Site icon பாமரன் கருத்து

குழந்தைகளின் கல்வியில் கண்மூடித்தனமாக முதலீடு செய்வது சரியா?

பெற்றோருடன் இருக்கும் பள்ளிக்குழந்தை

பெற்றோருடன் இருக்கும் பள்ளிக்குழந்தை

2017 இல் HSBC ஆய்வின்படி, இந்தியப் பெற்றோர்கள் ஒரு பிள்ளையின் துவக்க கல்வி முதல் கல்லூரி இளங்கலை படிப்பு வரைக்கும் $18,909 (இந்திய மதிப்பில் ரூ 12.2 லட்சம்) செலவு செய்கிறார்கள். இது சராசரி மட்டுமே. 

நடுத்தர வர்க்கத்தினர் தான் குழந்தைகளின் படிப்பிற்காக வருமானத்தின் அதிகபட்ச தொகையை செலவு செய்ய துணிகிறார்கள்.

இந்தியப்பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் படிப்பிற்காக தங்களது அன்றாட வருமானம், சேமிப்பு அனைத்தையும் செலவு செய்கின்றனர். அதேபோல பிள்ளைகளின் கல்விக்காக கடன் வாங்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கணிசமாகவே அதிகம் தான். இதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது, சில பத்தாண்டுகளுக்கு முன்பு அடுப்பூதும் பெண்களுக்கு எதற்கு கல்வி என கேட்டவர்களும் கூட இன்று பெண் பிள்ளைகளையும் உயர் படிப்புகள் வரை படிக்க வைக்க நினைக்கிறார்கள். இதற்காக தங்களது தலையையும் அடமானம் வைக்க இந்தியப்பெற்றோர்கள் துணிகிறார்கள். 

 

 அப்படி செலவு செய்யத்துணிவதற்கான முக்கியக் காரணம் நன்றாக படிக்க வைத்துவிடுவது பெற்றோர்களின் கடமை என நினைக்கிறார்கள். மேலும் படித்தால் பிள்ளைகள் நம்மைப்போல கஷ்டப்பட தேவையில்லை எனவும் பெற்றோர்கள் நம்புகிறார்கள். இதில் தவறில்லை.

 

 

 இந்த முடிவிற்கு வந்தபிறகு பள்ளியை தேர்வு செய்யும் வேலைகளில் இறங்குகிறார்கள். இங்கு தான் பிரச்சனையே வருகிறது. அப்படி பள்ளியை தேர்வு செய்ய நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுக்கு தெரிந்த வட்டத்தில் இருக்கும் வருமானத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பெற்றோரின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என கவனிக்க துவங்குகிறார்கள். அந்த பள்ளி அல்லது அதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத பள்ளியில் தங்களது பிள்ளையை எப்படியேனும் சேர்த்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் வருமானத்திற்கு ஏற்ற பள்ளியில் அவர்கள் சேர்த்திருக்கிறார்கள் நாம் நமது வருமானத்திற்கு ஏற்ற பள்ளியில் சேர்ப்போம் என பெற்றோர் நினைப்பது இல்லை. இதற்கு நமது பிள்ளையும் நன்றாக வந்து விடுவான் என்ற நம்பிக்கை ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது “பெருமை” அல்லது “மரியாதை” அல்லது “கௌரவம்” என்ற உருப்பிடாத காரணங்களுக்காக இருக்கலாம். 

 

பள்ளிகளுக்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா?

உங்களுக்கு வருமானம் இருந்தால் எந்த பள்ளியில் வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம் தவறில்லை. ஆனால் பள்ளி மட்டுமே சாதனையாளர்களையும் வெற்றியாளர்களையும் உருவாக்கிவிடுவது இல்லை என்பதை தெரிந்துகொண்டு நீங்கள் பள்ளிகளுக்காக பெரும் தொகையை செலவு செய்திடுங்கள் என்பதே எனது கருத்து. மிக சாதாரணமான அரசுப்பள்ளிகளில் படித்து வந்தவர்கள் கோடிபேர் இன்று பெருமைமிகு பணிகளில் கொடிகட்டி பறக்கிறார்கள். நீங்கள் சேர்க்க துடிக்கும் பள்ளியில் படித்த அத்தனை மாணவர்களும் சாதித்து விட்டார்களா என பாருங்கள், நிச்சயமாக இருக்காது . அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் நீங்கள் விரும்புகிற சில விசயங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. நாம் உங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேருங்கள் என வக்காலத்து வாங்க நினைக்கவில்லை மாறாக பள்ளியை தேர்ந்தெடுக்கும் போது அதற்கு ஆகப்போகிற செலவையும் கருத்தில் கொள்ளுங்கள் மற்றும் பள்ளி மட்டுமே உங்களது பிள்ளைகளை சாதிக்க வைப்பதற்கு போதுமானது இல்லை என்பதை உணருங்கள்.

நான் இந்தப்பதிவில் முதலீடு என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன். வியாபாரத்தில் லாபத்தை நோக்கி செய்யப்படுவது தான் முதலீடு என்பதனை நான் அறிவேன். அதேபோல பிள்ளைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பெற்றோர்கள் செலவு செய்கிறார்கள், எதிர்கால பலனை அடிப்படையாகக்கொண்டு அல்ல என்பதையும் நான் அறிவேன். இங்கே முதலீடு என்பதற்கு செலவு செய்கின்ற தொகை என எண்ணிக்கொள்ளுங்கள்

முதலீடு சரியான முறையில் இருக்க வேண்டும்

பெற்றோர்கள் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் பிள்ளைகளின் கல்விக்காக முதலீடு செய்கிறீர்கள். அது தவறு அல்ல. நாம் பட்ட கஷ்டத்தை நமது பிள்ளை படக்கூடாது என நினைத்துதான் கூலி வேலை செய்கிறவர் கூட தனது பிள்ளையை மெட்ரிகுலேசனில் படிக்க வைக்க முயல்கிறார். தனது பிள்ளைக்கு நல்ல பள்ளியில் கல்வி கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்,தவறில்லை. ஆனால் நான் இங்கு சொல்ல வருவது வேறு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அதேபோல உலகில் பல்வேறு வகைப்பட்ட வேலைகளும் இருக்கின்றன, தொழில்களும் இருக்கின்றன. 

