந்து ஒரு மாபெரும் தலைவன் உருவாகிய தருணம்.
காந்தியை மகாத்மாவாக மாற்றிய "ரயில் சம்பவம்" | தென்ஆப்பிரிக்கா| ரயில்| பீடர்மரிட்ஸ்பர்க்

 

பெரும்பான்மையான படங்களில் நடிகர்கள் சில சபதங்களை எடுத்து அதனை நிறைவேற்றுவார்கள். அந்த சபதங்கள் எடுப்பதற்காகவே அவரை ஏமாற்றுவது, வெறுப்படைய செய்வது போன்ற காட்சிகள் ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும். சிலரது வாழ்க்கையிலும் கூட ஏமாற்றம், கோபம் வரும்போது சபதம் எடுத்து அந்த காரியத்தை நிறைவேற்றிட கடுமையாக உழைப்பார்கள். அதுவரைக்கும் சாதாரண மனிதராக வாழ்ந்தவர்கள் அன்று முதல் புதிய தெளிவுடன் பயணிக்கத்துவங்குவார்கள். அது பிறருக்கு பயன்படுகிற வழியாக இருக்கின்ற பட்சத்தில் அவர் தலைவராக மாறுகிறார். தவறாக இருக்கின்ற பட்சத்தில் அவர் சமூகத்திற்கு எதிரானவராக பார்க்கப்படுகிறார்.

சாதாரண வழக்கறிஞராக பணியாற்றிட தென் ஆப்பிரிக்கா சென்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களுக்கு நடைபெற்ற ஒரு சம்பவம் தான் அவருக்குள் இருந்த போராட்ட குணத்தை வெளிக்கொண்டு வந்தது. அவரை வரலாற்றின் பெரும் நாயகராக உருவாக்கிட வழி செய்தது.

 

பீடர்மரிட்ஸ்பர்க் ரயிலில் இறக்கிவிடப்பட்ட காந்தி

1891-ல் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பி வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார் காந்தி. போதுமான வழக்குகள் அவருக்குக் கிடைக்காததால் அன்றாடப்பாடு திண்டாட்டமாக இருந்தது. இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவில் நேடால் என்ற பகுதியில் இந்திய இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட வணிக நிறுவனத்தின் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காக ஓராண்டு ஒப்பந்தத்தில் 1893 ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார் காந்தி. அப்போது அவருக்கு 23 வயது.

1893 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி இரவு, இளம் வயது வழக்கறிஞரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பீடர்மரிட்ஸ்பர்க் என்ற ரயில் நிலையத்தில் ஏறுகிறார். முதல் வகுப்பில் பயணம் செய்திட அவரிடம் டிக்கெட் இருந்தபோதும் அங்கே பணியாற்றிய வெள்ளை இனத்தவர் “இந்தப்பெட்டியில் நீங்கள் பயணம் செய்யக்கூடாது” என்றார். “ஏன் நான் பயணம் செய்யக்கூடாது? என்னிடம் தான் டிக்கெட் இருக்கிறதே” என்றார் காந்தி. “உங்களிடம் டிக்கெட் இருந்தாலும் இந்தப்பெட்டியில் பயணம் செய்ய முடியாது, இதில் வெள்ளையர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். இறங்குங்கள்” என்றார் வெள்ளை இனத்தவர். “முடியாது” என மறுத்தார் காந்தி. பின்னர் தான் காந்தி அவர்கள் அந்த ரயில் பெட்டியில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.

அதுவரைக்கும் காந்தி பிரிட்டிஷார் பற்றி நல்ல அபிப்பிராயம் உடையவராகவே இருந்தார். அவர்கள் இனம் மதம் மொழி சாதி போன்றவற்றை பார்க்க மாட்டார்கள் என நம்பி வந்தார் அவர். ஆனால் அவருக்கு நடந்த இந்த சம்பவம் அத்தனையையும் உடைத்தெறிந்தது. அன்று இரவு முழுக்க கடும் குளிரில் பீடர்மரிட்ஸ்பர்க் ரயில் பிளாட்பாரத்தில் தங்கி இருந்தார் காந்தி.

 

சாதாரண காந்தியை மகாத்மாவாக மாற்றிய ரயில் சம்பவம்

தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்திய தொழிலாளர்களை ஆங்கிலேயே, டச்சுக் காலனி அரசுகள் அடிமைகளாக நடத்திவந்தனர். இதுபற்றி கேள்விப்பட்டிருந்தாலும் ரயிலில் இருந்து அவர் இறக்கிவிடப்பட்ட சம்பவம் நேரடியாக இந்த கொடுமையை புரிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்திய தொழிலாளர்களுக்காக வழக்குகளில் சில சமயம் ஆஜர் ஆகவும் செய்தார் காந்தி.

நீதிமன்றங்கள் சட்டத்தின் படியே செயல்படும் என்பதனால் நீதிமன்றத்தையும் தாண்டி இந்திய தொழிலாளர்களுக்காக போராட்டங்களை முன்னெடுக்கத்துவங்கினார். ஆனால் அந்த போராட்டங்கள் எப்போதும் அகிம்சை மற்றும் சத்தியாகிரக வழியில் இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் காந்தி. தனது வாழ்க்கையின் பெரும்பான்மையான இளமைப்பருவத்தை தென் ஆப்பிரிக்காவில் தான் கழித்தார் காந்தி. தென் ஆப்பிரிக்காவிலேயே அகிம்சை மற்றும் சத்தியாகிரக போராட்டங்களை சோதித்து பார்த்திருந்தார் காந்தி. மஹாத்மா காந்தி அவர்கள் இந்தியா திரும்பிய பிறகு இங்கு நடத்திய போராட்டங்கள் அனைத்தும் முழுவடிவம் பெற்றவை.

ஆகையால் தான் இத்தனை பெரிய தேசத்தையும் அறவழியில் அவரால் நகர்த்திச்செல்ல முடிந்தது. தென் ஆப்பிரிக்காவில் வழக்கறிஞராக மட்டுமே பணியாற்றி இருந்து இந்த ரயில் சம்பவம் நடைபெறாமல் இருந்திருந்தால் அடிமைத்தனத்தின் வலியை அவர் உணராமல் கூட போயிருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ரயில் சம்பவம் தான் அவரை மக்களுக்கான பாதையில் இழுத்துச்சென்றது என்றால் மிகையாகாது.

Read more :

 மார்ட்டின் லூதர் கிங்கும் பேருந்து புறக்கணிப்பு போராட்டமும்

Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Exit mobile version