நாக ராஜ சோழன் : என்ன மணியா தலையில துண்டைப்போட்டு மூடிக்கிட்டு வர்ற
மணியன் : அட ஆமாங்க நம்ம வீட்டு பய காலைலயே படத்துக்கு கெளம்பிட்டானுங்க. காசு கேட்டான் குடுக்கலங்க. எங்கயோ காசு கொடுக்காத அப்பாவை ஒருத்தன் கொளுத்திட்டானாமே அதான் நம்ம பயலும் வந்துட்டான்னா, அதாங்க ஒரு சேப்டி
நாக ராஜ சோழன் : அட சின்ன பய, படத்துக்கு போக ஆசைப்படுறான் கொடுக்க வேண்டியது தான மணியா?
மணியன் : 100, 200 ரூவாய்னா குடுத்துறலாம்ங்க, அது எதோ காலைல 1 மணிக்கு 2 மணிக்கு னு போடுறானுகலாம். டிக்கெட்டுக்கு 500 கேக்குறானுங்க
நாக ராஜ சோழன் : ஏன் மணியா, நெசமாவா சொல்லுற? இம்புட்டா கேக்குறானுக
மணியன் : நம்ம காலத்துல, வேலை செஞ்சு களைச்சு வரவங்கள குஷிப்படுத்த சாயங்காலமா படம் போடுவானுக. இப்போ விடியுரத்துக்கு முன்னாடியே படம் போடுறானுக. எல்லாம் இந்த நடிகர்கல சொல்லணும்.
நாக ராஜ சோழன் : ஏன் நடிக்கிறவன குத்தம் சொல்லுற,உன் மகன் போகாம இருந்தா அவன் எதுக்கு போட போறான்
மணியன் : அப்புடி காலைல மொத ஷோ பாக்குறதுல என்ன சந்தோஷமோ தெரியலையே. பாத்தே ஆகணும்னு அடம்புடிக்கிறான்
நாக ராஜ சோழன் : எனக்கும் இந்த டவுட்டு வந்துச்சு மணியா, அத நம்ம பய சிபி கிட்ட கேட்டேன். இவனுகளுக்கும் காலைல போறதுக்கு கஷ்டமாத்தான் இருக்காம். இருந்தாலும் மத்த பயலுக பாத்துட்டு பேசுறப்போ நாம மட்டும் பாக்காம இருந்தா கவுரவ கொறச்சல் மாதிரி இருக்குமாம். அப்பறம் எதிர் நடிகரின் ரசிகர்கள் வேற “நீங்களே இன்னும் படம் பாக்கலையானு வேற கேட்டு கிண்டலடிப்பாங்களாம்”. மொத ஷோ பாத்துட்டேன்னு சொன்னா ஜிவ்வுனு இருக்குமாம்.
மணியன் : ஜிவ்வுனு இருக்கும், அந்த 500 ரூவாய்க்கு அவன் அப்பா அம்மா கஷ்டப்படுறது தெரிஞ்சா ஜிவ்வுனு இருக்குமா? படம் பாக்குறதுக்கு மட்டும் செலவு பண்ணினா பரவாயில்லை, பாலபிஷேகம் செய்யுறான், கட் அவுட் வைக்கிறான், கல்யாணம் கூட பண்ணிக்கிறானாம் தியேட்டர்லயே. எல்லாம் பத்தாதுன்னு அங்க போயும் அடிச்சுக்கிறாங்க.
நாக ராஜ சோழன் : நடிக்கிறவங்க ஒத்துமையா, அமைதியா தான் இருக்குறாங்க மணியா. இந்த பயலுக தான் உன் ஆளு பெருசா என் ஆளு பெருசான்னு காட்டுறதுக்கு சொந்தக்காசை செலவு பண்ணிட்டு அலையுறான். பேசாம MLA பதவியை விட்டுட்டு நடிக்க போயிறலாமான்னு பாக்குறேன் மணியா…
மணியன் : அட போங்க, நீங்க அல்வா கொடுத்ததெல்லாம் அந்தக்காலம். ஏதோ 10% இடஒதுக்கீடுனு சொல்லுறான், 1000 ரூவா ரேஷன் கார்டுக்கு இருக்குங்குறான் இல்லைங்கிறான். இந்த பிரச்சனையெல்லாம் தட்டி கேப்பானுகனு பாத்தா இப்புடி தியேட்டர் வரிசைலையும் நடிகர்கள் பின்னாடியும் போனா நாட்ட யாரு காப்பாத்துறது. படம் பாக்க கூடாதுனா சொல்றோம், பாரு இந்த வயசுல பாக்காம எப்போ பாக்க போற, வேலையெல்லாம் முடுச்சுட்டு பொறுமையா ரெஸ்ட் கிடைக்கிற நேரத்துல சரியான டிக்கெட் விலை கொடுத்து பாருன்னு சொன்னா எங்க கேக்குறான்
நாக ராஜ சோழன் : ஏன் மணியா நாம சொன்னா கேப்பானுகளா
மணியன் : ஒருத்தன் ரெண்டு பேராச்சும் யோசிப்பான்.
கருத்து : நம்மை சுற்றி கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் பல நடந்துகொண்டு இருக்கின்றன. அதனை கவனிக்காமல் போஸ்டர், பாடல், ட்ரைலர், படம் என திரை வளையத்திற்குள் உங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நிதானமாக ஓய்வு நேரங்களில் படம் பார்க்க பழகுங்கள். வேலை செய்து களைத்த உங்களை உற்சாகப்படுத்த தான் படமே அன்றி, படம் பார்ப்பதே வேலையாக கொள்ளாதீர்கள்.