 

நாம் அனைத்து குழந்தைகளையும் ஒரே போட்டியில் பங்கேற்க வைக்கிறோம். அதாவது மனப்பாடம் செய்தல் என்ற ஒரு திறனை வைத்து மட்டுமே செயல்படும் பள்ளிக்கல்விக்கு நமது பிள்ளையை செலவு செய்து அனுப்புகிறோம். பணம் படைத்தவர்கள், கூடுதலாக வேறு சிறப்பு வகுப்புகளிலும் சேர்த்துவிடுகிறார்கள். சாதாரண குடும்ப பின்னனி கொண்ட மாணவர் மனப்பாடம் செய்தலில் சிறந்தவனாக இருந்தால் அவன் வெற்றி பெற்று மிகப்பெரிய அதிகாரியாக மாறுகிறான். கூலித்தொழிலாளியின் மகன் சாதனை என நாமும் சந்தோஷமடைகிறோம். ஆனால் சாதிக்காமல் விட்ட, இருந்த சேமிப்பையும் குழந்தையின் படிப்பில் போட்டுவிட்டு அதோகதியாகக்கிடக்கும் பெற்றோர்களை நாம் கவனிப்பது இல்லை. அவர்களின் எண்ணிக்கையே அதிகம். 

 

சரி, என்ன செய்யலாம்? பாடும் திறனுள்ள குழந்தையை பாட்டு வகுப்பில் சேர்ப்பது போல, கம்ப்யூட்டர் திறனுள்ளள குழந்தையை கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ப்பது போல தனது குழந்தைக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை அவர்கள் கற்றுக்கொள்ள பெற்றோர்கள் தங்களது சேமிப்புகளை செலவு செய்திட முன்வர வேண்டும். உங்களது குழந்தை மனப்பாடம் செய்வது, பாடம் படிப்பதில் கெட்டிக்காரராக இருந்தால் நிச்சயமாக CBSE பள்ளியில் சேர்க்கக்கூட செலவு செய்யலாம். காரணம் அவன் ஜெயித்து விடுவான். நீச்சலில் விருப்பம் உள்ள ஒருவனை நீச்சல் குளத்திற்கு செல்ல செலவு செய்திடாமல் CBSE பள்ளியில் சேர்க்க செலவு செய்தால் அவன் எப்படி சாதிப்பான்? கடைசி மாணவனாக வந்து நிற்பான். 

 

அரசாங்கத்தின் கடமை என்ன?

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. எதிர்காலத்தை கணிக்கக்கூடிய வல்லுநர்கள் அதிகரித்துவிட்டார்கள். அப்படி இருக்கும் போது அடுத்த 5 ஆண்டுகளில் அல்லது 10 ஆண்டுகளில் எந்த துறையில் அதிக வேலை வாய்ப்பு இருக்கும், அரசாங்கம் எந்த துறைகளில் எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்க போகிறது, எந்த துறையில் எவ்வளவு பேர் வயது மூப்பு காரணமாக போகப்போகிறார்கள் என்பது பற்றிய தெளிவான அறிக்கையை வெளியிடுவது அவசியம். அப்போது தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அதற்கு ஏற்றவாறு தயார் செய்வார்கள். 

 

இல்லையெனில் கடந்த சில ஆண்டுகளில் புற்று ஈசல் போல பொறியியல் படித்துவிட்டு வெளியே வந்து கண்ட வேலைகளையும் செய்கின்ற அவல நிலைக்கு பிள்ளைகள் தள்ளப்பட்டார்களே அந்த நிலை தான் ஏற்படும்.

 

 

பெற்றோரின் கடமை என்ன?

நல்ல பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்க நினைப்பது தவறு அல்ல. ஆனால் அடுத்தவர்களின் பார்வைக்காகவும் கௌரவத்திற்காகவும் உங்களது பிள்ளைகளை நீங்கள் சிறந்த பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என நினைத்து உங்களது வருமானம் அனைத்தையும் செலவு செய்தால் அந்த முதலீடு லாட்டரியில் போட்ட முதலீட்டை போன்றதுதான். உங்களது பிள்ளைகளின் தனித்திறமைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள், அவர்களை அதில் நிபுணத்துவம் பெற செய்திடுங்கள். ஓடுவதில் உங்கள் பிள்ளை கெட்டிக்காரன் என்றால் அரசாங்க பள்ளியில் சேர்த்துவிட்டு ஒரு நல்ல ஒட்டப்பயிற்சி மையத்தில் உங்களது பிள்ளையை சேர்த்து விடுங்கள். அதற்கு பணத்தை செலவு செய்திடுங்கள். நிச்சயமாக உங்களது பிள்ளை சாதிப்பார். 

 

கல்வியில் முதலீடு செய்வதை விடவும் பிள்ளைகளின் திறமையில் முதலீடு செய்திடுங்கள் என்பதே என கோரிக்கை. 

 

உங்களது கருத்து. 

 


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version