Site icon பாமரன் கருத்து

“தேர்தலில் நம்பிக்கையின்மை” – ஆபத்தான நிலையை நோக்கி அரசியல் ….

 


 

நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் அரசியலின் தாக்கம் இருக்கின்றது



இன்றைய சூழலில் பலர் தேர்தலில் வாக்களிக்க செல்வதை “ஏதோ செய்யவேண்டும்” என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள் . கொஞ்சம் சிரமப்பட்டு வாக்களிக்க செல்லவேண்டும் என நினைப்பவர்கள் “நான் வாக்களித்து என்னாக போகிறது , நிற்கிறவர் எவருமே உருப்படியில்லை ” என காரணம் கூறி வாக்களிப்பதை தவிர்த்துவிடுகின்றனர்.

 

இதனை மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா? முடியவே முடியாது. இதற்கான காரணம் என்ன?

 


 

ஈர்க்கக்கூடிய தலைவர்கள் இல்லை  

 

karunanidhi and anna



பெரியார், அண்ணா, காமராசர் , எம்ஜிஆர் , கருணாநிதி , ஜெயலலிதா போன்ற தலைமைகள் நல்லது செய்கிறார்கள் அல்லது கெட்டது செய்கிறார்கள் என்பதனையெல்லாம் தவிர்த்துவிட்டு அவர்களை ரசிக்க கூடிய , அவர்கள் சொல்லிற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய மிகப்பெரிய தொண்டர்கள் படை இருந்தன . அவர்கள் தங்கள் தலைவர்கள் சொல்வதனை கேட்பவர்களாகவும் கொள்கைகளை பரப்புபவர்களாகவும் இருந்தனர் .



தொண்டர்களின் பலத்தினால் தலைவர்கள் அதிகாரமிக்கவர்களாக இருந்தனர்

 

 

இன்று நிலைமை அப்படியில்லை ஸ்டாலின் , எடப்பாடி பழனிச்சாமி , விஜயகாந்த் , அன்புமணி , வைகோ ,திருமா, சீமான் , ரஜினி , கமல் , தினகரன் என அரசியல்கட்சிகளின் தலைவர்களின் பட்டியல் நீள்கிறதே தவிர , கடந்தகால தலைவர்களைப்போல பெரிய தொண்டர்படையின் ஆதரவோடு இவர்கள் இருக்கிறார்களா என்றால் சந்தேகமே .

 


 

ஊழல்வாதிகளாக கடந்த கால ஆட்சியாளர்கள்

 


கடந்தகாலத்தில் ஆட்சி செய்தவர்களில் வெகு சொற்பமான சிலரே ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் இருந்திருக்கின்றனர் . ஒருமுறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலோ அல்லது சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருந்திருந்தால் போதும் அவர்களின் மீது குறைந்தபட்சம் ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது சுமத்தப்பட்டுவிடுகிறது. எந்த கட்சியை பார்த்தாலும் அதன் மீது குற்றம் சுமத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதனால் சுத்தமானவர்கள் வந்தால் கூட மக்களால் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது இவர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என எண்ணிக்கொள்கின்றனர் .

 


 

பணநாயகம்

 


இன்று சமூக வலைதளங்களும் செய்தி நிறுவனங்களும் தேர்தலின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நிலைக்கு மக்களோடு நெருங்கி இருக்கின்றன . ஆனால் அவை பணம் புழங்குகின்ற இடமாக இருப்பதனால் நேர்மையானவர்களுக்கு அங்கே வாய்ப்புகள் கிடைப்பது இல்லை . நேர்மையானவர்களை பற்றிய விவரமே மக்களுக்கு தெரியாமல் முடக்கப்பட்டுவிடுகின்றனர் .

 

இவை அனைத்தும் நம்மை இட்டுச்செல்லும் முடிவோ “தேர்தலில் நம்பிக்கையின்மை”.

 


தேர்தல் ஆணையத்தின் அலட்சியம்

 

ஊழல் செய்தவர்களையோ அல்லது வாக்குக்கு பணம் கொடுத்தவர்களையோ அல்லது பெற்றவர்களையோ கடுமையாக தண்டிக்கும் பொறுப்பில் இருந்து தேர்தல் ஆணையம் விலகிக்கொண்டே போகிறது . இந்த அலட்சியமான போக்கு மக்களிடம் தேர்தல் குறித்த நம்பிக்கையின்மையையும் , ஊழல்வாதிகளுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிகையையும் கொடுக்கின்றது .

 


 

“தேர்தலில் நம்பிக்கையின்மை” என்பதனை மிக சாதாரணமாக எண்ணுதல் கூடாது. இன்று 10 முதல் 25 % வாக்களித்தவர்கள் இருக்கின்ற சூழலில் அதன் சதவிகிதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்கக்கூடிய தேர்தல் முறையில் நம்பிக்கையற்று போனால் அதன் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசின் மீதும் நம்பிக்கையற்று போவார்கள். “நம்பிக்கையின்மை” என்னும் கொடும்தீ ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களையும் வேரோடு சாய்த்துவிடும்.

 

அதற்க்கு முன்னால் நாம் விழித்துக்கொள்ளவேண்டியது அவசியம். தேர்தல் முறைகளில் பல மாற்றங்களை உடனே செய்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணம் செயல்படுதல் அவசியம்.

 


 

பாமரன் கருத்து
Exit mobile version